துளி – 241//அழகியசிங்கர்

ஆரபி இன்று அமெரிக்கா போய்விட்டாள்..

நேற்று முழுவதும் நான் பரபரப்பாக இருந்தேன். ஒரு மாதம் லீவு எடுத்துகொண்டு  வந்திருந்த என் புதல்வன் திரும்பவும் அமெரிக்கா பயணமானான். அவன் இங்கு வந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது.
என் பேத்தி ஆரபியும் தயாராக இருந்தாள். சென்னை வரும்போது புரியாத அமெரிக்க ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருந்தாள். 
எங்களுடன் பழகியபிறகு தமிழ் கற்றுக்கொண்டாள்.  எதாவது விளையாட்டில் நாங்கள் யாராவது அவளுக்குப் பிடிக்காததைச் செய்தால், போங்கு என்று கூறுவாள்.
அவள் பேசும் தமிழே அழகுதான்.  எப்போதும் குழந்தைகள் பார்த்து மகிழும் குழந்தைகள் சானலைப் பார்த்துக்கொண்டிருந்தாள். 
ஒருமுறை என் பையன் அவளிடம் ஒரு வெள்ளைத்தாளைக் கொடுத்து எதாவது படத்தை பெயிண்ட்  அடிக்கச் சொன்னான். 
அவள் வரைந்த ஓவியத்தைத்தான் நான் முகநூலில் போட்டிருந்தேன்.முகநூலிலல் பலரும்  பாராட்டினார்கள். பிரமிப்பான உணர்வை உருவாக்கியது.
காலையில் மெதுவாகத்தான் எழுந்து கொள்வாள்.  உடனே என் மடியில் உட்கார்ந்து விடுவாள்.
என் மகன் அரவிந்த் மச்சினன் திருமணத்திற்காக வந்தவன்.  ஒரே அலைச்சலால் அல்லாடிக்கொண்டிருந்தான். அமெரிக்காவிலேயே பூஸ்டர் ஊசியையும் போட்டுக் கொண்டு வந்தான்.
நானும் மனைவியும் கோயம்புத்தூரில் நடக்கும் அவன் மச்சினன் திருமணத்திற்குக் கிளம்பினோம்.  இரவு நேர ரயிலில் .  பாதி தூரம் போனபோது தாங்க முடியாத குளிர்.  வெடவெடவென்று நான் சரியாகத் தூங்கவில்லை.
உறவினர்கள் பலர் சுரத்துடனும் சளியுடன் இருமலோடு பயணம் செய்தார்கள்.  கூட்டம் அதிமாகக் கூப்பிடவில்லை. எனக்கும் மனைவிக்கும் முன்பே சுரம் வந்துவிட்டதால் எங்களை சுரம் தாக்கவில்லை.  டோலோ 650 யை எல்லாம் விழுங்கிக் கொண்டிருந்தார்கள்.
யாரும் டாக்டரிடம் கூடப் போகவில்லை.  3 நாட்கள் திருமணம் சிறப்பாகவே நடந்தது.
எல்லோரும் திரும்பி வந்துவிட்டோம்.  என் மகன் ஒரு நாள் உறவினர் வீட்டிற்குப் போனான்.  அடுத்தநாள் அவனுக்கு சுரம்.  வீட்டிலேயே ஒரு நாள் முழுவதும் இருந்தான்.  அடுத்தநாள் அவனுக்கு சுரம் இல்லை.  சுறுசுறுப்பாக மாறிவிட்டான்.  
போனவாரம் அவன் ஏர் டிக்கட் புக் செய்திருந்தான்.  அவன், அவன் மனைவி, ஆரபிக்கு கோவிட் டெஸ்ட் எடுத்தான்.  அது எடுத்தால்தான் விமானத்தில் பயணம் செய்ய முடியும்.  அதில் அவனுக்கு மட்டும் பாஸிடிவ்.  மற்ற இருவருக்கும் இல்லை.
மூவரும் போகவில்லை. (அவன், அவன் மனைவி, ஆரபி)அவன் பயணம் தள்ளிப் போய்விட்டது.  கார்ப்பரேஷனிஙூருந்து வந்து எனக்கும் என் மனைவிக்கும் கோவிட்  டெஸ்ட் எடுத்தார்கள்.   பக்கத்து வீட்டில் உள்ளவர்களுக்கும் எடுத்தார்கள். யாருக்கும் ஒன்றுமில்லை  உண்மையில் பையனுக்கும் ஒன்றுமில்லை.  
ஒருவாரம் வீட்டிலேயே இருந்தான்.  எங்கும் போகவில்லை.  நான் வியாழக்கிழமை டிக்கட் புக் செய்யச் சொன்னேன்.  திரும்பவும் பிரிட்டிஷ் ஏர் வேஸில் டிக்கட்டைப் பதிவு செய்தான்.  
கோவிட் டெஸ்ட் திரும்பவும் நேற்று எடுத்தான்.  எல்லாம் நெகடிவ்.  இதோ இன்று கிளம்பி விட்டான். ஆரபியும் உற்சாகமாகக் கிளம்பிவிட்டாள். 
இன்னொரு ஓவியம் வரையும்படி ஆரபியைக் கேட்டேன். வெள்ளைத்தாளை எடுத்து கருப்புக் கலரில் பெயின்ட் அடித்தாள். சரியில்லை என்றேன்.”
மூன்றாவது தாளில் வரைந்து தள்ளினாள்.  அது அற்புதமாக இருந்தது.  இதோ இங்கே உங்கள் பார்வைக்குக் கொடுக்கிறேன். அதன்பின் அவள் வரைந்த ஓவியங்கள் எல்லாம் விசித்திரமாகப் பட்டன்.  நான் பத்திரப்படுத்தி வைத்துள்ளேன்.  எதற்காகவாவது பயன் படுத்திக்கொள்ளலாம்.  
ஆரபி அமெரிக்கா செல்லும்போது ஆங்கிலத்தில் தன் உரையாடலை மாற்றிக்கொண்டாள்.  ஆரபி ‘புகைப்படத்திற்கு போஸ் கொடு என்றால் முகத்தை எங்காவது பார்ப்பதுபோல் வைத்துக்கொள்வாள்.

4 Comments on “துளி – 241//அழகியசிங்கர்”

Comments are closed.