பால் வாசம்/நா. விச்வநாதன்

அம்மாவிற்குப்
பாலில் தண்ணீர்
அதிகம் கலப்பதாகத்
தங்கம்மாவோடு
தினமும் சண்டை.
குடிகாரனென் பதற்காகக்
கணவனை ஒதுக்கி
வாழும்
அவளின் அதர்மம்
அம்மாவிற்குப்
பிடித்தமாயில்லை
பாப்பார சாதிபற்றியும்
அதன் புத்தி பற்றியும்
ஓரு பாட்டம்
புலம்பித் தீர்த்துவிட்டு
எனக்கும் குட்டித்தம்பிக்கும்
சின்னக்குவளை முகந்து
இரண்டுவாய் புகட்டி
நெட்டி முறித்துப்போகும்
தங்கம்மா.
பால் வேண்டாமெனப்
பொய்யாய்
அம்மா மறுத்த
நாட்களிலும்
தலைச்சுமை இறக்கி
எங்களைத் தொட்டுத்
தழுவுவது புரியும்.
ஒருதடவை
மூக்கொழுக நிற்கும்
என்னை இழுத்து
புடவைத் தலைப்பால்
அழுந்தத் துடைத்து
முத்தமிட்டது நினைவில்
இருக்கிறது.
புடைவையிலிருந்து
பால்வாசம்.
திண்ணையை இடித்து
வீட்டை மாற்றிக்
கட்டியபோது
தங்கம்மா வைத்த
கணக்குப் புள்ளிகளும்
காணாமல் போயிருந்தன.
இருட்டுப் பிரியும்முன்
முகமற்று யாரோ
அலட்சியமாய்த்
தூக்கி யெறியும்
பால் பாக்கெட்டை
எடுத்து வைக்க
எவரும் அவசரம்
காட்டுவதில்லை
இப்போதெல்லாம்.
கல்யாணம் கட்டி
காசு பொறுக்க
நாலு திசைக்கும்
அவரவர்கள் சிதறிப்
போன பின்னும்
மனசுக்குள் நிழலாடும்

பால்வாசமும் தங்கம்மாவும். (மீள்)

One Comment on “பால் வாசம்/நா. விச்வநாதன்”

Comments are closed.