வலி உணர்தல்/அதங்கோடு அனிஷ்குமார்

எதனோடும் ஒட்ட
மறுக்கிறது மனது.

சாய்வதற்கான
பிடிமானங்கள்
கண்களின் தூரத்திற்கு அப்பால்.

சிதறு தேங்காய்யென
உடைந்து போயிருக்கும் மனது
வலிகளைப் பிரசவிக்கிறது.

வலிகள்
பித்துப் பிடித்தவர்கள் போல் திக்கற்று
அலைகின்றன
உடல் வெளியெங்கும்.

வலியுணர்த்தும்
வார்த்தைகளற்ற பெருவெளியில்
உதடு கடக்கத் துடிக்கும்
ஓலங்களை
உதடு கடித்து
உள்ளுக்குள்
அடக்குகையில்
கண்களிலிருந்து வழிகிறது
வலிகளின் குருதி.

இந்த நொடியை கடத்துவதற்குள்
நாவறண்டு போகிறது.

அடுத்த நொடிக்குள்
என்னை
கொண்டு சேர்க்கும்
ஒரு சமிஞ்சைக்கான
காத்திருப்பில் தொலைகிறது
காலம்.

வலிகளை
கைமாற்றி விடுதலின்
சாத்தியங்களில்லை
எனினும்
நம்பிக்கையின்
சிறகை விரிக்கும்
ஒரு குறுநகையைக் கூடவா கொடுத்துதவ முடியாது உங்களால்?