
பொய் வழக்கு
தொடர் தலைவலியாக தொடர்ந்து கொண்டிருக்கும் என் பொருளாதார சிக்கலைப் பற்றி நண்பனிடம் சொன்ன போது அவன் என் ஜாதகத்தில் ஏதாவது நோஷம் இருக்கும், அதனால் நிவர்த்திக்கு ஒரு நல்ல ஜோசியரைப் பார்க்கச் சொன்னான். அவன் பேச்சில் ஏதோ சூட்சுமம் இருப்பதை உணர்ந்த போழ்தில் அந்த பிரபல ஜோசியரை அணுகிவிட்டு, ஸ்கூட்டரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். வழிநெடுகவும் ஜோசியர் சொன்னதே நினைப்பில் ஓடிக்கொண்டிருந்தது. நான் அவரிடம் கேட்கப் போனது ஒன்று. அவர் சொன்னது வேறு. போன ஜென்மத்தில் என் பெயர் குமரேசன் என்றும், நான் குறளி வித்தை காட்டிப் பிழைத்துக் கொண்டிருந்ததாகச் சொன்னார். அந்த அதிர்ச்சியிலிருந்து மீளாத நிலையிலேயே வண்டியைச் செலுத்திக்கொண்டிருந்தேன். “ குறளி வித்தை என்றால் மனித மண்டை ஓடுகளுக்கு பூசனை செய்து, மந்திரம் ஓதி எதிரில் உள்ளவர்களை மயக்கமுறச் செய்யும் கலை “ என்ற விளக்கத்தை கூகுளில் வழியில் ஸ்கூட்டரை ஓரங்கட்டி அறிந்ததில் இன்னும் பீதியானது மனம். அப் பீதி தீண்டிய மனநிலையோடு வீடு நோக்கி விரைந்து கொண்டிருக்கையில் இரவுச் சிற்றுண்டி ஞாபகம் வரவே, ஹோட்டலுக்குச் செல்லும் மூட் இல்லாததால், வீட்டிற்குச் சென்று ஆன்லைனில் ஆர்டர் செய்து கொள்ள முடிவு செய்தேன். ஒரு வழியாக வீடு வந்தது. ஸ்கூட்டரை வீட்டின் சைடில் ஓரம் கட்டிவிட்டு வீட்டுக் கதவைத் திறக்கச் சென்றேன். வீடு திறந்தே இருந்ததைக் கண்டதும் மனம் மேலும் பீதி கொண்டது. வீட்டில் எல்லோரும் விடுமுறைக்கு கிராமத்திற்குச் சென்றிருக்கையில் இது என்ன விபரீதம். ஒரு வித நடுக்கத்துடன் கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தேன். பரபரவேன்று வீட்டின் எல்லா இடங்களிலும் மின் விளக்குகளை எரிய விட்டு ஒவ்வொரு அறையாக நுழைந்து சோதனை இட்டேன். மனதில் திக் திக் ஓடிக்கொண்டே இருந்தது. எந்த பொருளும் கலைந்த மாதிரித் தெரியவில்லை. எல்லாம் அதனதன் இடத்திலேயே இருந்தன. பீரோவைத் திறந்து ரொக்கம், மற்றும் நகைகளை சரி பார்த்தேன். எதிலும் குறைவில்லை என்றதும் மனதின் ஓரம் சிறிய நிம்மதி பூத்து மறைந்தது. இருப்பினும் யாரேனும் ஒளிந்து கொண்டிருக்கலாம் என்ற நினைப்பு மனதில் ஊர்ந்து வண்ணமிருந்த்து. கதவு பின் புறம், கட்டிலுக்கடியில், பரண் மீது…என எல்லா இடமும் துழாவியதில் யாருமில்லை என்ற நிம்மதி என் வியர்வைக்கு சாமரம் வீசிய சுகம் ஒரு நொடியில் கலைந்து போனது ஹாலில் இருந்த மேஜையில் அந்த அதிர்ச்சியான காட்சியை கண்டதும். அந்த மேஜை மீது ஒரு மண்டை ஓடு பொக்கை வாய், பொக்கை கண்களுடன் வீற்றிருந்தது. அதை கண்ட கனமே தலைச்சுற்றிய சுற்றலில் ஒரு நிமிடம் தரையில் அமர்ந்து விட்டேன். சுதாரித்துக் கொண்டு ஏறிட்டு மண்டை ஓட்டைப் பார்க்க நேர்கையில் “ குமரேசா…! “ என எனை அழைத்துப் பேச ஆரம்பித்த்து மண்டை ஓடு. ஒரு கணம் விழிப் பிதுங்கிச் சுற்று முற்றும் திரும்பிப் பார்த்து, எவருமில்லாத அதிர்ச்சியில் உண்மையிலே மயக்கம் போட்டு விழுந்து விட்டேன். இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு நினைவு திரும்பகையில் , கண்களைத் துடைத்துக் கொண்டு பார்த்தேன். எதிரே இரண்டு போலீஸ்காரர்கள் நின்றிருந்தனர். இது வேறு விதமான அதிர்ச்சியாக இருந்த்து. கொலையுண்டவனின் மண்டை ஓட்டை வீட்டில் மறைத்து வைத்திருந்ததாக வழக்குப் பதிவு செய்து என்னை அழைத்துச் சென்றனர். மண்டை ஓட்டையும் பறிமுதல் செய்தனர். இந்த அரை குறை வக்கீல்களின் தயவால் பதினெட்டு நாட்கள் உள்ளே இருக்க வேண்டியதாயிற்று. ஏதோ ஒரு அதிர்ஷ்டத்தில் பிணையில் வெளியில் வந்து ஒரு ஆட்டோ பிடித்து வீட்டிற்கு வந்தேன். வீட்டில் இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டில் நிறுத்தியிருந்த ஸ்கூட்டரே காணவில்லை. பரபரத்த மனதோடு அருகிலிருந்த காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். இரண்டு நாடகள் கழித்து அதே போல் இரண்டு காவலர்கள் இல்லம் நாடி வந்தனர். திருட்டு ஸ்கூட்டரை இத்தனை நாட்கள் வைத்திருந்ததாக வழக்குப் பதிவு செய்து என்னை அழைத்துச் சென்றனர். இம்முறையும் வக்கீல்கள் செதப்பிய சொதப்பலில் மீண்டும் பதினெட்டு நாட்கள் உள்ளே இருக்க வேண்டியதாயிற்று. ஒரு வழியாக இம்முறையும் பிணை கிடைத்து அதே போல் ஆட்டோ பிடித்து வீடு வந்தடைந்தேன். ஆனால் வேறு சிக்கல் உதயமானது. வீட்டுச் சாவியைக் காணவில்லை. வேறு வழியில்லாமல் வீட்டுப் பின் புறம் இருந்த ஒரு இரும்புக் கம்பி கொண்டு பூட்டை உடைக்க ஆரம்பித்தேன். உடைத்துக் கொண்டிருக்கும் போதே, அவ் வழி சென்ற கவலர் வாகனத்திலிருந்து இறங்கிய காவலர்கள் “ வீட்டின் பூட்டை உடைத்து திருட முற்பட்டதாக “ வழக்கு பதிவு செய்து என்னை அழைத்துச் சென்று மீண்டும் சிறையில் அடைத்தனர்.
02-02-2022
