
கைகளின் ‘பன்ச்’களும் கால்களின் ‘கிக்’குகளுமாக விறுவிறுப்பாய் நடந்து கொண்டிருந்த அந்தக் கராத்தே போட்டியின் உச்சக் கட்டத்தில் அவள் முகத்துக்கு நேராக வந்த அவனது வலது கை பன்ச் சை தனது இடது கையின் விரைத்த விரல்களை நிமிர்த்துத் தடுத்தாள் கண்மணி. அப்படியே இடது கை உள்ளங்கையால் அவனது முட்டு வாயில் ஒரு வேக அழுத்து . தொடர்ந்து வலது கையின் வலுவான பன்ச் அவனது நெஞ்சில் இறங்க சரிந்து விழுந்த எதிராளிக்குத் தேவைப்பட்டது உடனடி முதலுதவி.
இறுதிச்சுற்றில் அவளோடு போட்டியிட எழுந்தான் கதிரவன். ‘சபாஷ் சரியான போட்டி’ என்ற கைதட்டல்கள் .கோஜிராய் கராத்தே பள்ளியில் பிரதம பயிற்சியாளர்கள் கதிரவனும் கண்மணியும் . நான்கு பயிற்சிக் கூடங்களுக்கு இடையே நடக்கும் போட்டி. சென்னையின் பெருமைக்குரிய போட்டிகளில் ஒன்று அது.
கதிரவனும் கண்மணியும் கராத்தே முறைப்படி வணக்கம் செலுத்திக்கொண்டு பொசிஷன் எடுத்த சிறிது நேரத்தில் கதிரவனின் கை ஓங்குவது தெரிந்தது. கதிரவனின் முரட்டுத்தனமான தொடுப்பு ஆட்டத்திற்கு தடுப்பு ஆட்டம் மட்டுமே ஆட முடிந்தது கண்மணியால். அவன் பெரும்பாலும் கோகுட்ஜு முறையில் நின்றபடி குதித்து குதித்து செலுத்திய கால்களில் வேக வீச்சைத் தடுத்து, தனது நான்கு விரல் பன்ச் சை அவனது ஓர நெஞ்செலும்பு நோக்கி அவள் செலுத்திய வேகம் எல்லாம் அவனது திருப்பிவிடும் ‘பிளாக்’கில் தவிடுபொடியாகின .
அவளின் முகத்தில் தெரிந்த சோர்வைக் கவனித்தான் கதிரவன். சேர்ந்து சீறி வந்த அவளது கைகளின் முஷ்டிகளை விலக்கி, விரிந்த அவள் கைகளில் நுழைந்து , முழங்கால் தூக்கி வயிற்றில் வாகாக வந்த குத்தை வேண்டும் என்றே தவறவிட்டான் கதிரவன் . இப்போது சிறிது நேரத்தில் கண்மணியின் கராத்தே வீச்சு ஓங்க ஆரம்பித்தது.
பின்னோக்கி நகர்ந்து, தொடர்ந்து வேகமாய் முன்வந்து வீசிய அவள் கால்களின் தாக்குதலை தடுப்பதிலேயே கதிரவனின் கவனம் இப்போது . முழங்கைத் தாக்குதல், இடுப்பில் உதை , முட்டு வாய் அடி . தலையோர இடி என்று இறங்கிய அவளின் வேக ஆட்டத்தில் , ஒரு கட்டத்தில் மிக நெருக்கத்தில் வந்த அவள் பார்வையில் நெருப்பு தெறித்தது.
அந்தப் பார்வையின் கூர்மையில் ஒரு கணம் தடுமாறினான் கதிரவன். அவ்வளவுதான் அந்த நொடி போதுமே கண்மணிக்கு. தொடர்ந்து வயிற்றிலும் நெஞ்சிலும் பாய்ந்த ‘பன்ச்’ களில் நிலை தடுமாறி அவள் சுழன்று வீசிய பின்னங்கால் அடி அவன் தாடையில் முட்ட விழுந்தான். முடிந்தது போட்டி.
பக்கத்தில் வந்து ‘சாரி’ என்று சொன்னவள், ‘ஒரு கட்டத்தில் என் வயிற்றை நோக்கி வாகாக வந்த அந்த ‘கிக்’கை ஏன் முழுவதும் இறக்கலை கதிர் ‘ என்று மெதுவாகக் கேட்டு விட்டு நகர்ந்தாள் கண்மணி.
அன்று மாலை கடற்கரையில் அமர்ந்து இருந்த கண்மணியிடம் ‘அது என்ன அப்படி ஒரு நெருப்பின் உக்கிரம் தெறித்தது உன் கண்ணில் அப்போது’ என்றான் கதிரவன். ‘எனக்கே தெரியல கதிர், நீ விட்டுக்கொடுத்து விளையாடும் அளவு நான் ஒன்றும் வேகம் இல்லாதவள் அல்ல என்று காட்ட வேண்டியது மட்டுமே அப்போது என் நோக்கமாக இருந்தது. ‘
‘ அது சரி ஆனால் நாளை நான் என் அம்மாவோடு உன்னைப் பெண் பார்க்க வரும்போது இந்த நெருப்புக் கண்களைக் காட்டாதே. எங்கம்மா, என்னை மாதிரி , பயந்து போயிடுவாங்க .இப்போது காட்டுகிறாயே இந்த நேசக் கண்கள் , இதையே காட்டு ‘ என்றபடி , அவள் மேல் சாய முயன்றவனை, கைகளின் உள்பக்க கராத்தே தடுப்பு முறையால் தடுத்தபடி ‘ சீ போடா, இது கடற்கரை’ என்றாள.
