நாடின் கோர்டிமெரின் (Nadine Gordimer) சிறுகதை நகரத்து காதலர்கள் (City Lovers) – எம்.டி.முத்துக்குமாரசாமி

மொழிக்குள் அடங்காத உடல்களின் இச்சைகளையும் அவற்றின் கூடல்களையும் தன் கதையாடல்களின் வழி சொன்னவர் நாடின் கோர்டிமெர். அதற்கு ஒரு நல்ல உதாரணம் கோர்டிமெரின் நகரத்து காதலர்கள் கதை. தென்னாப்பிரிக்காவில் நிறவெறி உச்சத்தில் இருந்தபோது, வெள்ளையர்களுக்கும் கறுப்பினத்தவருக்கும் இடையேயான உறவுகள் சட்டவிரோதமாக இருந்த காலத்தில் கறுப்பின பெண்ணுக்கும் வெள்ளையன் ஒருவனுக்கும் இடையேயுள்ள உறவை இந்தக் கதை சித்தரிக்கிறது. அவர்களுக்கு இடையிலான உரையாடல்களில் அவர்களுடைய உலகம் முற்றிலும் வேறுபட்டதாக இருப்பது தெரிகிறது. ஆனால் உடலிச்சையோடு வெவ்வேறு எதிர்பார்ப்புகளோடு அவர்கள் ஒருவரை ஒருவர் நேசிக்கிறார்கள். ஒரு நாள் அவனுடைய வீட்டில் போலீஸ் நுழைந்து இருவரையும் பிடித்து (அவள் அவனுடைய பீரோவில் ஒளிந்துகொண்டிருக்கிறாள்) விசாரணைக்கு அழைத்து செல்கிறது. போலீஸ் அதிகாரிகள் அவளை பரிசோதிக்கும் டாக்டர் எல்லோரும் அவர்களை கௌரவமாகவே நடத்துகிறார்கள். கோர்ட்டில் அவர்களுக்கிடையே உடலுறவு நடந்தது என்பதை நிரூபிக்க முடியாததால் வழக்கு தள்ளுபடியாகிவிடுகிறது. அவளுடைய தாய் மறுநாள் செய்தித்தாள்களில் வெள்ளையர் வீடுகளுக்கு கறுப்பின பெண்கள் வேலைக்குச் செல்லக்கூடாது என பேட்டி அளிப்பதோடு கதை முடிகிறது. கோர்டிமெரின் சித்தரிப்புகளின் உடலுறவு இருக்கிறது ஆனால் காமத்தின் தெறிப்பு இல்லை. வெவ்வேறு உலகங்களுக்குள் சிக்குண்டிருக்கும் உடல்கள் இச்சைகளினால் இணைகின்றன என்ற கோர்டிமரின் கதைசொல்லல் அபூர்வமானது.