இகல் ஷில்லெட்டின் யுத்தம்/ஒரு சோமாலிய கதை

தமிழில் : அதங்கோடு அனிஷ்குமார்

சோமாலிய நாட்டின் ஹர்கெய்ஷா என்னும் பழைய நகரத்துக்கு அருகில் இஷா பழங்குடி இனத்தவரான இகல் ஷில்லெட் என்றொருவர் வாழ்ந்து வந்தார். 
இஷா பழங்குடியின வீரர்களுக்கும் ஹவேய்ய பழங்குடியின வீரர்களுக்கும் இடையே யுத்தம் மூண்டது.  இஷா இன மக்கள் யுத்தத்திற்குத் தயாரானார்கள்.  அவர்கள் தங்களது ஈட்டிகளையும், கத்திகளையும் எடுத்துக் கொண்டு எதிரிகளை சந்திக்க குதிரைகளில் விரைந்தார்கள்.  
இகல் ஷில்லெட் தன் மனைவியிடம் "என்னுடைய காலணிகளை கொண்டுவா" எனக் கத்தினார்.  அவள் அவரது காலணிகளை கொண்டு வந்து கொடுத்தாள். 
பிற இஷா பழங்குடியினர் போருக்கு விரைவதை இகல் ஷில்லெட் பார்த்தார்.  அவர் தன் மனைவியிடம "குதிரை மீது சேணத்தைக் கட்டு" என கத்தினார்.  அவள் குதிரை மீது சேணத்தைக் கட்டினாள். 
இகல் ஷில்லெட் பாடினார் ,  
ஈயா! நான் போருக்குப் போகிறேன் 
ஈயா! நான் போருக்குப் போகிறேன் 
நான் எதிரிகளை சிதறடிப்பேன் 
அவர்கள் ஒரு பயங்கரத்தைப் பார்ப்பார்கள்  
அவர்களுக்கு இறப்பை பரிசளிப்பேன்

மீண்டும் அவர் பார்த்தார். இஷா ஆண்கள் இன்னும் போருக்குச் சென்று கொண்டு தான் இருந்தார்கள். அவர் தன் மனைவியிடம் ” நான் குதிரையில் ஏற உதவு” எனக் கேட்டார். அவளும் உதவினாள்.
ஒரு மலைக்குன்றில் இஷா வீரர்கள் தங்கள் எதிரிகளைச் சந்தித்தார்கள். ‘என் கத்தியைக் கொடு’ எனக் கேட்டார். அவள் கத்தியை எடுத்துக் கொடுத்தாள்.
‘என் யானைக் கேடயத்தைக் கொடு’ எனக் கேட்டார். அவள் எடுத்துக் கொடுத்தாள்.
அவர் ‘எனது ஈட்iயைக் கொடு’ எனக் கேட்டார். அவள் ஈட்டியை எடுத்துக் கொடுத்தாள்.
இஷா ஆண்கள் இன்னும் போரிட்டபடியே தான் இருந்தார்கள். அவர் தன் சேணத்தில் ஏறி அமர்ந்தார். பிறகு “எனக்கு இன்னொரு ஈட்டியைக் கொடு’ எனக் கேட்டார். அவள் இன்னொரு ஈட்டியை எடுத்துக் கொடுத்துவிட்டுக் கேட்டாள் ‘நீங்கள் தயாரா’?
இகல் ஷெல்லட் ‘ஆம், நான் தயார் தான்’ என்றபடி அவர் பாடினார்,
ஈயா! நான் போருக்குப் போகிறேன்
ஈயா! நான் போருக்குப் போகிறேன்
நான் எதிரிகளை சிதறடிப்பேன்
அவர்கள் ஒரு பயங்கரத்தைப் பார்ப்பார்கள்
அவர்களுக்கு இறப்பை பரிசளிப்பேன்
மலைக்குன்றின் மீது யுத்தம் மிகத் தீவிரமாக நடந்து கொண்டிருந்ததை இகல் ஷில்லெட் கண்டார்.
‘எனக்கு இன்னொரு ஈட்யைக் கொடு’ எனக் கேட்டார். அவள் இன்னொரு ஈட்டியைக் கொடுத்தாள், அவர் ‘நான் தயாராகிவிட்டேன், நான் மலைக்குன்றிலிருந்து திரும்பாவிட்டால் எப்படி ஹவேய்ய நாய்களை நான் பறக்கவிட்டேன் என்பதை மட்டும் நீ நினைவில் கொள்ள வேண்டும்’ என கர்ஜித்தார்.
அவர் சேணத்தில் அமர்ந்து கொண்டு ‘எனக்கு இன்னுமொரு ஈட்டி கொடு’ எனக் கேட்டார்.
‘இதற்கு மேல் கொடுப்பதற்கு ஈட்டி இல்லை’ என அவர் மனைவி பதிலளித்தாள்.
அவர் தன் கண்களை மூடினார்.
‘நான் விடை பெறுகிறேன்’ என்றார். பின் கண்களைத் திறந்து அவளிடம் ‘என் குதிரைக்கு உணவளித்தாயா?’ எனக் கேட்டார்.
‘உங்கள் குதிரைக்கு உணவளித்தாகிவிட்டது’
‘தண்ணீர் குடித்துவிட்டதா?’
‘ஆமாம், அது தண்ணீர் குடித்துவிட்டது’
‘நல்லது, நான் தயாராகிவிட்டேன், இனி அவை எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளும். ‘
இகல் ஷில்லெட் பாய்ந்து போனார். யுத்தம் அவர் பயணிக்கும் திசையில் நடந்து கொண்டிருந்தது. ஆனால் அவரது குதிரையோ பள்ளத்தாக்கு நோக்கி திரும்பியது.
‘பள்ளத்தாக்கிற்குப் போகாதே! மலைக்குன்றிற்குச் செல்’ என கட்டளையிட்டார். ஆனால் குதிரை பள்ளத்தாக்கை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
‘ஏ! நான் என் எதிரிகளை சிதறடிக்க விரும்பும்போது நீ ஏன் சந்தைக்குப் போகிறாய்’ என இகல் ஷில்லெட் கத்தினார்.
குதிரை அதன் வழியில் சென்று கொண்டிருந்தது.
‘ஏ! சாத்தானே! திரும்பு, என் எதிரிகள் எனது ஆயுதங்களின் கூர்மையை உணரட்டும்’ என சத்தமிட்டார். ஆனால் குதிரை திரும்பவே இல்லை. அதன் வழியிலே இகல் ஷில்லெட் சென்று கொண்டிருந்தார். மலையிலிருந்து கீழிறங்கி வந்து கொண்டிருந்த இஷா இனத்தவன் ‘என்ன விஷயம்’ எனக் கேட்டான்.
‘என்னுடைய எதற்கும் லாயக்கற்ற குதிரை நான் சொல்வதை கவனிக்க மாட்டேன் என்கிறது என்னால் அதைக் கட்டுப்படுத்த முடியவில்லை’ என்றார்.
அவனோ, ‘நீ இப்படி செய்’ எனக் கூறியபடி, குதிரையின் கடிவாளத்தைப் பிடித்து லேசாக இழுத்தான். குதிரை திரும்பி மலைக்குன்று நோக்கி பயணப்பட்டது.
‘ஆ! இப்போது நீ தயாராகிவிட்டாய். ஒரு காலத்தில் நீ ஒரு முரடனாய் இருந்தபோது எப்படி ஓடினாயோ அப்படியே ஓடு. எதிரிகளின் உடல்கள் அச்சத்தால் உறைய வேண்டும். குதிரை மெதுவாக நடக்க ஆரம்பித்தது. இகல் பாடினார்,
ஈயா! நான் போருக்குப் போகிறேன்
ஈயா! நான் போருக்குப் போகிறேன்
நான் அவர்களை பறக்க விடுவேன்
அவர்களின் ரத்தத்தை குளிர வைப்பேன்
காற்றுக்கு முன்னால் அவர்களை ஓட வைப்பேன்
அவர் யுத்தக் களத்தை நெருங்கும் போது ஆயுதங்கள் ஒன்றோடு ஒன்று மோதும் சத்தம் மிகவும் அருகில் கேட்டது.
‘நான் கீழே நின்று அவர்களை முறியடிப்பேன்’ என்று கூறியபடி தவழ்ந்தவாறு குதிரைக்கு அடியில் தன் கத்திகளையும், ஈட்டிகளையும் கேடயத்தையும் பிடித்தபடி நின்றார். அவர் குதிரைய கெட்டியாகப் பிடித்தபடி நின்றபோது தன்னை வேகமாக பற்றுவதை விரும்பாத குதிரை, கிராமம் நோக்கித் திரும்பியது. வீட்டு வாசலுக்கு குதிரையோடு வந்த இகல் தனது ஆயுதங்களால் ஒலி எழுப்பியபடி கரகரப்பான குரலில் பாடினார்.
ஈயா! அவர்கள் ஓடட்டும்! நான் இங்கேய நிற்பேன்
ஈயா! அவர்கள் ஓடட்டும்! நான் இங்கேயே நிற்பேன்
நான் இங்கே குதிரைக்கடியில் நின்றபடி அவர்களை தோற்கடிப்பேன்
‘குதிரைக்கடியில் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்’ என அவர் மனைவி கேட்டாள்.
‘ஆ! இந்த சாத்தான் (குதிரை) என்னை காட்டிக் கொடுக்கிறது’ நான் ஒரு விலங்கைப் போல தரையில் நின்றபடி தான் போரிட வேண்டுமென குதிரைக்கு அடியிலிருந்து உன்னிப்பாக வெளியே பார்த்தபடி கூறினார்.
‘போர் முடிவுக்கு வந்துவிட்து’ என அவர் மனைவி கூறினார்.
கிராமம் நோக்கி வீரர்கள் கூட்டம் கூட்டமாக திரும்பிச் சென்று கொண்டிருப்பதை அவர் பார்த்தார்.
‘நாம் தோற்றுவிட்டோம், ஹவேய்ய காரர்கள் நம்மை வென்றுவிட்டார்கள்’ இகல் கத்தினார்.
வீட்டிற்குள் நுழைந்து படுக்கை விரிப்பின் மேல் படுத்தார். ‘அவர்கள் வந்தால் நேற்றைக்கே நான் இறந்துவிட்டேன் எனச் சொல்லிவிடு’ எனக் கூறியபடி கண்களை மூடினார்.
குதிரை வீரர்கள் கிராமத்திற்குள் வந்தார்கள். இகலின் மனைவி கைகளை பிசைந்தபடி சத்தமிட்டு அழுதாள். குதிரையைவிட்டு கீழிறங்கிய இஷா இன போர் வீரர்கள் வீட்டிற்குள் நுழைந்தார்கள்.
‘என்ன நடந்தது’ என அவர்களில் ஒருவன் கேட்டான்.
‘ஐயோ! அவர் நேற்றைக்கே இறந்து விட்டார்’ எனக் கூறினாள்.
‘ஹவேய்யக்காரர்கள் தப்பித்து ஓடிவிட்டார்கள்’ என வந்திருந்த இஷா போராளிகள் கூறினார்கள். இகல் ஷில்லெட் எழுந்து உட்கார்ந்தார்.
‘என் ஈட்டியைக் கொடு, என் கேடயத்தைக் கொடு, என் குதிரைக்கு சேணம் பூட்டு, நான் குதிரையேற எனக்கு உதவு’ எனக் கட்டளையிட்டார்.
‘யுத்தம் முடிந்துவிட்டது’ என அந்த மனிதர்கள் கூறினார்கள்.
‘ஓ! நான் ஏமாற்றப்பட்டுவிட்டேன்’ என இகல் அழுதார். அவர் பாடினார்.
ஈயா! ஹவேய்யகாரர்கள் இறந்தார்கள்
இறப்பில் அவர்களுக்கு அதிர்ஷடம் வந்தது
என் ஈட்டியின் ஒளியைப் பார்க்காமல் போனார்கள்
பயமென்பதை உணராமல் போனார்கள்

இகல் ஷில்லெட்டின் யுத்தம்/ஒரு சோமாலிய கதை