கம்பன் கவியமுதம்—29/வளவ. துரையன்

              

                 

உழவர் ஓதை

முள்அரை முளரி முளைஇற முந்தும் பொன்னும்
தள்ளுற மணிகள் சிந்தச் சலஞ்சலம் புலம்ப சாலில்
துள்ளிமீன் பிடிப்ப ஆமை தலைபுடை சுரிப்ப தூம்பின்
உள்வரால் ஒளிப்ப மள்ளர் உழுபகடு உரப்ப்புவாரும் [50]

[முள்அரை=முள்தன்மை பொருந்திய; சலஞ்சலம்=ஒருவகை சங்கு; சுரிப்ப=அடக்கிக் கொள்ள; தூம்பு=மதகு; பகடு=கடா]

கோசலநாட்டு உழவர்களின் செயல்கள் இப்பாடலில் காட்டப்படுகின்றன. அவர்கள் உழுகின்ற கடாக்களை அதட்டி வயலை உழுகிறார்கள். அப்போது அந்த வயலில் இருக்கும் முள் தன்மை பொருந்திய தாமரையின் வெண்ணிறமான முளைகள் முறிந்து போகின்றன. அங்குக் கிடக்கும் முத்தும் பொன்னும் ஒதுக்கித் தள்ளப்படுகின்றன. இரத்தினங்கள் சிதறிப் போகின்றன. சலஞ்சலம் என்னும் சங்குகள் வாய்விட்டு அழுகின்றன. உழுபடை சால்களிலில் மீன்கள் துள்ளிக் குதிக்கின்றன. வயலில் இருக்கும் ஆமைகள் தம் தலையையும், நான்கு கால்களையும் தம் ஓட்டுக்குள் சுருக்கிக் கொள்கின்றன. வரால் மீன்கள் எல்லாம் மதகுகளில் சென்று ஒளிந்து கொள்கின்றன.

இப்பாடலில் அந்நாட்டு வளத்தை மிகவும் உயர்த்தும் உயர்வு நவிற்சி அணி பயின்று வருவதாகக் கொள்ளலாம்.