அழகிய சிங்கரின் “அஞ்சலட்டைக் கதைகள்”/சின்மய சுந்தரன்

அழகிய சிங்கர் அவர்களின் “அஞ்சலட்டைக் கதைகளை” வாசித்தேன். அன்றாடக் காட்சிகள்; நாம் காணும் மனிதர்களின் இயல்பான போக்குகள், நம்முடைய இயல்பான மனப் போக்குகள் – இவற்றை இந்தக் குட்டிக் குட்டிக் கதைகளில் தன்னுடைய அணுகுமுறையில் வெளிப்படுத்தி இருக்கிறார் அழகிய சிங்கர்.

ஒரே வாசிப்பில் நூலை முடித்து விடத் தூண்டும் மொழி நடை, சரளமாக அடுத்தடுத்த பக்கங்களுக்கு நம் பார்வையைத் திருப்பி விடுகிறது! ஒரு காட்சி அல்லது நிகழ்ச்சி அல்லது அனுபவ நினைவு எழுப்பும் எண்ணங்களை சின்ன அஞ்சலட்டைக்குள் கதையாக எழுதி விட முடியுமா? முடிந்திருக்கிறதே இவரால்! (ஒரு சில கதைகளை ஒரு அஞ்சலட்டையில் தொடரும் போட்டு மறு அஞ்சலட்டையில் முடித்திருப்பாரோ? இருக்கலாம்!)

புத்திலக்கிய உலகில் சில சிறுகதை ஆசிரியர்கள் தமக்கே உரிய சில புதிய உத்திகளை கையாள்வது வழக்கம். இந்தக் கதைகளில் அழகிய சிங்கரும் புதிய உத்தியைக் கையாண்டிருக்கிறார் என்று தோன்றுகிறது! (அவருடைய பிற சிறுகதை நூற்களை நான் இது வரை வாசித்ததில்லை. ஒரு வேளை இது அவருக்கே உரிய வழக்கமான உத்தியாகவும் இருக்கலாம்!) என் பார்வையில், இந்தக் கதைகளில் இருக்கும் உத்தியை, “ஹைக்கூ” உத்தி என்று வர்ணிக்கத் தோன்றுகிறது. “ஹைக்கூ” கவிதைகளில் மூன்றாவது வரி, முதல் இரண்டு வரிகளில் வாசகனுக்குப் பிடி படாத, புதுமை ஒன்றை சொல்லி அசத்த வேண்டும் என்பார்கள் பாருங்கள்! (அப்படிப் பார்த்தால் எத்தனை ஹைக்கூ கவிதைகள் தமிழில் கவிதைகளாகத் தேறும் என்பது அந்த ஹைக்கூ காரர்களுக்கே வெளிச்சம்!) ஆனால் அழகிய சிங்கரின் அஞ்சலட்டைக் கதைகள் அந்த வேலையை அற்புதமாகச் செய்திருக்கின்றன! சின்னச் சின்ன கதைகளில் சற்றும் நாம் எண்ணிப் பார்க்காத முடிவுகளை இயல்பாக அமைத்திருக்கிறார்!

முதல் கதையைப் பார்ப்போமே! “தெருவில் அனாதையாய்க் கிடந்தான் குணசேகரன்.

…….. தெருவில் போவோர் வருவோர் யாரும் அவனைக் கண்டு கொள்ளவில்லை…….. பக்கத்தில் வந்த தெரு நாய் அவனை முகர்ந்து பார்த்து லொள் லொள் என்று கத்தியது…. நாய் சத்தத்தைக் கேட்டு, குணசேகரனைப் பார்த்தார் ஒரு பெரியவர். உடனே ஆம்புலன்ஸிற்கு போன் செய்தார்”. கதை முடிந்து விட்டது. என் பார்வையில், தெருவில் விழுந்து கிடப்பவனை சக மனிதர்கள் கண்டும் காணாமல் கடக்கிறார்கள். ஒரு நாய் கண்டு கத்திய பிறகு அங்கே நின்று கொண்டிருந்த ஒரு பெரியவருக்குள் மனிதம் விழிக்கிறது! “ஏ மனிதா! உன் சக மனிதனைப் பாருடா!” என்று ஒரு நாய் சொல்ல வேண்டியதிருக்கிறது!

“கொரானாவை ஒழிப்பது எப்படி?” என்று ஒரு கதை. அவனுக்கு கணினி ரிப்பேர் செய்கிற இடத்தில் வேலை. ஒரு மாதமாக கடையைத் திறக்க வில்லை. முதலாளி ஊதியம் கொடுக்க மறுத்து விட்டார்! கலங்கும் நேரத்தில் வாடிக்கையாளர் ஒருவர் போன் செய்கிறார். “உன் கணக்கில் பணம் அனுப்பறேன், வங்கி விவரம் அனுப்பு” என்கிறார்! கணினியை ரிப்பேர் செய்து கொண்ட வாடிக்கையாளர் பணம் கொடுத்து உதவ முன் வருவாரா? சந்தேகம் வருகிறது அல்லவா? கதை இப்படி முடிகிறது : “…ஒரு முறை அவர் கதை தினமணிக் கதிரில் வெளி வந்தது. அதை படித்து அவரிடம் சிலாகித்துப் பேசினேன்” ஒரு எழுத்தாளனின் மனம் இளக பாராட்டைப் போல் வேறென்ன உண்டு!?

விருட்சம் நூல் நிலயத்திற்கு ஒருவர் வந்தார். பா.ராகவன் எழுதிய ஆயிரம் பக்க நாவலை இரவல் கேட்டார். படித்து முடிக்க ஒரு மாதம் ஆகும் என்றாராம். புத்தகத்தை எடுத்துக் கொண்டு வந்து விட்டவர் “…அதன் பின் அங்கு போகவே இல்லை” – அருமையான ஒரு அனுபவப் பதிவு!

கொராநாவால் முழு கதவடைப்பு. பசியால் ஒருவன் ஒரு வீட்டிற்குள் திருடப் போகிறான். கொஞ்சம் பணத்தை எடுத்துக் கொண்டு வெளியே வருகிறான். பாவம், “அவனைப் பிடித்து ஆம்புலன்சில் தள்ளினார்கள்”. சொல்ல முடியாத சோகம்! பல கதைகள் கொரானாவின் பன்முக கோரப் பிடிகளைப் படம் பிடிக்கின்றன. பயம் காட்ட வில்லை. ஒருவித அங்கதச் சுவையுடன் நகர்கின்றன! ஒரு கதையில் சொல்கிறார், “இந்தக் கொடூரமான கொரானா காலத்தில் வெளியில் செல்வது ரொம்ப ரொம்ப குறைச்சல். வயதானவர்கள் போகக் கூடாதென்று யாரையெல்லாம் வயதானவர்கள் என்று அரசாங்கம் சொன்னதோ அதில் நான் அடங்குவேன் என்பதால் நானும் போகவில்லை”
“மஞ்சள் நிற பூனைக் குட்டி” இவர் விரட்ட விரட்ட சுற்றி சுற்றி வந்தது. கொஞ்ச நாட்களாய் பூனையைக் காணவில்லை! “..நகுலன் என்ற தமிழ் எழுத்தாளரின் நாவல்களைப் படித்துக் கொண்டிருக்கிறேன். அவரது நாவல்களில் ஒன்றின் பெயர் மஞ்சள் நிற பூனைக் குட்டி! ..சரி தான், அந்த நாவலில் அது நுழைந்து விட்டது!” என்னே அழகிய சிங்கரின் எண்ண ஓட்டம்!

“அறை” என்று ஒரு கதை. புத்தகங்களை வாசிக்க எடுத்துச் சென்றால் திருப்பிக் கொடுக்காத ஒருவர் இவரைப் பார்க்க வருகிறார். அவர் வரு முன்னே புத்தகங்கள் இருக்கும் அறையை பூட்டி வைத்து விடுகிறார். வந்தவர் அறையைத் திறக்கச் சொல்கிறார். “….சாவியைத் தொலைத்து விட்டேன்..” என்கிறார் இவர். வந்தவர் கண்களில் ஜே.கே.வின் ஆடியோ கேசட்டுகள் படுகின்றன. அவற்றில் சிலவற்றை எடுத்துக் கொண்டு போய் விடுகிறார். “…நான் செய்வதறியாது திகைத்தேன்” என்று முடிக்கிறார் இவர்! புத்தகங்களை இரவல் வாங்கி விட்டு திருப்பிக் கொடுக்காதவர்களின் முகத்தில் அறையும் கதை “அறை”!

அழகிய சிங்கர் தன் நேர மேலாண்மையை தானே அலசிப் பார்த்து அசடு வழியும் கதை,

“இலக்கியக் கூட்டம்”. நீங்களே வாசித்து ரசியுங்களேன்!
“கூட்டம்” என்றொரு கதை. “அவன் அவரைப் பற்றி பேச வேண்டும்….அவரைப் பற்றி எழுதிய கட்டுரையை வீட்டில் வைத்து விட்டான்!…எத்தனை புத்தகங்கள் எழுதியிருக்கிறான் அவரைப் பற்றி. இப்போது பேசலாம் என்றால் ஒன்றும் உதவ வில்லையே! முடிவாக அவரைப் பற்றி பேசினான். விழாக் குழுவினர் நெளிந்தார்கள். கேட்டவர்கள் முகம் சுழித்தார்கள். கூட்டம் இனிதே முடிந்தது” இப்படியும் நடக்குமா என்கிறீர்களோ? சுய நலத்தோடு பிரபலங்களை flattery செய்து பேசுபவர்களின் முகத்திரை கிழிக்கப் படுகிறது அல்லவா? அதுவே கதையின் சிறப்பு.
“யாருக்கும் தெரிய வேண்டாம்” கதையில் காலையில் கதவைத் திறந்து பால் பாக்கெட்டை எடுக்கச் செல்கிறார். வாசலில் ஒரு எலி செத்துக் கிடந்தது. அவர் மனைவியார் எழுந்து வருமுன் அப்புறப் படுத்தி விட்டார். அடுத்த நாளும் அப்படியே நடந்தது. “..திரும்பவும் மைதிலிக்குத் தெரியாமல் எடுத்துப் போட்டேன்..” என்கிறார். அன்று இரவு நகுலன் பற்றி கட்டுரை தயாரித்துக் கொண்டிருந்ததில் மறு நாள் காலை நன்றாக தூங்கி விட்டாராம். “..ஆண்கள் தினத்திற்கு வாழ்த்துக்கள்..” என்று சொல்லி எழுப்பினாராம் மைதிலி அம்மையார். இவர், “நன்றி!..பால் பாக்கெட்டுகள் இருந்ததா..?” என்று கேட்க, “இருந்தது” என்கிறார் அம்மையார். எலிகளைப் பற்றி அம்மையாருக்குத் தெரியாமல் இருந்தால் சரி என்று எண்ணிக் கொண்டாராம்! கதையை இப்படி முடிக்கிறார் : “மைதிலி மனதிற்குள் சிரித்துக் கொண்டாள். ஆண்கள் தினத்தன்று எலி செத்து வாசலில் கிடந்ததை (அவரிடம்) ஏன் சொல்ல வேண்டும் என்று அவளே எலியை அப்புறப் படுத்தி விட்டாள்!” சின்ன நிகழ்ச்சி தான்! ஆனால் அதைச் சொல்லும் விதத்தில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே இருக்கும் பரஸ்பர புரிதலை அழகாக வெளிப்படுத்தி விட்டாரே!

அலசிக் கொண்டே போகலாம். மொத்தம் 56 கதைகள். ஒரே மூச்சில் வாசித்து விடத் தூண்டுபவை!

நூலில் “சொடுக்குக் கதைகள்” என்று முப்பது சேர்த்திருக்கிறார். “அனந்த கிருஷ்ணன் அவர் மனைவியுடன் பேசி ஆறு மாதமாகி விட்டது. இது குறித்து அவர்கள் பிள்ளையும், பெண்ணும் கவலைப் பட வில்லை.” – இந்தக் காலத்தில் பல முதிய தம்பதிகளுக்கும் நிகழும் அனுபவம் தானே!

நாள் விளையாட்டு போல் ஓடிக் கொண்டிருக்கிறது என்றேன். “எங்கே விளையாடினீர்கள்?” என்று கேட்டாள் மனைவி! – ஆகா!

“அந்தக் கூட்டம் சிறப்பாக நடந்தது. 8 மணி எப்போது முடியும் என்று காத்துக் கொண்டிருந்தார்கள்” – 8 மணிக்கு இரவு உணவு என்று அறிவித்திருந்தார்களோ?
கடைசி சொடுக்குக் கதை, “தினமும் அலுவலகம் தாமதமாகப் போவான். அவ்வளவு தான் “ என்று முடிகிறது.

அழகிய சிங்கரின் “அஞ்சலட்டைக் கதைகள்” அவ்வளவு தான் என்று விடும் படியாக இல்லை. “அவ்வளவு தானா? இன்னும் இல்லையா?” என்று கேட்கும் படியாக ஈர்க்கிறது!