இனிக்கும் தமிழ் – 91/- டி வி ராதாகிருஷ்ணன்

விவேக சிந்தாமணி

பொருள் கிடைப்பது கடினம். கிடைத்த பொருளை என்ன செய்ய வேண்டும் ? விவேக
சிந்தாமணி சொல்வது என்ன?

பாடல்

பொருட்பாலை விரும்புவார்கள் காமப்பாலிடை மூழ்கிப் புறள்வர்கீர்த்தி
யருட்பாலர் மறப்பாலைக் கனவிலுமே விரும்பார்க ளறிவொன்றில்லார்
குருப்பாலர்க் கடவுளர்பால் வேதியர்பால்பு ரவலர்பால் கொடுக்கக் கோரார்
செருப்பாலே யடிப்பவர்க்கு விருப்பாலே கோடி செம்பொன் சேவித்தீவார்.

பொருள்
பொருட்பாலை விரும்புவார்கள் = பொருள் சேர்ப்பதை விரும்புவார்கள்
காமப்பாலிடை மூழ்கிப் = காமத்தில் மூழ்கி
புறள்வர் = புரளுவார்கள்

கீர்த்தி = புகழ்
யருட்பாலர்= அருள்தரும்
அறப்பாலைக் = அறச் செயல்களை
கனவிலுமே = கனவில் கூட
விரும்பார்கள் = விரும்ப மாட்டார்கள்
அறிவொன்றில்லார் = அறிவில்லாதவர்கள்
குருப்பாலர்க் = நல்ல குருமார்களிடம்
கடவுளர்பால் = கடவுளிடம்
வேதியர்பால் = வேதியர்களிடம்
புரவலர்பால் = அரசனிடம்
கொடுக்கக் கோரார் = கொடுக்க நினைக்க மாட்டார்கள்
செருப்பாலே யடிப்பவர்க்கு = செருப்பால் அடிப்பவர்க்கு
விருப்பாலே = விருப்பமுடன்
கோடி = கோடி
செம்பொன் = உயர்ந்த பொன்னை
சேவித்தீவார் = வணங்கி தருவார்கள்

பணம் இருந்தால் , குருவிடம் தருவது என்றால் , வித்தை கற்றுக் கொள்ள
பணத்தை செலவிட வேண்டும். .அடுத்து, கடவுளுக்கு தர வேண்டும்.
கடவுளுக்கு தருவது என்றால் ,. தர்ம
காரியங்களுக்கு செலவிட வேண்டும்.எனலாம்/
அடுத்து, வேதியற்கு. உயர்ந்த வேதங்கள், தேவாரம்,திருவாசகம், பிரபந்தம்
போன்றவை யாரும் வாசிக்காமல் , பாடாமல் நாளடைவில் தேய்ந்து நலிந்து
போகும். அவை வழக்கொழிந்து போனால் மிகப் பெரிய நட்டம் நமக்கும் நம்
வருங்கால சந்ததிக்கும். அவை அப்படி அழியாமல் இருக்க வேண்டும் என்றால் ,
வேதியர்களை போற்றி, அவர்களுக்கு பொருள் கொடுத்து காக்க வேண்டும்.

அரசனிடம் கொடுப்பது என்றால் அரசு வரியை ஒழுங்காக செலுத்த வேண்டும் எனக் கொள்வோம்.

இப்படி எல்லாம் செய்யாமல் , கேளிக்கைகளில், மது, மாது என்று தீய வழிகளில்
பணத்தை செலவிட்டால், பின் தீயவர்கள் சகவாசம் ஏற்பட்டு, அவர்கள் நம்
பணத்தை நம்மிடம் இருந்து நம்மை துன்பப் படுத்தி பிடுங்கிக் கொள்வார்கள்.

(சம்பாதிப்பது மட்டும் அல்ல , சரியான வழியில் செலவழிப்பதும் ஒரு கலை.)