பூனையும் மருத்துவமனையும்/முபீன்

பக்கத்து வீட்டுப் பூனையின் மற்றொரு பரிமாணத்தைக் காண நேர்ந்தது. சென்ற ஞாயிற்றுக் கிழமை மதியத்திலிருந்து சாப்பிடுவதை அது நிறுத்திவிட்டது. நடக்க முடியாமல் ஊர்ந்து சென்றது. ஏன் இப்படி இருக்கிறது என்று ஒரு விலங்கு மருத்துவரிடம் போனில் பேசிய போது ஏதாவது நோய்த் தொற்று இருக்கலாம் அல்லது நுரையீரல் பிரச்னை, வயிற்று உபாதை இருக்க வாய்ப்பிருப்பதாகச் சொன்னார்.

அடுத்த நாள் அதனை மருத்துவரிடம் எடுத்துச் செல்வது என்று முடிவு செய்து அதனை எடுத்துப் போக எங்கள் வளாகத்தில் வேலை செய்யும் ஒருவரை அழைக்க முடிவு செய்தோம். காலையில் இந்த முடிவு எடுத்த போது வீட்டின் முன் பகுதியில் இருந்த அந்தப் பூனை மாலை வரைக் காணவில்லை. மாலையில் மெதுவாக ஊர்ந்து படியேறி வந்தது. அந்த ஆளைத் தொலைபேசியில் அழைத்து எடுத்துப் போகச் சொல்லிவிட்டோம். உடனே அந்தப் பூனை வேக வேகமாக ஊர்ந்து படி இறங்கி எங்கோ ஓடி மறைந்துவிட்டது. அவரும் வந்து வளாகம் முழுக்கத் தேடிப் பார்த்தார். காணவில்லை. அடுத்த நாளும் காணவில்லை.
நான்கு நாட்கள் சாப்பிடாமல் எங்கே போயிருக்கும் என்று எல்லோருக்கும் ஆச்சரியமாக இருந்தது. அருகில் இருந்த பூட்டி இருந்த ஒரு வீட்டில் சத்தம் வருவதாகச் சந்தேகம் வந்தது. அதைத் திறந்து பார்க்க அண்டை வீட்டார் நினைத்திருந்தனர். மருத்துவமனைக்குப் போகக் கூடாது என்ற முடிவில் அது ஓடிப் போய்விட்டது புரிந்தது. ஐந்து நாட்கள் ஆகியும் சாப்பிடாமல் அது எங்கே இருக்கும் என நினைத்துக் கொண்டிருந்த போது காலையில் வந்து சத்தம் போடுகிறது. சாப்பிடக் கொடுத்தவுடன் சாப்பிட்டுவிட்டது.

எங்கள் வீட்டுக்கு எதிரே இருக்கும் குளம் பக்கத்தில் இருந்த மூலிகைச் செடிகளில் ஏதோ ஒன்றைச் சாப்பிட்டு இத்தனை நாட்கள் பத்தியம் இருந்திருக்கிறது. அதற்குக் குளிரில் தூங்கியதால் மூச்சு வாங்குவதில் பிரச்சினை இருந்திருக்கிறது. அதற்காக அதுவே மருந்தைத் தேடித் தின்று கொண்டு வந்திருக்கிறது.
மருத்துவமனைக்கு அழைத்துப் போனால் அது பாதகமாக முடியும் என்று அஞ்சி ஓடிப் போய் ஒளிந்துவிட்டது. அந்த எண்ணத்தை நாங்கள் கைவிட்டவுடன் மீண்டும் இங்கே வந்துவிட்டது. ஓரளவு சாப்பிடுகிறது.

மருத்துவமனைக்கு அழைத்துப் போகப் போகிறோம் என்பதை நினைத்தவுடனேயே அதற்குப் புரிந்துவிட்டது.
இது போல் மூளையின் அலைவரிசையிலிருந்து தங்களுக்குரிய பொருளைத் தருவித்துக் கொள்ளும் விலங்கின் அறிவிலிருந்து எந்த அளவுக் கற்றுக் கொள்ளவேண்டியிருக்கிறது என்பது புரிந்தது.

அது மட்டும் அல்லாமல் மருத்துவமனைக்குப் போவது என்ற அறிவீனத்தைச் செய்யவேண்டும் என நான்தான் முதலில் யோசித்தேன் என்பதால் அது என்னைக் குறைத்து மதிப்பிடுவதாகவே தோன்றுகிறது. அதன் அறிவிடம் அடிபணிந்து இருப்பதைத் தவிர வேறு வழியில்லை.

One Comment on “பூனையும் மருத்துவமனையும்/முபீன்”

  1. What a cute cat! Cats generally eat grass (to induce vomiting) or some other herbs when their illness requires a different
    treatment. This ,however, does not mean that they don’t need
    any medical help from humans. It is better to take them to a vet but carry them in a closed basket, making sure that they won’t jump out. You have to be with the cat during the trip to the hospital and back and when the vet is examining it. Speak
    to your pet in a soft voice assuring it of your love and support. she/he won’t protest.
    All the best for the cat and it’s owner!
    Jannavi

Comments are closed.