அசையும் சொத்தும் அசையா சொத்தும்/ரேவதி பாலு

ஒரு பக்கக் கதை

தேர்தல் நாள் அறிவிப்பு வந்துவிட்டது பத்திரிகைகளில் செய்தி சேனல்களில் வேட்பாளர்களின் சொத்து விபரங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன.

நகருக்கு வெளியே புறம்போக்கு பகுதி ஒன்றில் குடிசை போட்டு தங்கி இருக்கிறான் தினக்கூலி வேலை செய்யும் முனுசாமி.
” ஏம்மே! நாலு வருஷமா இதே குட்சேலே தானே இருக்கோம்? நமக்கு சொத்துன்னு இன்னா இருக்குன்னு நீ நினைக்கிற சொல்லு பாக்கலாம்” முனுசாமி மனைவியிடம் பேச்சை ஆரம்பித்தான்.
” நல்லா யோசிச்சு பார்த்தா அப்பப்ப அடுப்பில் ஏத்தி எறக்குறனே இந்த அலுமினியக் குண்டானுங்க, தண்ணி பிடிக்குற நாலு பிளாஸ்டிக் கொடங்க, நசுங்கிப் போன ரெண்டு அலுமினிய தட்டுங்க, உடுத்துன்னுகிற கிழிசலத் தவிர இன்னொரு கிழிசப் புடவை. அதான் சொத்து இந்த ஊட்டுல” என்றாள் மாரியம்மா .
” அதில்லேமே! அவ்ளோ பெரிய பணக்காரங்களா
கீறாங்க இந்த அரசியல்வாதிங்க. கோடி கோடியா சொத்து கீது. ஆனா ஒரு கார் கூட இல்லன்னு லிஸ்ட் கொடுக்குறாங்க.
அத்தா மே அதிசயமா கீது . அப்புறம் அது என்னாம்மே அசையும் சொத்து அசையா சொத்துன்னுட்டு பிரிச்சு வச்சு விவரம் காட்டுறாங்க.நமக்கு அந்த மாதிரி ஏதாச்சும் கீதா? “
” இதோ குப்பையில பொறுக்கின ஒடஞ்சு போன காரை வச்சிக்கினு ஊட்டுக்குள்ள ஓடியாடி வெளையாடிக்கினு கீதே நம்ம புள்ள அதுதான் நம்ம அசையும் சொத்து. அதோ சீக்கு வந்து
இன்னும் போவாம பூமிக்கு பாரமாக மூலையில் சுருண்டுக்கினு கீதே
ஓங்காத்தா, அதுதான் நம்ம அசையா சொத்து” மாரியம்மா விலாவாரியாக விளக்க பிரமிப்போடு கேட்டுக் கொண்டிருந்தான் முனுசாமி.

One Comment on “அசையும் சொத்தும் அசையா சொத்தும்/ரேவதி பாலு”

  1. ஆஹா இதை விட அசையும் சொத்து அசையா சொத்து பற்றி யாராலும் எழுத முடியாது.

Comments are closed.