
“என்னங்க, காலைலேர்ந்து எதையோ பறிகொடுத்தாப்பலே உட்கார்ந்து, சீலிங்கையே முறைச்சிக்கிட்டு இருக்கீங்களே, உடம்பு கிடம்பு ஏதாவது சரியில்லையா?”
“உடம்புக்கென்னா, நல்லாத்தான் இருக்குது. இன்னும் ரெண்டு நாளிலே ஒரு கதை எழுதணும் – ஆபீஸ் ‘இலக்கிய முத்தம்’
சிறுகதைப் போட்டிக்கு! அதுதான், தீவிரமா யோசிச்சுக்கிட்டு இருக்கேன்!”
“இலக்கியத்துலெ முத்தமா?”
“இலக்கிய முற்றம் தான் முத்தமா மாறிடிச்சு!”
“அதுக்கெதுக்கு சினிமாத் தீவிரவாதி மாதிரி முழிக்கிறீங்க? ஒரு கதை எழுதறதா உங்களுக்குக் கஷ்டம்?”
“எழுதணும்ன்னு ஒரு இலக்கு வெச்சுக்கிட்டு எழுதினா சரியா வராது ப்ரோ. உனக்கா தோணும்போது எழுது – நீ கதை எழுத ஆரம்பிச்சதிலேர்ந்து, எப்பப் பார்த்தாலும் எதையோ பறிகொடுத்தா மாதிரி, இல்லே எதோ பாரத்தை சுமந்துகிட்டு இருக்கறாமாதிரி, நெத்தில சுருக்கங்களோட, புன்னகை மறந்து திரியறே. உடம்ப பார்த்துக்கோ மாப்ளே – கதையா காப்பாத்தப் போகுது?”
இவர்கள் பேசுவது ஏனே சாரங்கனுக்குப் பிடிக்காது. “எழுதி என்ன சாதிக்கப் போறோம்? பேரு கிடைக்குமா, பணம் கிடைக்குமா? ஜனங்க, எவ்வளவு நாளைக்கு நம்ம கதையையோ, நம்மையோ நினைச்சுகிட்டு இருக்கப் போறாங்க? இது என்ன ஒரு ஆசை?” இப்படியெல்லாம் யோசிச்சா, படைப்பு எங்கிருந்து வரும்? இனிமே, இவங்க கிட்டே நாம எழுதறதப் பற்றிப் பேசவே கூடாது என்று நினைத்துக் கொள்வான் – நினைப்போட சரி. அடுத்த படைப்போட, மறுநாளே ஆபிஸ்ல அவங்க டெஸ்குக்கு முன்னாலே போய் நிற்பான் சாரங்கன். அங்கீகாரம் தேடும் மனது!
யாரோ கை தட்டிக் கூப்பிட, நினைவுக்கு வந்தவனாய்த் திரும்பிப் பார்த்தான் – அவன் மனைவிதான். “எங்கே போய்க்கிட்டு இருக்கீங்க நம்ம வீட்ட தாண்டி?” – கதைக் கரு அவனை அலைக்கழித்தது!
“சாரிம்மா, ஏதோ நெனப்பிலே வீட்டைத் தாண்டிப் போயிட்டேன்”
“என்ன, கதையப் பற்றின கனவா?” காய்கறிப் பையைப் பிடுங்காத குறையாக, வாங்கிக்கொண்டு உள்ளே போனாள் மனைவி.
இன்னும் இரண்டே நாட்கள்தான் உள்ளன. கதை எழுதி மெயிலில் அனுப்பணும். கதைக்கு நாட் – கருவே கிடைக்கவில்லை. சரி, இந்தமுறை விட்டு விடலாம் என்றாலும் மனது கேட்கவில்லை. ‘இது என்ன குடிகாரன் போல ஒரு வெறி. எழுதாட்டாதான் என்ன?’
அந்தப் பெரிய ஹாலில் நல்ல கூட்டம். பெரிய எழுத்தாளர்கள் என்று பெயர் பெற்ற இரண்டு மூன்று ஆளுமைகள் மேடையில் இறுக்கத்துடன் அமர்ந்திருந்தார்கள். இலக்கிய முத்தத்தின் காரியதரிசி இன்முகத்துடன் வரவேற்புரை வாசிக்க, மாலை, நினைவுப் பரிசு என ஒரே அமர்க்களம். கோலாகலமாக நடந்துகொண்டிருந்த விழாவின், முக்கியமான பகுதி – சிறுகதைப் போட்டி முடிவுகள் அறிவிக்கும் தருணம் வந்தது. மைக்கில் , “போட்டியில் முதற்பரிசு …….”
கொசு கடிக்க, விழித்துக்கொண்டான் சாரங்கன். நாளைக்குதானே விழா… சே..என்ன கனவு?
காத்திருக்கிறான் சாரங்கன்!

அட பாவமே, எனக்கு வரும் கனவுகளைத் தான் நீங்களும் காண்கிறீர்கள் போலும்!
அருமை
முத்த இலக்கியம்!
அருமை
முத்த இலக்கியம்!
அருமை. முற்றம் திறந்து இருந்தால் தானே வீட்டுக்கு அழகு? அதனால்தான் கதையும் திறந்த வாக்கில் மூடப்பட்டு இருக்கிறதோ?
கதை எடிட் செய்யப்பட்டுள்ளது! பார்க்கும் இடங்களிலெல்லாம் கதைக் கருவுக்கு அலையும், எதையும் உற்று நோக்கும், வித விதமான விமர்சனங்கள் குறித்தும் எழுத்தாளர் படும் அவஸ்தைகள் எடிட் செய்யப்பட்டுவிட்டன.
வாழ்த்துகளுக்கு நன்றி.
கதை எடிட் செய்யப்பட்டுள்ளது! பார்க்கும் இடங்களிலெல்லாம் கதைக் கருவுக்கு அலையும், எதையும் உற்று நோக்கும், வித விதமான விமர்சனங்கள் குறித்தும் எழுத்தாளர் படும் அவஸ்தைகள் எடிட் செய்யப்பட்டுவிட்டன.
வாழ்த்துகளுக்கு நன்றி.