
ஆர். வத்ஸலா
ஞானக்கூத்தனின் அவர்களின் கவிதையைப் பற்றி எழுதுவதற்கு பல அறிஞர்கள் உள்ளார்கள். ஆகையால் நான் அவருடைய கையெழுத்தைப் பற்றி எழுத விழைகிறேன்.
மிகப் பெரிய கவிஞர் என்று அறியப்பட்டிருந்தாலும் முதன்முதலாக எழுத தொடங்கியிருந்த என்னுடன் கூட அவர் சகஜமாக பழகுவார். அது அவருடைய பெருந்தன்மை.
நாற்பத்தியெட்டு வயதிற்கு மேல் எழுத தொடங்கி கவிதை உலகத்தில் ஒரு குழந்தை போல் புதிதாக நுழைந்திருந்த என்னை தனக்கு சமமாக பாவித்து என்னுடன் தனது எண்ணங்களை பகிர்ந்து கொள்வார். தனக்கு யார் கவிதைகளை பிடிக்காது என்பதையும் யாரை தான் கவிஞராகவே பார்ப்பதில்லை என்பதையும் கூட என்னிடம் கூறுவார், நான் அதை யாரிடமும் பகிர்ந்து கொள்ள மாட்டேன் என்கிற நம்பிக்கையுடன். என்னுடைய “நான் ஏன் கவிஞர் ஆகவில்லை” மற்றும் “தனிமை” இந்த இரண்டு கவிதைகளும் அவருக்கு மிகவும் பிடித்தமானவை. திரைப்பட உலகத்தை சேர்ந்த திரு சந்திரசேகர் என்பவரின் கவிதை புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் பேசும்பொழுது அறுபதுக்கு மேல் கவிதைகள் அடங்கிய தொகுப்பு கொண்டு வந்த முதல் பெண் கவிஞர் திருமதி வத்ஸலா என்று குறிப்பிட்டார்.
நான் கவிதை எழுதத் தொடங்கியபோது என்னை பெரிதும் ஊக்குவித்தவர்கள் திரு கோமல் சுவாமிநாதன், திரு சுஜாதா, திரு ஞானக்கூத்தன் மற்றும் திரு கஸ்தூரி ரங்கன் ஆகியோர். என்னுடைய பல கவிதைகள் சுபமங்களாவிலும் கணையாழியிலும் வெளி வந்த பிறகு திரு கஸ்தூரிரங்கன் அவர்கள் அவற்றை தொகுப்பாக கொண்டு வர வேண்டும் என்று என்று எனக்கு ஆலோசனை கூறினார். அதற்கு முன்னுரை எழுதித் தர முடியுமா என்று பெரும் தயக்கத்துடன் நான் ஞானக்கூத்தன் அவர்களை கேட்டவுடனேயே அவர் ஒப்புக்கொண்டார். அதை விருட்சம் வெளியீடாக கொண்டு வரலாம் என்று அவர் கூறியதற்கு அழகியசிங்கர் தயக்கம் காட்டியதை (கவிதைப் புத்தகம் விற்காது. அதிலும் புதிதாக எழுதும் வயதான பெண் கவிஞர்!) என்னால் புரிந்து கொள்ள முடிந்ததால் நான் அதை வேறொரு பதிப்பகத்திற்கு எடுத்துச் சென்றேன். அந்த பதிப்பகத்தின் மேலாளர் அன்று வராததால் என் கவிதைகள் அடங்கிய கோப்பை அங்கேயே விட்டுச் செல்லுமாறு கூறினார்கள், அங்கிருந்த மற்ற பணியாளர்கள். அப்பொழுது ஞானக்கூத்தன் தன் கையால் எழுதிக் கொடுத்திருந்த முன்னுரையை ஜெராக்ஸ் எடுத்துக்கொள்ள மறந்துவிட்டது எனக்கு ஞாபகம் வரவே, நான் பக்கத்திலிருந்த ஜெராக்ஸ் கடைக்கு போனேன். ஜெராக்ஸ் ஆகிக் கொண்டிருக்கும் பொழுது பக்கத்தில் நின்று அதை பார்த்துக்கொண்டிருந்த ஒருவர் “இதை ஞானக்கூத்தன் கையெழுத்து போலிருக்கிறதே?” என்று கேட்டார். நான் “ஆமாம்” என்று சொன்னவுடன் அவர் என்னை பற்றி கேட்டார். நான் கவிதைகளை பதிப்பிக்க எந்த பதிப்பகத்தாரிடம் கொடுக்கப் போகிறேன் என்று தெரிந்து கொண்டவுடன் அவர்களைவிட பெயர் பெற்ற, அவர்களை விட அழகாக பதிப்பிகக் கூடிய ‘சினேகா’ பதிப்பகத்தாரிடம் அவற்றை கொடுக்கச் சொல்லி ஆலோசனை கூறினார். என்னுடைய “சுயம்” கவிதை தொகுப்பு திரு ஞானக்கூத்தன் அவர்களின் முன்னுரையுடன் ‘சினேகா’ வெளியீடாக அழகாக வெளிவந்தது. எட்டு புத்தகங்கள் (அவற்றில் நான்கு கவிதை புத்தகங்கள்) அன்று ஒன்றாக வெளியாகின. பதிப்பிக்கும் செலவை ஏற்றதோடு ஸ்வீட் காரம் காபி செலவையும் சினேகாவே ஏற்றுக் கொண்டது விருப்ப ஓய்வு பெற்றிருந்த எனக்கு சௌகரியமாக இருந்தது என்பதை நான் மறுக்க மாட்டேன். வெளியீட்டு விழாவுக்கு கவிதை புத்தகங்களை பற்றி பேசுவதற்காக திரு சுஜாதா அவர்களை கூப்பிட்டு இருந்தார்கள். அவர் என் கவிதை தொகுப்பை பற்றி மிகவும் உயர்வாக பேசினர். அத்துடன் நில்லாமல் மறுநாள் காலையில் என்னை தொலைபேசியில் கூப்பிட்டு என் கவிதை தொகுப்பை பற்றி அவர் பேசியது சரியாக இருந்ததா என்று கேட்டார். இது அவருடைய பெருந்தன்மையை காட்டுகிறது.
ஞானக்கூத்தன் மட்டும் அல்ல, அவருடைய கையெழுத்தும் எனக்கு உதவி செய்து இருக்கிறது.
😊

ஒரு கையெழுத்து, புதிய எதிர் காலத்தை காட்டியது.
நல்ல பங்களிப்பு .
எப்போதும் போல ஒரு சுவையான பொருளை அதை விடச் சுவையாக பகிர்ந்து கொண்டுள்ளார் வத்சலா . கையெழுத்தை வைத்தே படைப் பாளியைக் கண்டு பிடித்து, தயக்கமின்றி பேசி , சரியான பதிப்பகம் பற்றி எடுத்துச் சொல்லி , கவிதைத் தொகுப்பு வர காரணமாய் இருந்தவரின் பங்கும் இதில் தெரிகிறது . அவருடைய கையெழுத்து பகிர்ந்து கொண்டால் மிக மகிழ்ச்சியாக இருக்கும் .