அடிவானத்திற்குக் கீழ் இலைகள் உதிர்கின்றன/வசந்ததீபன்

மனசைத் திறந்து வையுங்கள்
காற்றோ மழையோ குளிரோ
வந்து போகட்டும் போய் வரட்டும்
பத்து யானைக்கு முன்னால் போகலாம்
ஒத்த யானையின் எதிர் நிற்கமுடியாது
துணை இழந்த
ஆணோ பெண்ணோ வன்மிகள்
இறந்து போன உடலென்று
புதைக்கவோ எரியூட்டவோ செய்கிறார்கள்
கனவுகள் தீர்ந்ததும் உயிர்த்தெழுகிறான்
பூப்பாத்திகளுக்கு கண்ணீர் பாய்ச்சுகிறான்
காதல் பூத்துப்பூத்து உதிர்கிறது
வேதனை கமகமக்கிறது
தடவிக் கொடுக்கிறான்
தலையை வளைத்து
சந்தோஷப்பட்டது புறா
அடுப்பில் எண்ணெய்
கொதிக்கத் தொடங்கியது
திசை மாறிப் போகிறது
திருப்ப முயற்சிக்கிறான்
கவிழ்ந்து விடுமோ என பயமாயிருக்கிறது
வேண்டாம் விட்டு விடு
பாவம் செய்ய தூண்டாதே
சூடான ரத்தம் நிலத்தில் தெறித்தது
கரை தாண்டக் காத்திருந்தான்
அலைகள் தான் வந்தன
விழித்தால் நிற்கிறாள்
கண் மூடினால் நிற்கிறாள்
விழித்தும் கண் மூடியும் தவிக்கிறான்
தூக்கத்தைத் தேடுகிறான்
கிட்டவேயில்லை
ஏக்கம் அவனைத் தழுவிக் கொண்டது.

🦀