எல்லா புத்தக கண்காட்சியிலும் / புத்தகத் திருவிழாவிலும் மறக்காமல் யுவகிருஷ்ணாவுடன் சேர்ந்து ஒரு செயலை மேற்கொள்வது வழக்கம். அதில் முதன்மையானது வெகுஜன நாவல்களை விற்கும் ஸ்டால்கள் அனைத்துக்குள்ளும் நுழைவது. ஒவ்வொரு நாவலாக எடுத்து அது எப்போது பிரசுரம் ஆனது / இது எந்த பதிப்பு என்று பார்ப்பது.
ஒவ்வொரு முறையும் அதிர்ச்சியும் ஆனந்தமும் ஒருசேர எழக் கூடிய புள்ளிவிபரங்கள் கிடைக்கும். முகநூலுக்கு அப்பாற்பட்டு ஓர் உலகம் இயங்கி வருவதை அது உணர்த்தும்.
அந்தவகையில் இம்முறை கிடைத்த ஆச்சர்யம், வெகுஜன பெண் எழுத்தாளர்களின் நாவல் வரிசை.
பலரது பெயர்களை இதற்கு முன் கேள்விப்படாதது குறித்து இருவரும் வருந்தினோம். ஒவ்வொருவரும் தலா ஏழு நாவல்களையாவது பிரசுரித்திருக்கிறார்கள். எல்லா நாவல்களின் தலைப்புமே சினிமா காதல் பாடல்களின் வரியை கொண்டிருந்தன.
கைக்கு வந்த ஒரு நாவலை எடுத்து ஏதோ ஒரு பக்கத்தை புரட்டி யுவகிருஷ்ணா படித்தார்.
சட்டென்று கண்கள் மின்ன… ‘இங்க வாங்க…‘ என அருகில் அழைத்து பிரமாதமான மாடுலேஷனில், ஏற்ற இறக்கத்துடன், தேவையான இடங்களில் ஸ்பேஸ் (அமைதி) விட்டு அதில் இருந்த உரையாடலை படித்தார்.
இருவரின் கண் முன்னாலும் மெகா சீரியல் காட்சி விரிந்தது.
சின்னத்திரையும், வெகுஜன எழுத்துக்களும் சேரும் புள்ளி இருவரையுமே யோசிக்க வைத்தது.
வெகுஜன இலக்கியம் / சிறுபத்திரிகை இலக்கியம் என கறாராக கல்கியும், புதுமைப்பித்தனும் பிரிந்த காலம் முதல் தொடர்ச்சியாக தீவிர இலக்கிய பரப்பில் இயங்குபவர்கள் வெகுஜன எழுத்தாளர்களை விமர்சித்து வந்திருக்கிறார்கள்.
கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம், ஒவ்வொரு வெகுஜன எழுத்தாளரையும் முழுமையாக படித்துவிட்டு, அந்தப் படைப்பில் இருக்கும் பிற்போக்கு அம்சங்களையும், அவை சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்தும், அவை வெற்றிப் பெறுவதன் பின்னணியில் இருக்கும் அரசியல் பற்றியும் விரிவாக எழுதினார்கள் என்பதுதான்.
மாத நாவல்கள் குறித்து அ.மார்க்ஸ், கோ.கேசவன் ஆகியோர் எழுதிய கட்டுரைகள் இதற்கு நல்ல உதாரணம்.
ஆரோக்கியமான இந்த போக்கு 1990க்கு பின் குறைய ஆரம்பித்து, 2000க்கு பின் சுத்தமாக இல்லாமலேயே போய்விட்டது.
இப்போது தீவிர இலக்கியத்தில் புழங்குபவர்கள், சிறுபத்திரிகை இலக்கியங்களைக் கூட முழுமையாகப் படிக்கிறார்களா என்பது சந்தேகமே.
அப்படியிருக்க வெகுஜன படைப்புகள் குறித்த விமர்சனங்களை எதிர்பார்ப்பது தவறுதான்.
என்றாலும் முகநூலில் உச்சரிக்கப்பட்டு வரும் சிறுபான்மை இலக்கியத்துக்கு அப்பால் –
வேறொரு உலகம் இயங்குகிறது. இன்றைய வெகுஜன வார / மாத பத்திரிகைகள் கூட நுழையாத தளம் அது.
அங்குதான் பெரும்பான்மையான எழுத்தாளர்களும், வாசகர்களும் புழங்குகிறார்கள்.
எழுத வந்திருக்கும் / எழுதிக் கொண்டிருக்கும் பெண் எழுத்தாளர்களில் 95% சிறு நகரங்களை சேர்ந்தவர்கள், சென்னையில் வசிக்காதவர்கள்.
இவர்களை கருத்தில் கொள்ளாமல், இவர்கள் எழுத்தில் உருவாக்கும் உலகை ஆராயாமல் –
தமிழ்ச் சூழலில் எந்த வகையான மாற்றத்தை உண்டாக்க முடியும் என்று தெரியவில்லை.
எங்கள் இருவருக்கும் பொதுவான நண்பர் ஒருவர் ஸ்டால் போட்டிருக்கிறார். தமிழ் தேசியம் சார்ந்து தீவிரமான கருத்துக்களை கொண்டிருப்பவர்.
அவரது ஸ்டாலில் வெகுஜன நூல்கள்தான் அதிகளவு விற்பனை ஆகின்றன. புத்தகத் திருவிழா தொடங்கிய நான்காவது நாளே ‘பிரேக் ஈவன்‘ செய்துவிட்டதாக தெரிவித்தார்.
நிஜம் இதுதான்.
இந்த ‘பொங்கல் புத்தகத் திருவிழா‘ நாளையுடன் (ஜனவரி 26, 2016) நிறைவுபெறுகிறது.
நிச்சயம் ‘இந்த இந்த நூல் அதிகம் விற்றது‘ என ஒரு பட்டியலை பலரும் வெளியிடுவார்கள்.
அவை அனைத்திலும் வெகுஜன நாவல்கள் அல்லது புத்தகங்கள் இடம்பெற்றிருக்காது.
ஆனால், அவைதான் நூற்றுக்கணக்கில் (ஆமாம். நூற்றுக்கணக்கில்தான்) விற்பனை ஆகியிருக்கும். சமையல், ஜோதிடம் சார்ந்த நூல்களை இங்கு குறிப்பிடவில்லை. கதை / நாவல்களைத்தான் கவனப்படுத்துகிறோம்.
உதாரணத்துக்கு –
‘மாலை முரசு‘ சார்பில் வெளிவரும் ‘தேவியின் கண்மணி‘ மாதம் இருமுறை பத்திரிகை.
புதியப் புதிய பெண் எழுத்தாளர்களை உருவாக்கியதில் இந்த இதழுக்கு பங்குண்டு. குறிப்பாக இந்தப் பத்திரிகையை கவனித்துக் கொள்ளும் ஜேம்ஸ் என்பவருக்கு. தேடித் தேடி இவர்தான் பல வாசகிகளை எழுத்தாளராக உயர்த்தியிருக்கிறார், உருவாக்கியும் வருகிறார்.
1989 முதல் இந்த மாத நாவல் வெளிவருகிறது. (இப்போதுதான் அது மாதம் இருமுறை).
2015ல் 1989ல் ‘தேவியின் கண்மணி‘யில் வெளியான நாவல்கள் அனைத்தையும் அதே மாருதியின் அட்டைப்பட ஓவியத்துடன் தனி நூலாக கொண்டு வந்திருக்கிறார்கள்.
புத்தகத் திருவிழாவில் இந்த நூலும் ஹாட் சேல்.
இந்த எதார்த்தத்தை கவனத்தில் கொள்ளாமல்; சேனம் கட்டிய குதிரை போல் தலைத்தெறிக்க இலக்கின்றி ஓடிக் கொண்டிருக்கிறோம்.
உண்மையில் தமிழ்ச் சமூகத்தின் இன்றைய வெளி –
நாம் பார்க்காத / பார்க்க விரும்பாத இடத்தில்தான் விரிந்திருக்கிறது.
- 2016ல் எழுதியது… மீள்

Very True