பால்யம்/வசந்ததீபன்

குருவி வேட்டையாடப் போனோம்…
கவட்டை , கல் சகிதம்
வெக்கை பிய்த்து குதறுகிறது
ஆளுக்கொரு சாமான்
களவாடியது
கசங்கிய காகிதத்தில்
சுருட்டப்பட்டிருந்தது
தீப்பெட்டி, குச்சி
மிளகாய் , உப்பு என..
கருவேலமுள் குத்திக் குத்தி
பாதங்களில் இரத்தப் புள்ளிகள்
வலியூற
குமிழ் விடுகிறது
ஒரு ஈக்குஞ்சைக் கூட காணோம்
நாக்குகள் உலர்ந்து உலர்ந்து
மனசுகள் பொடிகிறது
சேக்காளி ஒருவன்
பம்மி
அரவம் காட்டாதேயென
எச்சரிக்கிறான்
அவன் கல்வீச்சில்
துளிசிறகை மட்டும்
சிந்தி விட்டுப் போனது
அந்த மஞ்ச வண்ணக் குருவி
காற்றில் நடனமாடி வரும்
அதனை
கைப்பற்றும் மும்முரத்தில்
வேட்டை பற்றிய எண்ணம்
எங்களுக்கு மறந்து போனது.