
தேவி வஞ்சம்
ஒருவர் மேல் பொய்யான குற்றச்சாட்டை வைத்து அதற்கு வலு சேர்ப்பது போல் சாட்சியங்களை ஏற்படுத்துதல் என்பது இன்று நேற்றல்ல இரண்டாயிரம் ஆண்டுகள் முன்பே இருந்திருக்கிறது எனக் காட்டுகிறது மணிமேகலை.
இக்காவியத்தில் மணிமேகலை என எண்ணிக் காயசண்டிகை பின்னே சென்று அவள் கணவனால் இளவரசன் உதயகுமரன் கொல்லப் படுகிறான். அச்செய்தியால் ஆத்திரம் அடைந்த அரசமாதேவி, மணிமேகலையின் மீது பழி வரச்செய்து ஊர்மக்கள் அவளை வெறுக்கும்படிச் செய்வேன் என உறுதி பூணுகிறாள்.
அவள் கல்வியறிவு இல்லாத மூடனை அழைத்து மணிமேகலையின் அறையில் சென்று வண்புணர்வு கொண்டு அவள் மார்பில் புணர்வுக்குறி ஏற்படுத்த அவனுக்கு கை நிறைய பொற்காசுகள் கொடுத்து கட்டளை இடுகிறாள். இதை உணர்ந்த மணிமேகலை தான் கற்ற மந்திரம் மூலம் ஆண் உருக் கொள்கிறாள். அவன் இதைக் கண்டு அஞ்சி ஊரை விட்டே ஓடி விடுகிறான்.
இவ்விழிசெயல் அக்காலத்திலேயே இருந்தது எனப்பதிவு செய்யும் மணிமேகலை அடிகள் இங்கே.
“அறிவு திரித்து இவ் அகல் நகர் எல்லாம்
எறிதரு கோலம் யான் செய்குவல்’ என்றே
மயல் பகை ஊட்ட மறு பிறப்பு உணர்ந்தாள்
அயர்ப்பது செய்யா அறிவினள் ஆகக்
கல்லா இளைஞன் ஒருவனைக் கூஉய்
‘வல்லாங்குச் செய்து மணிமேகலை தன்
இணை வளர் இள முலை ஏந்து எழில் ஆகத்துப்
புணர் குறி செய்து “பொருந்தினள்” என்னும்
பான்மைக் கட்டுரை பலர்க்கு உரை’ என்றே
காணம் பலவும் கைந் நிறை கொடுப்ப
ஆங்கு அவன் சென்று அவ் ஆய் இழை இருந்த
பாங்கில் ஒரு சிறைப்பாடு சென்று அணைதலும்
‘தேவி வஞ்சம் இது’ எனத் தெளிந்து
நா இயல் மந்திரம் நடுங்காது ஓதி
ஆண்மைக் கோலத்து ஆய் இழை இருப்ப
காணம் பெற்றோன் கடுந் துயர் எய்தி
‘அரசர் உரிமை இல் ஆடவர் அணுகார்
நிரயக் கொடு மகள் நினைப்பு அறியேன்’ என்று
அகநகர் கைவிட்டு ஆங்கு அவன் போயபின் ……”
