
தேவனின் ‘சின்னஞ்சிறு சிறுகதைகள்’ என்று அரைப் பக்கக் கதைகள் கொண்ட புத்தகம் ஒன்று வாசித்திருக்கிறேன். Flash Fiction என்ற ஒரு புனைவு வகை இப்போது பிரபலமாகி வருகிறது (முன்னமேயே இருக்கலாம் – எனக்கு இப்பொதுதான் தெரிகிறது!). மிகச் சிறிய அளவிலான புனைவுகள் – குறுங்கதைகள் – ஒரு சின்ன கருவுடனோ, பாத்திரங்களுடனோ அமைக்கப் படுகின்றன. இரண்டு வார்த்தைகள் முதல் 55 வார்த்தைகள் என ‘வார்த்தைகள்’ வரையறைக்குள்ளாகவோ, ‘அஞ்சலட்டை’ போன்ற இட அளவிலோ, எதைப் பற்றி வேண்டுமானாலும் புனையப் படுகின்றன! சுவாரஸ்யமும், முடிவில் வாசகனுக்கு ஏற்படுத்தும் திகைப்பும் முக்கியம். சடன் ஃபிக்ஷன், ஃப்ளாஷ் ஃபிக்ஷன், மைக்ரோ ஃபிக்ஷன் எனப் பல பெயர்கள். இப்படிப்பட்ட கதைகளுடன், ஹைகா, ஹைபுன், 55 வார்த்தைக் கதைகள் என சுவாரஸ்யமாக சுஜாதா பேசும் புத்தகம் “சிறு சிறு கதைகள்”.
“பொதுவாக 64 வார்த்தைகள், சில சமயம் 32; சில சமயம் 10. இரண்டு வார்த்தைகளில் கூட ஒரு சிசி கதை எழுதலாம்” என்னும் சுஜாதா சொல்லும் ஓர் உதாரணம்:
தலைப்பு: கரடி வேஷம் போட்டவனின் கடைசீ வார்த்தைகள். கதை?
“ஐயோ சுட்டுடாதே!”
‘ஹைபுன்’ – ஒரு வர்ணனை அல்லது நடைச்சித்திரம்; அதைத் தொடர்ந்து இறுதியில் ஒரு ஹைக்கூ கவிதை இருக்க வேண்டும். கனடாவிலிருந்து ரே ராஸ்முசென் எழுதிய பரிசு பெற்ற கதையை உதாரணமாகச் சொல்கிறார்: அலுவலகத்தில் கடைசி தினம் எல்லாவற்றையும் எங்கோ எடுத்துச் சென்றுவிடுகிறார்கள் (36 வார்த்தை கதை) இறுதியில் ஹைக்கூ:
குளிர்காலம் முடிந்தபின்
எத்தனை விரைவாக
பனி உருகுகிறது.

‘ஹைகா’ என்பது அருமையான படத்திற்காக எழுதப்படும் ஹைக்கூ கவிதை. படம் என்ன என்பதை யூகிக்கும்விதமாக இருக்கும் கவிதைகள்!
குரல் இல்லையேல்
வெள்ளைக் கொக்குகள்
காலை வெண்பனியில்
மறைந்து விடும்
பெர்க்லி பல்கலைக் கழகம் நடத்தும் மாதாந்திர ‘உடனடிக்கதை’ போட்டிபற்றி குறிப்பிட்டுவிட்டு, “நான் எழுதிப் பார்க்கலாமென்றால் எனக்கு இங்கிலிஷ் போதாது” என்று தன் முத்திரையைப் பதிக்கிறார்! ட்ராகுலாத்தனமான, கவித்துவமான என இரண்டு உதாரணங்கள் தருகிறார்.
‘The World’s Shortest Short Stories’ புத்தகத்தை அறிமுகம் செய்துவிட்டு, 55 வார்த்தைக் கதைகளைப் பற்றிச் சொல்கிறார். காதல், விஞ்ஞானம், சஸ்பென்ஸ், யதார்த்தம் என எதுவானாலும் இருக்கலாம். – ஒரே விதி 55! உதாரணம்:
“ஏன்” என்றாள்.
“அஞ்சு, நாம பிரியறதுதான் ரெண்டு பேருக்கும் நல்லது”
“நீயில்லாமெ நான் செத்துருவேண்டா”
சேகர் அவள் கையை அழுத்தினான். “இல்லை, நல்லாவே சமாளிப்ப நீ….எனக்குத் தெரியும்”.
பில் கொடுத்துவிட்டு உதட்டை அழுத்திக்கொண்டு கண்ணீரைக் கொன்று திரும்பிப் பார்க்காமல் கிளம்பினான்.
அஞ்சலி அவன் அந்த வெயிட்டரைக் கடந்து செல்வதைப் புன்னகையுடன் பார்த்தாள்.
“வேற ஏதாவது ஆர்டர் பண்ணனுமா மேடம்?” அவனை நிமிர்ந்து பார்த்தாள். “இத்தனை அழகா இருக்கானே…. இதுவரை கவனிக்கவே இல்லையே!”
இந்தச் சிறுசிறுகதையில் வாசகன் சிந்திக்க நிறையவே உள்ளன – காதல், துரோகம், ஏமாற்றம், Fickle mindedness, அழும் ஆண் என ஒரு நாவலுக்கான விஷயங்கள் உள்ளன!
கடிதங்கள் மூலமாகக் கதை சொல்வதில் ரா.கி.ரங்கராஜன் (‘ஹம்ஸா’) சமர்த்தர். நிறைய நகைச்சுவைக் கடிதக் கதைகள் எழுதியுள்ளார். கடிதக் கதைகள் நாடகமாக படிக்கப்படுவதைத் தன் பாணியில் சுஜாதா விவரிப்பது அழகு!
Robley Wilson எழுதியுள்ள கதையை, ‘திருடன்’ என்ற பெயரில் சுஜாதா எழுதியுள்ளார். சிறு சிறு கதைக்கு சரியான உதாரணமாக உள்ளது.
வயலின் கதையின் முடிவு சற்றும் எதிர்பாராதது. ஓஹென்றித்தனமானது! பூ, ஒரு திருமணம், போஸ்ட் கார்டு கதைகள், இல்லம், படுக்கை பூரா ரத்தம், அக்னி சாட்சி என சுவாரஸ்யமான சிசி. கதைகள்.
ரா.ஶ்ரீனிவாசனின் ‘கணத்தோற்றம்’ கவிதைத் தொகுப்பில் (விருட்சம்) உள்ள ‘பொட்டு’ என்னும் கவிதை சிசி கதையாக உள்ளது !
ஒரு போஸ்ட் கார்டிலோ, இன்லாண்ட் லெட்டரிலோ நம்மை சிறு சிறு கதைகள் எழுதத் தூண்டும் தொகுப்பு!
சுவாரஸ்யமான தொகுப்பு. சுஜாதாவின் முத்திரை பதித்த சிறு சிறு கதைகள். வாசிக்கலாம்.

அருமை