
புதுமைப்பித்தனின் “ஸ்டாலினுக்குத் தெரியும்” என்ற நூலின் கையெழுத்துப் பிரதி நீண்டகாலமாக நாவலாசிரியர் க.ரத்னம் அவர்கள் வசம் இருந்தது. அதிலிருந்துதான் ஜந்திணை பதிப்பக அச்சுப் புத்தகம் வெளியிடப்பட்டது.
பழைய அரிய புத்தகங்களைப் பாதுகாத்து வைத்திருக்கும் ரத்னம் எனக்கு அடுத்த வீதியில் தான் வசிக்கிறார். இந்த கையெழுத்துப்பிரதியை அப்படியே போட்டோ பிடித்து அச்சில் ஒரு நூலாகக் கொண்டுவரலாம் என நினைத்துள்ளேன்.
இக் கையெழுத்துப் பிரதியை விற்று அவருக்கு ஒரு சம்பாத்தியத்துக்கு வழிசெய்யலாம் என்று முயன்றேன். தனியார் வசம் அது செல்வதைவிடச் சிறந்தது நூலகம் வசம் இருப்பது என்று முனைந்து. எம்.கண்ணன் மூலம் பாண்டிச்சேரி பிரஞ்சு இந்தியவியல் நூலகத்துக்கு இதைச் சென்றவாரம் உரிமைப்படுத்தினேன். (அவருடைய உதவியால் அங்கேயே அதன் போட்டோ பிரதியும் எடுத்து என் வசம் வைத்துள்ளேன்).
பிரமிளின் கையெழுத்தப் பிரதியொன்றை முன்பு இலவசமாகவே அங்கு பாதுகாக்கக் கொடுத்துள்ளேன். இனியும் பிரமிளின் சில கையெழுத்துப் பிரதிகளையும் பத்திரிகைக் கட்டிங்குகளையும் கடிதங்களையும் அங்கே ஒப்படைக்க உறுதிகூறியுள்ளேன். தமிழ் எழுத்தாளனின் கையெழுத்துப் பிரதியைப் பாதுகாக்கும் நிறுவனம் இது ஒன்றுதான் உள்ளது. (என்னிடமிருந்த சிறுபத்திரிகைகளையும் இந்நிறுவனத்துக்கு முன்பு விற்றுள்ளேன்)
யாராவது இந்தப் படப் பிரதி அச்சுநூலைக் கொண்டுவர முன்வந்தால் வரவேற்கிறேன். இல்லாவிட்டால் நானே செய்து முடிப்பேன்.
ரத்னம் பாதுகாத்துவைத்துள்ள நூல்களை (ரோஜாமுத்தையா போன்ற நூலகங்களுக்குக் கொடுத்தது போக) விற்க நினைத்துள்ளார். மீதி இருப்பவை பற்றி ஒரு பட்டியல் அவரிடமிருந்து பெற்றுப் பதிவிடுவேன். வேண்டுவோர் வேண்டுவனவற்றை வாங்கிக் கொள்ளலாம்.
