
மின்னல் எனில் பாய்ச்சல் வேகம்
மின்னல் ஓர் இன்ப அதிர்ச்சி
மின்னல் ஒரு குறுகிய நேரத்திற்கு மட்டுமான செல்வம்
தேவதையின் திடீர் வருகை திடீர் மறைவு
மழை அதிகாரியின் வருகைக்கு முன்னோட்ட வாகன விளக்கு
……
கோடிட்ட இடங்களில் என்னவும் நிரப்பிக் கொள்ளுங்கள்
ஓரிடம் இருக்கட்டும் நிறைவாக
மறைவாக
மழை வருவதாக ஏமாற்றி
மண் வாசம் மட்டும் விட்டுப் போன ஓரிரவில்
திடுமென்று
ஊரை விட்டு காலி செய்து போகிற சேதி
வந்து வாசலுக்கு விரையுமுன்
புறப்பட்ட வாகனத்தில்
பளீர் என்று வீசி
மறைந்த
அந்தக் கடைசி மின்னல் பொத்தி வைக்க!

நன்று. குறுங் கவிதை சிறப்பு மிக்க கவிதை.
Silver lining among sable clouds என்று ஆங்கிலத்தில் மின்னலை வர்ணிப்பார்கள். நம்பிக்கையின் அடையாளம் மின்னல்! காதலி தோன்றி மறைவதை மின்னலென வெட்டிச் சென்றாள் என்று காதலன் வர்ணிப்பான். இன்றைய இருள் சூழ்ந்துள்ள இந்தியாவில் மின்னல்கள் வெட்டட்டும். நம்பிக்கை ஒளி பாயட்டும்!
இயற்கையின் தூரிகை
வானில் இருந்து மண்ணுக்கு.
உங்கள் கவிதை அருமை.
பொத்தி வைத்த மின்னல் ஒளி கசிய தரையெங்கும் ஒளிக்கோலம்.
சட்டென்று தோன்றிய மின்னல் கவிதை
மறையாது என்றும் மின்னலை போல
வானத்தை போல பார்க்கையில் மின்னல் ஓளிர்வில் தெரிந்தது நாளையும் நமதே
பொத்தி வைத்த மின்னல் வெட்டு நெஞ்சைத் தொட்டுச் சென்றது விட்டு!
உணர்வு மிக்க வரிகள். வாழ்த்துக்கள் 💐