
”சீய்த்து”
”பண்டைநா ளாலே நின்திரு அருளும்
பங்கயத் தாள்திரு அருளும்
கொண்டுநின் கோயில் சீய்த்துப்பல் படிகால்
குடிகுடி வழிவந்து ஆள்செய்யும்
தொண்ட ரோர்க்கு அருளிச் சோதிவாய் திறந்துஉன்
தாமரைக் கண்களால் நோக்காய்
தெண்திரைப் பொருநல் தண்பணை சூழ்ந்த
திருப்புளிங் குடிக்கிடந் தானே!” [9-2-1]
திருப்புளிங்குடி என்னும் திவ்ய தேசத்தை நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்கையில் அருளிச்செய்த பாசுரம் இதுவாகும்.
தெளிந்த அலைகள் வீழுகின்ற தாமிரபரணி ஆற்றங்கரையில் வயல்களால் சூழப்பட்ட திவ்யதேசமான திருப்புளியங்குடி என ஆழ்வார் அத்தலத்தைப் புனைந்துரைக்கிறார்.
அங்கு எழுந்தருளி உள்ள பெருமாளிடம், ”பெருமாளே! நாங்கள் பண்டைக் காலம் தொட்டே தங்கள் திருவருளையும், தாமரை மலரில் குடிகொண்டுள்ள பிராட்டியின் திருவருளையும் பெற்றுள்ளோம். அதனால்தான் நின் திருக்கோயிலில் பலவகையான கைங்கர்யங்களைச் செய்து வரும் பாக்கியத்தைப் பரம்பரையாகப் பெற்றோம். அதிலும் அலகிடுதல் [சீய்த்தல்] முதலான கைங்கர்யம் எங்களுக்கு வாய்த்தது. இப்படிப்பட்ட அடியார்களாகிய எம்மை நீ உன் சோதிவாய் திறந்து பேசி அருள் செய்ய வேண்டும்” என நம்மாழ்வார் வேண்டுகிறார்.
இப்பாசுரத்தில் உள்ள ‘சீய்த்தல்’ என்பது அருமையான தமிழ்ச்சொல்லாகும். ஓரிடத்தில் உள்ளவற்றை அகற்றுதல் என்பது இதன் பொதுவான பொருளாகும். கோழி குப்பையைத் தன் காலால் சீய்த்து தேவையற்றவற்றை அகற்றி இரையைத் தேடிக்கொள்ளும். வைணவ மரபில் திருக்கோயிலைப் பெருக்கிச் சுத்தம் செய்தலை அலகிடுதல் என்பர்.
‘கோயில் சீய்த்து” என்பதற்கு வியாக்கியானம் செய்யும் நம்பிள்ளை ஒரு நிகழ்ச்சியை எடுத்துக்காட்டுகிறார். திருக்கண்ணமங்கை என்னும் திவ்யதேசத்தில் திருக்கண்ண மங்கையாண்டான் என்னும் வைணவ அடியவர் அத்தலத்தின் திருக்கோயிலில் அலகிட்டுக்கொண்டிருந்தார். ஒரு மகிழ மரத்தின் அடியில் விழுந்து கிடந்த காய்ந்த சருகுகளை அவர் அகற்றிக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த ஒருவர், “பெருமாளை நாம் எந்தப் பயன் கருதியும் வழிபடலாகாது; அவரே உபாயம் என்றெல்லாம் தாங்கள் உரைத்து வருகிறீர்கள்; இப்போது சிரமப்பட்டுத் தாங்கள் புரியும் இச்செயலுக்குப் பயன் யாது? ஏன் கோயிலைச் சீய்க்கும் கைங்கர்யம் செய்கிறீர்கள்” என்று கேட்டாராம்.
அதற்குத் திருக்கண்ண மங்கையாண்டான் தான் பெருக்கிச் சுத்தம் செய்த இடத்தையும், இன்னும் பெருக்கப்படாத தூய்மையற்ற இடத்தையும் காட்டி, “இதுதான் பயன்” என்று உரைத்தாராம்.
இவ்வாறு பெருமான் எழுந்தருளி உள்ள ஆலயம் தூய்மையாய் இருப்பதே தம் கைங்கர்யத்தின் பயன் ஆகும். தாம் வேறொன்றும் எதிர்பார்க்கவில்லை என்பதை அவர் மறைமுகமாக உணர்த்தி விட்டார் என்று உணர முடிகிறது.
