இனிக்கும் தமிழ் – 95/ – டி வி ராதாகிருஷ்ணன்

தமிழ் இலக்கியமான விவேகசிந்தாமணியில் இருந்து ஒருபாடல்.இப்பாடலைப்
பாடியவர் திருத்தக்கதேவராய் இருக்கக்கூடும் எனத் தெரிகிறது.

ஒரு பெண்ணை கணிதத்தில் வர்ணிக்கிறார்
சோதிடனின் காதல் கவிதை!!!

ஒருநான்கும் ஈரரையும் ஒன்றே கேளாய்
உண்மையாய் ஐயரையும் அரையும் கேட்டேன்
இருநான்கும் மூன்றுடனே ஒன்றும் சொல்லாய்
இம் மொழியைக் கேட்டபடி ஈந்தாய் ஆயின்
பெருநான்கும் அறுநான்கும் பெறுவாய் பெண்ணே
பின்னேஓர் மொழிபுகல வேண்டாம் இன்றே
சரிநான்கும் பத்தும் ஒரு பதினைந் தாலே
சகிக்க முடியாதினி என் சகியே மானே!

– விவேகசிந்தாமணி

ஒருநான்கும் ஈரரையும் ஒன்றே: ஒரு நாலும் இரண்டு அரையும் ஒன்று + ஏ
(1 x 4) + (2 x ½) + 1 = 6 – இராசிகளில் ஆறாவது கன்னி = கன்னியே
கேளாய்: கேட்பாயாக
உண்மையாய்: உண்மையாக
ஐயரையும் அரையும்: ஐந்து அரையும் அரையும்
(5 x ½) + ½ = 3 – வாரத்தில் மூன்றாவது நாளான செவ்வாய்
கேட்டேன்: கேட்டேன்
இருநான்கும் மூன்றுடனே ஒன்றும்: இரண்டு நான்கும் மூன்றும் ஒன்றும்
(2 x 4) + 3 + 1 = 12 – பன்னிரெண்டாவது நட்சத்திரம் உத்தரம். உத்தரம் =
விடை / பதில்
சொல்லாய்: சொல்வாயாக
நான்கும் அறுநான்கும்: நான்கும் மேலும் ஆறு நான்குகளும்
4 + (6 x 4) = 28 – தமிழ் ஆண்டுகள் என்று சொல்லப்படுபவற்றில் 28 ஆவது
ஆண்டு ‘ஜெய’ ஆகும்
இம் மொழியைக் கேட்டபடி ஈந்தாய் ஆயின் – நான் கூறியவற்றை விளங்கிக்கொண்டு
எனக்கு பதில் உரைப்பாயானால்
நான்கும் அறுநான்கும்: நான்கும் மேலும் ஆறு நான்குகளும்
4 + (6 x 4) = 28 – தமிழ் ஆண்டுகள் என்று சொல்லப்படுபவற்றில் 28 ஆவது
ஆண்டு ‘ஜெய’ ஆகும்
பின்னேஓர் மொழிபுகல வேண்டாம் இன்றே – நான் வேறெதுவும் உனக்குச் சொல்லத் தேவையில்லை
சரிநான்கும் பத்தும் ஒரு பதினைந் தாலே: நாலும் பத்தும் பதினைந்தும்
4 + 10 + 15 = 29 – தமிழ் ஆண்டுகள் என்று சொல்லப்படுபவற்றில் 28 ஆவது
ஆண்டு ‘மன்மத’ ஆகும்
சகிக்க முடியாதினி என் சகியே, மானே! – இனியும் என்னால் தாங்கமுடியாது என்
தோழியே, மான் போன்றவளே

அதாகப்பட்டது:

கன்னியே கேட்பாயாக
உண்மையாய் உன் செவ்வாயைக் கேட்டேன்
பதிலைச் சொல்வாய்
நான் கூறியவற்றை விளங்கிக்கொண்டு எனக்கு பதில் உரைப்பாயானால்
ஜெயம் பெறுவாய் / வெற்றியடைவாய் பெண்ணே
நான் வேறெதுவும் உனக்குச் சொல்லத் தேவையில்லை,
மன்மதனாலே உண்டான காதல் உணர்வினை/வேதனையினை
இனியும் என்னால் தாங்கமுடியாது என் தோழியே, மான் போன்றவளே