கடையில் வாங்கிய
குடைகள் இரண்டு
எங்கோ சென்றவன்
பார்த்தான் குடைக்கடையை
விதவிதமாய்க் குடைகளைக் கண்டு
தலைகளாய் எண்ணி
வாங்கினான்
கல்லூரியில் படித்த
நண்பனின் வீட்டிற்கு
ஒருநாள் குடை சகிதமாய்ச் சென்று
(அன்று மழை)
திருமண அழைப்பிதழ் தர
நின்றிருந்த மழை
ஞாபகமூட்டவில்லை குடையை
வீட்டிற்கு வந்தவுடன்
அம்மா குடைய
குடை குடை என்று பறந்தான்
திருமணத்திற்கு அளித்த யாத்திரைக்
குடையை வைத்திருந்தான் சிலகாலம்
உடைந்த குடைகள் வீட்டின் மூலையில்
பழைய கதைகளைப் பேசின
கடைக்குக் குடையுடன் சென்றால்
தொலைக்காமலிருப்பது அபூர்வம்
ஒருதடவை மாற்றி பெண் குடையுடன்
வந்ததுண்டு (புடவைக் கடைக்குச் சென்ற
அன்று) வீட்டில் ஒரே சிரிப்பு.
மழை வரும் காலத்தில்
குடை காணப்படுவதில்லை
(அபூர்வம் மழை என்பதால்)
புதல்வியும் புதல்வனும்
மழையில் நனைய
குடை அவசரம்
ஆனால் தட்டுப்படப் போவதில்லை
உள்ளுறுப்புகளை நனைத்தபடி
அவனும் செல்வான் அலுவலகமொன்றுக்கு
அவனுக்கும் அவளுக்கும்
வரும் சண்டை
குடை குடையெனக் குடைய
ஞாபகம் வேண்டும் வாங்க
என்றால் மழையைக் காணோம்
வெயில் தகிக்க
இப்போது
ஞாபகம் வந்து வாங்கிய குடைகள் இரண்டு