எழுபத்தாறு வயதில் அம்மா ஞாபகம் வரக் கூடாதா?/வண்ணதாசன்

எழுபத்தாறு வயதில் அம்மா ஞாபகம் வரக் கூடாதா?


ஞாபகத்துக்கே வயதுக் கணக்கு கிடையாது. அப்புறம் அம்மா ஞாபகத்திற்கு எப்படி?

மத்தியானச் சாப்பாட்டிற்கு உட்காரும் போது ஒரு மின்னலின் பளிச் போல் அம்மா நினைவுக்கு வந்தாள். வெந்த சாதத்தின் ஆவியோ, குழம்பின் அல்லது துணைக் கறியின் வாசனையோ எதுவோ ஒன்றில் வந்துவிட்டாள். தம்ளர் தண்ணீரைப் பார்த்துக்கொண்டே கல் மாதிரி உட்கார்ந்திருக்கிறேன். தம்ளர் தண்ணீரில் விளிம்பு வரை தளும்பத் தளும்ப அவள்.

என்னேரமும் சாப்பிடுகிற ஓவல் வடிவத் தட்டு. அம்மா அதைக் கோழிமுட்டை சைஸ் என்பாள். ஒருநாள் கூட அவள் ஒரு கோழிமுட்டையைக் கையில் வைத்துப் பார்த்திருக்கமாட்டாள். ஆனால் அந்தத் தட்டுக்கு அதுதான் அடையாளம். இப்படித்தான் ஒன்றைச் சொல்ல வேண்டும் என்று கட்டாயமா? அவரவருக்குச் சொல்ல அவரவரிடம் ஒரு சொல். எல்லா அம்மாவும் அப்படி ஒரு சொற் களஞ்சியம்.

‘என்ன புக் படிச்சிட்டு எந்திரிச்சுச் சாப்பிட வந்தீங்க?’ இது கேள்வி. ‘ என்ன யோசனை?’ என்பதை இப்படியும் கேட்கலாம் தானே. கேட்டுக்கொண்டே , முன்னால் நான் வைத்திருந்த தட்டை எடுத்து, அதில் தங்கியிருந்த தண்ணீரை ஒரு சுழற்றில், கழுவு தொட்டியில் விசிறி, என் முன் மறுபடி வைக்கிறது பரிமாறும் கை.

சாப்பாட்டுத் தட்டு உலோகம். வைக்கிற இடம் கருங்கல் தகடு. கணங் என்கிறது. கணங் இல்லை. இது வேறு ஒரு கிணுங். தட்டை அம்மா வைக்கும் போது உண்டாகிற அதே சப்தம். சப்த ரூபமாக விரிந்துவிட்ட அம்மா ஞாபகத்தில் எனக்குத் தொண்டை அடைக்கிறது. சாப்பிட ஓடவில்லை.

சாப்பிடும் போது என்ன, அம்மா எப்போது வேண்டுமானாலும் வரலாம் போகலாம். அது அவள் இஷ்டம். அவள் பிரியம்.

ஆனால் நான் ஒன்று செய்யாமல் இருந்திருக்க வேண்டும். சாப்பிட வருவதற்கு முந்திய நிமிடம் வரை, லா.ச.ரா எழுதியதையோ, லா.ச.ரா வைப் பற்றி எழுதியதையோ நான் படித்துக்கொண்டு இருந்திருக்கக் கூடாது

2 Comments on “எழுபத்தாறு வயதில் அம்மா ஞாபகம் வரக் கூடாதா?/வண்ணதாசன்”

Comments are closed.