தமிழ் கலாச்சாரத்தில் பதினோறு வகை கூத்துகள் இருந்துள்ளன/வாசுதேவன்

இது பதினோராடல் என அழைக்கப்படுகிறது. அவை கொடுகாட்டி, பாண்டரங்கம்,


பாவை கூத்து, குடக்கூத்து,மல்லாடல், அல்லியம், குடைக்கூத்து, துடியாடல்,
கடையம், மரக்காலாட்டம், பேடிக்கூத்து. சிலப்பதிகாரம் மாதவி இப்பதினோரு வகையான
ஆட்டங்களில் சிறந்து விளங்கியதாகக் கூறுகிறது. புகாரில் மாதவி பேரழகி.

சித்ராபதியின் மகள். பல கலைகளை கற்றவள். தலைக்கோலிகள் என்பவர்கள் நாட்டியம்
இயற்றி அதை கற்பிக்கும் தகுதியை அடைந்தவர்கள். நாட்டியத்தில் இந்த தகுதியை அடைந்தவர்களுக்கு அரசர் தரும் பட்டம் இந்த தலைக்கோலி பட்டம். மாதவி என்னும் தேவ அழகி இந்த குலத்தில் பிறந்தவள்.ஒப்பற்ற அழகுடன் திகழ்ந்தவள்.ஆடல், கூத்து ,

ஒப்பனை முதலிய கலைகளில் வல்லவள் பூம்புகாரில் இந்திரவிழா கோலாகலமாக நடக்கிறது. சோழ மன்னன் மாதவியின் ஆட்டத்தை மெய் மறந்து ரசிக்கிறான். ஆயிரம் பொற்காசுகளை பரிசாக அளித்து கவுரவிக்கிறான். இதை இளங்கோ அடிகள் அபாரமாக
எழுதிச்செல்கிறார். எண்ணையும், எழுத்தையும், இயல் ஐந்தையும், இசைத்தமிழின் நான்கு பண் வகைகளையும், பதினோறு வகை ஆடல்களையும் கற்ற மாதவி அரங்கத்தில் ஏறி ஆடுகிறாள்.

” எண்ணும் எழுத்தும் இயலைந்தும் பண்ணான்கும்
பண்ணின்ற கூத்துப் பதினொன்றும்– மண்ணின்மேற்
போக்கினாள் பூம்புகார்ப் பொற்றொடி மாதவிதன்
வாக்கினால் ஆடரங்கின் வந்து. ”
~ அரங்கேற்று காதை

இதே அரங்கேற்று காதையில் அடிகளார் மாதவியின் அபிநய முத்திரைகளை நுட்பமாக விவரிக்கிறார். மாதவியின் அபாரமான நடனத்திற்குக் காரணம் அவளுடைய ஆசிரியர்.
அடிகளார் மாதவியின் ஆசானையும் கவுரவிக்கிறார். அந்தப்பாடல்..

”ஆடலும் பாடலும் பாணியும் தூக்கும்,
கூடிய நெறியின கொளுத்துங் காலைப்–
பிண்டியும்,பிணையலும்,எழிற்கையும்,தொழிற்கையும்
கொண்ட வகைஅறிந்து,கூத்துவரு காலைக்–
கூடை செய்தகை வாரத்துக் களைதலும்
வாரம் செய்தகை கூடையிற் களைதலும்,
பிண்டி செய்தகை ஆடலிற் களைதலும்,
ஆடல் செய்தகை பிண்டியிற் களைதலும்,
குரவையும் வரியும் விரவல செலுத்தி,
ஆடற்கு அமைந்த ஆசான்-தன்னொடும்-
….”

பிண்டி-ஒற்றைக்கை அபிநயம்.இவை முப்பத்து மூன்று வகைப்படும்
பிணையல் -இரட்டைக் கையால் காட்டும் அபிநயக் குறிகள்.
இவை பதினைந்து வகைப்படும்.

எழில் கை-அழகாகக் காட்ட முயலும் கை முத்திரை
தொழிற்கை-ஒரு தொழிலுக்காக,அர்த்தமுடன் காட்டும் கை முத்திரை.

கூடை-குவிந்த ஒற்றைக் கை முத்திரை
வாரம்-இரெட்டைக் கைத் தொழில்கள்
குரவை -குரவைக்கூத்து,பலர் ஆடுவது
வரி -வரிக்கூத்து.

இது கதை தலைவன் பிறந்த நிலத்தன்மையும் பிறப்பிற்கேற்ற தொழில்
தன்மையும் தோன்ற நடித்தல் ஆகும்.மாதவியின் ஆடல் ஆசான் கூடை எனப்படும் ஒற்றைக்கை முத்திரை வாரம் எனப்படும் இரட்டைக் கை தொழில்களை உணர்த்துவதோடு கலக்காமல், அதேபோல் கூடையோடு வாரம் கலக்காமல் கற்பிக்க தெரிந்தவன்.

அதேபோல் அபிநயம் பிடித்த கைகள் ஆடலோடு கலக்காமல், ஆடல் அபிநயத்தில் கலக்காமல் நாட்டியம் பயிற்றுவிப்பவன். இன்னும் இவன் சிறப்பு என்னவென்றால் இவன் குரவை கூத்தை வரிகூத்தொடு கலவாமல் கற்பிக்கும் ஆற்றல் மிக்கவன்.

இத்தனை சிறப்புகளை கொண்ட மாதவியின் ஆடல் ஆசான் அந்த அரங்கத்திற்கு வந்தடைந்தான்.