போர்/தி. சோ. வேணுகோபாலன்

கொள்ளிக் கண்
முளை கருக்கும்
கொடூரப் பாறை :
பச்சை பொறுக்காத
பாழ் நிலம் :
சாம்பல் சிரிப்பில்
செங்குருதி வழிந்துறையும்
துளைத்தேகம் :
‘ மாரி’ ஆடிய முகம் !
ககனக் கடல் கொட்டும்
மழைமுள்
தைக்காத
முரட்டுத் தோல் ;
புள்ளிறகாய்
நீர் உதறும்
பிசுக் கறியாக்
கல்லிதயம் !
…………
மூர்க்கமாய் மோதிச்
சிதறி
அலை அலையாய்
முணுமுணுக்கும்
சூட்டில்
இறுகிய இதயம்
முனிந்து முகம் கறுக்க

அடங்கா மழைக்கால்
உதையால்,
சுடு கண்ணாடி
படுநீர் விளைவாய்,
விரிசல்
கண்டு திரும்
தோல்.

ஆவேசக் காற்று
அள்ளிக் கூட்டி
குழிக்குள் நிரப்பும்
குப்பை
மண்,

மாறி மாறி
மழை
சூடு
காற்று
சீறிப் படையெடுக்க

சிலிர்க்கும் பச்சை

ஆழக் குழிக்குள்
புகுந்த விதை
வேர் விட்டு
விசுவ ரூபம்
எடுக்கத் துடிக்கும்
…….
பச்சை கறுக்க
மடிந்தவை பலப்பல :
மூச்சடக்க முயன்று
முரண்டி
முரசடித்து –
முளைக்கச் சூழ்நிலை
அமைத்த
மழை, சூடு, காற்று

இவையே
மண் இளக்க,
முகம் கறுக்க,
முது கொடிக்க.
(கல்லிதயம்
கெக்கலிக்க)
மாண்டவை சில.
அபிமன்யு !

அர்ச்சுனனாய்,
அறிவுக் கண்ணன்
துணை கொண்டு

போர்க்களம் புகுந்தான்
மனிதன் !
புடைத்தன வெற்றியில்
மரங்கள் !
கிழடு பட்டது
கல் !

இடமாற்றம்/தி. சோ. வேணுகோபாலன் – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)