தளர்தல்


ஆர். வத்ஸலா

பகலிலே இரவு
போர்த்து முடங்கிய வானம்
பற்றி எரியும் மேகம்
மூடும் இமைகள்
வறண்ட சிந்தனை
மரத்துப் போன உடல்
கனத்துப் போன மனம்
காற்றுக்கு சிறை

முதல் துளி
உடன் உறிஞ்சிக் காயும் பூமி
மூச்சிரைக்கத் தொடரும்
துணைத் துளிகள்
சிலிர்க்க வைக்கும் மின்னூசிகள்
கண் கூசும்
ஒளிச் செல்வம்
முக்கண்ணன்
முடி தேடும்
ஆகாசகங்கை

நிறைந்த பூமி
அலட்சியமாய் உமிழும் நீர்
மேகத்தின் மேளம்
மனதின் நர்த்தனம்
காற்றுக்கு விடுதலை
இயற்கையின் தளர்தல்