“சிட்டுக் குருவி சொன்ன கதை”/(மீ.விசுவநாதன்)


குழந்தையின் கையில்
கூர்முனைக் கத்தி
தாய் பதருகிறாள்

பித்தனின் கையில்
திருப்பாச்சி அருவாள்
தெருவே அலறுகிறது

திருடனின் கையில்
சாவிக் கொத்து
உலகம் சுற்றும் வாலிபனாய்
சாமி சிலைகள்

கல்விச் சாலைகளில்
காமனும், மதமும்
கைகோர்த்து நின்று
அறத்தைத் துரத்துகிறது

புதியபுதிய கண்டுபிடிப்புகள்
கொள்ளை அடிக்க
விஞ்ஞானியே திகைக்கிறான்

பொய்களைச் சொல்லி
குற்றத்தை
மடைமாற்றிப் பிழைக்கும்
வாக்கு வங்கி மேலாளர்கள்

இடிக்கப் பட்டுக் கிடக்கும்
கோவில் கருங்கற் சிலைகளின்
கருணை மூச்சு மட்டும்
இன்னும் உயிர்ப்புடன்
தன்னை
அழிக்க வருபவனுக்கு
அருளக் காத்திருக்கிறது.

சோறு வைப்பது போல
பாசாங்கு செய்து
பறவைகளை ஏய்த்துப் பிடிக்கிரான்

பண போதைக்கும்
புகழ்ப் போதைக்கும்
பலியாகிக் கிடக்கிற
இன்றைய மனித உலகில்
நீதான்
கவனாமாக இருக்க வேண்டும்
என்று
சிட்டுக் குருவி ஒன்று
தன்
குஞ்சுகளுக்கு நீதிக்கதை சொல்லி
விழிப்படைய வைத்தது.