புனித ஜோதி கவிதைகள்

கவிதை 1

மழையில்லாத பொழுதுகளிலும்
உன் நினைவு மழையால்
நனைந்துக்கொண்டிருக்கின்றேன்.

மழைக்காலத்தில்
சொல்லவா வேண்டும்
உன் நினைவுத்தாவணியில்
வாடையை அணைக்கின்றேன்…

ஐம்பூதங்களில் சீற்றம்
என்ன செய்யப்போகிறது?
நீ தான்
என் நாடி பூதமாயிற்றே…

உன் மௌன யுத்தத்தை விடவா
பெரிய யுத்தத்தை
இந்த பிரபஞ்சம் கண்டுவிடப்போகிறது….

என்
காதல் தேசத்து
நீலாம்பிரியே…

கிளைகள் அடர்ந்த
மரமென்றாலும்
மழை விட்டுவிடவா போகிறது
இச் சிறுகூட்டை….

சிறகில் மேற்கூரை
அமைத்து குஞ்சுகளை
காக்கும் தாய்பறவையல்லா
நீ எனக்கு….

கவிதை 2

இதுவும் கடந்துபோகும்

இப்போதெல்லாம்
எல்லாம் மாறிவிட்டது…

வெள்ளைப்புடவை
வண்ணப் புடவையாய்
மாற்றிவிட்டாள்..

வெற்று நெற்றி மேடையில்
வண்ணத்திலகக் கொடியைப்
பறக்க விடுகின்றாள்….

கருமேககூந்தலில்
நட்சத்திரப் பூக்களை
சூடிக் கொள்கின்றாள்..

ஆனால்….

விழிகளில் பாயும்
அம்பில்….
சதியில் விழுந்த
உயிராய் தவிக்கின்றாள்…

கண்டும் ,கேளாமல்
வெற்றுக்கூடாய்
கடக்கின்றாள்….

கவிதை 3

ஓட்டம்

விரல்களில் தழுவிய
எண்ணெய்…
நாசியை அடைந்த
நறுமணம்…
நாக்கின் சுவைஅரும்புகள்
மலர்ந்து நிற்கும் தருணம்…
சுவைக்கு முன்
தட்டிப்பறித்து
பறந்துவிடும் காக்கையாய்
காலம்….

One Comment on “புனித ஜோதி கவிதைகள்”

Comments are closed.