
க.நா.சு என்னும் ஒரு ஆளுமை
இலக்கியத்தின் எல்லா வடிவங்களிலும் (விமரிசனம் உட்பட) நவீனத்துவம் துரிதப்படத் துவங்கியதற்குக் கிரியா ஊக்கியாகவும், தாமே பலவற்றில் உதாரணமாகவும் இருந்த ஒருவர் க.நா.சுப்ரமண்யம். அவருடைய தீவிர விமர்சகர்கள் கூட அவரது திறமை, அறிவுக் கூர்மை, உழைப்பு ஆகியவற்றையும், தமிழிலக்கியத்துக்கு அவர் கொடுத்த பெரும் கொடைகள் பற்றியும் குறை சொல்வதில்லை.
உலக இலக்கியம் என்பது ஓர் இயக்கமாக உருவெடுக்க வேண்டுமென்ற சிந்தனையைத் தமிழில் முதன்முதலாகப் புகுத்தியவர் க. நா. சு.தான். இதற்கான வழி வகைகள் என்னவென்று சிந்திப்பது தன்னைப் போன்ற இலக்கியவாதியின் கடமையென்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது. உலகத்தில் எந்த மொழியில், எந்தப் பகுதியில் மிகத் தரமானது. உயர்ந்தது, சிரேஷ்டமானது வந்திருந்தாலும் அது உடனடியாகத் தமிழில் மட்டுமல்ல, தமிழ் போன்ற எல்லா மொழிகளிலுமே வருவதற்காக வழிவகைகள் வகுத்துக்கொள்ள வேண்டும்’ என்ற க. நா. சு. தமிழுக்கு அறிமுகப்படுத்திய, மொழிபெயர்த்த எழுத்தாளர்கள் மற்றும் படைப்புகளின் தேர்வு மிக முக்கியமானது. கிரேஸியா டெலடா, ஸெல்மா லாகர்லெவ், பேர் லாகர்க் விஸ்ட் போன்ற நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர்களைப் பெரும்பாலும் அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே தமிழில் மொழிபெயர்த்துத் தந்திருக்கிறார். வணிகப் பத்திரிகைகள் பிரபலமான, பெரும் வாசகர்களைக் கொண்டிருந்த ஆங்கில எழுத்தாளர்களின் கதைகளை மொழிபெயர்த்து வெளியிட்டுக்கொண்டிருக்கையில் க. நா. சு. முதன்முதலாகக் கிழக்கு ஐரோப்பிய எழுத்தாளர்களின் புத்தகங்களைத் தமிழில் கொண்டு வந்தார். இங்கிலாந்து மற்றும் அமெரிக்கப் படைப்புகளை வாசிக்கையில் ஒருவித அந்நியத் தன்மையை உணர்வதாகவும் கிழக்கு ஐரோப்பிய வாழ்க்கை முறைக்கும் ….தமிழ் வாழ்க்கை முறைக்கும் இடையில் ஏதோ ஒற்றுமை இருப்பதாகவும் அவர்கள் தமது குடும்பம் சார்ந்து பேசினாலும் நம்மால் அதை உணர்ந்துகொள்ள முடிகிறது என்றும் க. நா. சு கூறியதாக சுந்தரராமசாமி தனது நினைவோடையில் குறிப்பிடுகிறார்.
க.நா.சு-வின் பெயரில் அமைந்திருக்கிற ‘க’அவருக்கு தனித்த சிறப்பைத் தருகிறது. எவ்வகையில்?. தமிழ் நாட்டில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வேதியர் குலத்தில் குறிப்பிடக் கூடிய ஒரு சொல் ‘கந்தாடை’. கந்தாடை என்பதற்கு தூண் என்று பொருள். எவ்வாறாயினும் பல விளக்கங்கள் பலரால் தரப்படுகின்றன.
எனினும் இவரது முன்னோர்கள் கந்தாடை என்று அழைக்கப்பட்ட தூணில் கட்டப்பட்ட பட்டாடையை பெறும் உரிமையுடையவர்கள் என்று பொதுவாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இவரது முன்னோர்கள் வைணவத்தைத் தழுவினார்கள் என்றும் ஸ்ரீராமானுசரின் சீடர்களில் முதன்மையானவர் முதலியாண்டான் என்பவர் குறிப்பிடத்தக்கவர். இவரைப் பற்றிய குறிப்புகள் சீரங்க நாயகர் ஊசலில் மணவாள தாசர் காட்டுகிறார் “கந்தாடைக் குலதீபன் முதலியாண்டான் கடல் ஞாலம் திருத்தியருள் கருணை பாட” என்று வருகிறது என்பதாகும். இவருக்கு பெருமையை அளிக்கும் விதாமாக ‘கந்தாடை’ நாராயணசுவாமி மகன் சுப்ரமணியன் என்பதின் சுருக்கமே க.நா.சு. அதனை மறக்காது தனது உயில் கவிதையிலும் பதிவு செய்திருக்கிறார்.
கந்தாடை முதலியாண்டானுக்குப் பிறகு தமிழ் இலக்கிய உலகில் தனித்தடம் பதித்தவர் கந்தாடை நாராணசுவாமி சுப்ரமணியம் என்ற க.நா.சு தான் என்பதில் யாரும் மறுத்துக் கூற இயலாது.
“எனக்கும்;
கவிதை பிடிக்காது. மனிதன் எத்தனையோ
எட்டுகள் எடுத்து வைத்துவிட்டான். இவற்றில்
எத்தனை எட்டுக்கள் கவிதையில்
சாத்திய மாயின?
பின்
எதற்காத்தான் கவிதை தோன்றுகிறது?”
மொழியின் மழலை அழகுதான்
ஆனால் அது போதவே
போதாது,
போதுமானால் கவிதையைத் தவிர வேறு
இலக்கியம் தோன்றியிராதே”
“அதனால்
தான் நானும் கவிதை எழுதுகிறேன்.
மனிதர்க்குக் கலை எதுவும் திருப்திதராது
மேலே, மேலே என்கிற ஏக்கத்தைத் தான்
தரும் “
- க.நா.சு
