இடமாற்றம்/தி. சோ. வேணுகோபாலன்

காட்டு மலர்க்குலம்
நின்
கால் வழி
கருப் பெற
ஜீவ
ரசம் தரும்
விருந்து
இதயத்தில் உறங்கும்
இன்பப் பனித்துளி
உள்ளே
உதய ஒளி
ஊசியாய் உட்புகுந்து
உதிரம் பெருக்கித்
தன்
இளம் சிவப்பேற்றும்
ரஸவாதம்
தெரிந்த
தேனீ
மலை முடி
பனிச்சடை
புகுந்து புறப்படும்
குளிர்
தூய தென்றல்
தழுவு
மரக் கிளையின்
கீழ்
கருந் திராட்சைக்
குலைபோல்
ஆறு சுவர் வீட்டில்
இருந்து வளர்ந்து
சுவை தெளிந்து
இசை பயின்ற
தேனீ
நீ
ஆயினும்
நீ
ஈ!
……….
கா மறந்து
வண்ணக்
கதிர் மறந்து
ஜீவ
ரஸம் மறந்து
தூய
கால் மறந்து
இங்கு வந்த
தேன் நீ ?

கத்தரித்து
வெட்டிவிட்ட
நட்ட நடுப்
பாத்தியிலே
மரச்
சட்டங்கள் சேர்த்து
சதிசெய்த வீட்டுக்குள்
வந்த
தேன் நீ?

நின் நா
இன்பச்
சுவையறியும்
நா :
நா கரி கமற
முடியாமல்
திணறி
நகரம் எனும்
பெரும்
நரகப் புழுக்கத்தில்
வாட வந்த
தேன் நீ?

புத்தொளி தொட்ட
தென்றல் அல்ல :

பூமிக்குள்
புழுங்கி இருண்டு
வெந்து வெகுண்டு
கருத்துக் கிடந்த
பெட்ரோல்
டீஸல்
கனன்று கக்கிடும்
ஆவேசப் பெருமூச்சு
புகை
விஷக் காற்று!

புது மலர் அல்ல :

மனிதக் கும்பல்
கும்பிச் சுமை
குறைத்த கழிவில்
புழுத்த எருவில்
பிறந்த
அரிதாரம்
அதரச்சாயம்
பூசிய
பகட்டுப் பூக்கள்
மலடு!
உணர்ச்சியை உசுப்ப
ஓடி வரும்
உதயக் கதிரின்
உயிர் நிறம் அல்ல

உலோகத் திமிரை
ஒடுக்கி உருக்கும்
உதிர வண்ண
உலை வாய்
தீ!
கொல்லன் பட்டறை!
நீ
ஈ!
தேனீ ஆயினும்
நீ ஈ!
……..
உறங்கு தெண்ணீர்,
படிகப் பாளம்,
கண்ணாடிச் சில்,
காக்கைப் பொன் செதில்,
முன்னாள் மஸ்லின்,
இன்னாள் நைலான்,
ப்ளாஸ்டிக் பை,
ஒளி ஊடுருவும்
உன்னிரு
மன்மத
இறகால்
இசை பிறப்பித்து
உலவிய நீ
உருக்காலை
வந்ததேன்?

வெல்லம் காய்ச்சி
வெந்நீர் கலந்து
உன்தேன் என்றே
உலகே மாற்றும்
உலுத்தர் மத்தியில்
வந்த
தேன் ?
…..
2

பளிங்குச் சிறகில்
படர்ந்ததே
கரிப்புகை!
இசை தடுமாறி
நீ
வெந்து நொந்து
துவண்டு
மடிந்தாய் இன்று !
…..
ஓஹோஹோ என்று
ஊர் கூட்டித்
தத்தம்
பேர் நாட்டி
மேடை மிசை
உன்னிசையில்
கொஞ்சம்
மென்றுமிழ்ந்து
ஒப்பாரி வைத்து
ஓய்ந்து விட்டார்
எல்லோரும் !
சாகா
வரமுனக்குச்
சாஸனமா
செய்தார்கள் ?

புத்தம் புதுத்தேனீ
பிறப்பதற்கு முன்பே
பெட்டி புதுப்பித்து
மெழுகு
மணம் பரப்பிக்
காத்துக்
கிடக்கின்றார் !

அவர் எல்லாம்
அறிவுக்கண் கொண்டவர்கள் !
அங்காடிக்காரர்கள் !
ராஜரிகம் தேர்ந்தவர்கள் !
ரஸக்குருட்டுப் பேர்வழிகள் !
………..
கொல்லன் பட்டறை
புகழ் பாட
இசைமாறி
வசை பாட
போகாத ஊருக்குப்
போனாய்!
புழுதியிலே
நோகாமல்,
(அவரெல்லாம்
நோகாமல்)
உன்னை
நெருப்பில் கலந்து விட்டார் !
……..
தன்னியற்கை சூழலிலே
தனியின்பம் காணாமல்
புழுதி புரண்டால் –
வருவது,
புகழும்
நிலைத்த நினைவும்
அல்ல-
அழுகல் சொறிவாடை!

உனைவிட்டு
உன் குலமே
ஒதுங்கும்!

பக்குவம்/தி.சோ .வேணுகோபாலன் – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)

One Comment on “இடமாற்றம்/தி. சோ. வேணுகோபாலன்”

Comments are closed.