
தினமொரு திசை நோக்கி
கதைத்துக்கொண்டே இருக்கிறாயே
உன் காதுகள் வலிக்கவில்லையா?
கைகொண்டு நடந்து
இந்த ஆற்று வெள்ளத்தை எப்படி நீ
கடக்கப் போகிறாய் சொல்?
வார்த்தைகளை வயிறுமுட்டத் தின்றபின்,
ஜீரணத்துக்காய்த் திரையரங்கில் டிக்கெட்
வாங்கி முகத்தில் பூசிக் கொள்கிறாயே!
இன்னொரு நாடகத்தின் ஒத்திகைக்கான
ஒப்பனையா அது?
நாவலொன்றின் நாற்பதாவது
பக்கத்தைப் படித்ததுமே
கவச குண்டலமணிந்து
போராடக் களத்தில் குதித்து விடுகிறாயே!
இந்த வித்தையை
ஐந்தாவது பரிமாணத்தில் ஒளிந்திருக்கும் ஏலியனா
உனக்குக் கற்றுத் தந்தான்?
ஆயிரம் பறவைகள் ஒன்றுசேர்ந்து
கட்ட முடியாத கூட்டை
உன் வார்த்தைகளால்
கட்டி முடித்துவிடுகிறாயே!
புத்தகப் புழுக்கள் விழுங்கிவிடாமல்
பாதுகாப்பாக
உன் முட்டைகளை எங்கே இடப் போகிறாய்?
போகாத பொழுதைப்
போக்க வேண்டுமென்பதற்காய்
ஓநாயாய் நீ சிந்தும் கண்ணீரில்
சர்க்கரையின் தித்திப்பு
சற்று தூக்கலாக இருப்பதை
நீ அறிவாயா?
நாளை இறந்து போய்விட்ட ஒரு சிறுமியின்
புதைகுழியிலிருந்து முளைக்கப் போகும்
கறுப்புக் கொடியில்
எந்த வர்ணத்தைப் பூசலாம்
என்றுதானே காத்திருக்கிறாய்?
உன் அழுகுரலின் சங்கீதத்தால்
மரித்துவிட்ட எந்த ஆடும் உயிர்த்தெழப் போவதில்லை…
இருளால்கூட
என்னையும் உன்னையும்
மாற்றிவிட முடியவில்லை
விடியல் வந்து என்ன செய்துவிடும் நம்மை?

கவிஞருக்கு இத்தனை அவநம்பிக்கை அவசியம் தானா?
இருந்தாலும்
“கைகொண்டு நடந்து
இந்த ஆற்று வெள்ளத்தை எப்படி நீ
கடக்கப் போகிறாய் சொல்?”
என்ற வரிகள் அருமை!
உங்கள் வார்த்தை களால் எங்களை கட்டி போட்டுவிட்டீர்கள்…பசுமை கொடி ஏற்றுவது நிச்சயம் நம் கவிதை பூங்காவில்..