அன்பிற்குரியீர் /வளவ. துரையன். ஆசிரியர், சங்கு

வணக்கம்

விருட்சம் 118-0119

நகுலன் சிறப்பிதழ் வந்த்து. மகிழ்ச்சி.

இதழின் ஒவ்வொரு பக்கத்திலும் அழகியசிங்கரின் ஆர்வமும் உழைப்பும் தெரிகிறது. மறைந்து இன்றும் நினைவில் வாழும் ஒரு மூத்த படைப்பாளிக்கு நல்ல கௌரவம் செய்து இறுக்கிறீர்கள். பாராட்டுகள்
சுப்ரபாரதி மணியன் நகுலனிடம் நேர்ந்த இரு சந்திப்புகளை நன்கு பதிவு செய்துள்ளார். அதுவும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத நகுலனின் பதில்களை அப்படியே தந்திருப்பது நகுலனின் அப்போதைய சூழலை நன்கு காட்டுகிறது, நீல.பத்மநாபன்–சாவு பயம்—கோட்ஸ்டாண்டு கவிதைகள்—காலச்சுவடு கண்ணன்— கோவிலுக்குப் போதல் என்று பல செய்திகளை நகுலன் தன் ஆழ்மனத்தில் படிந்திருப்பதைச் சொல்லியிருக்கிறார்.
அழகிய சிங்கர் நகுலனின் சில கவிதைகள் எடுத்துக் கொண்டு ஒரு சிறப்பான கட்டுரையாக கவிதையும் ரசனையும் எனத் தந்துள்ளார். சுசீலாவை எதிர்பார்த்துக்கொண்டு கதவினைத் தட்டுவாள் எனக் காத்திருக்கின்றார் கவிஞர். ஆனால் சுசீலா எதிர்பார்க்கும்போது கதவைத் தட்டுவதில்லை. எந்தக் கதவு திறக்கும் என்று யார்தான் கூற முடியும் என்பதில்தான் அழகான குறியீடு அமைந்துள்ளது. சுசீலா என்ற இடத்தில் நீங்கள் வாய்ப்பைப் பொருத்திப் பாருங்கள் ஒருவருக்கு வாய்ப்பு எப்பொழுது எப்படி வரும் என யாருமே தீர்மானிக்க முடியாது., அது திடீரென்றே வரும். வராமலும் போகும் என்பதைக் கவிதை காட்டுகிறது.
தான் சந்தித்த எழுத்தாளர்களை எல்லாம் பாத்திரங்களாக மாற்றி எழுதி உள்ள நகுலனின் இவர்கள் பற்றிய கட்டுரை நன்றாக உள்ளது. க.நா.சுதான் ராமநாதன் என்றும், மௌனிதான் நல்லசிவம் பிள்ளை என்றும் அழகியசிங்கர் ஊகித்து எழுதியிருப்பது பெரும்பாலும் சரியாகவே இருக்கும். ஏனெனில் நகுலனை அந்த அளவிற்கு அறிந்தவர்தாம் விருட்சம் ஆசிரியர்.
ஜெ. பாஸ்கரன் சில சிறுகதைகளை ஆய்ந்து எழுதி உள்ளார். குறிப்பாக “காலி அறை” பற்றிய மதிப்பீடு அருமை. அக்கதை ஒருவகையான மனப்பிறழ்வுதான். மாயத் தோற்றம்தான் ஆழ்மனத்தில் ஏற்படும் மாற்றம்தான். அதை, “இல்லாத ஒன்றை இருப்பதாக நம்பும் பிறழ்ந்த மனநிலையை மிகச் சிறப்பாகக் காட்சிப் படுத்துகிறார் நகுலன் என்று சரியாகவே கூறுகிறார் ஜெ. பாஸ்கரன்.
நகுலனைப் பற்றி என்னும் கட்டுரை சில புதிய செய்திகளைக் கூறுகிறது. அழகிய சிங்கர் தனக்கும் நகுலனுக்கும் விருட்சத்திற்கும் நகுலனுக்கும் உள்ள தொடர்புகளை நன்கு பதிவு செய்துள்ளார். அதில் நகுலனின் கடிதமும் ஒன்று உள்ளது. நகுலன் பேட்டிக்காகப் பதில்கள் எல்லாம் சொல்லிவிட்டுப் பின் திருவனந்தபுரம் போய் அப்பதில்களைப் பிரசுரிக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார் என்று அழகிய சிங்கர் எழுதியிருப்பது வியப்பாக உள்ளது. அதுதான் நகுலன்.
க்ருஷாங்கினி கட்டுரையின் இறுதியில் ஒரு முக்கியமான வினாவையும் விடுக்கிறார். “நகுலன் ஏன் தன்னுடன் பிறந்த தங்கையான திரிசடையின் கவிதைகளைப் பற்றி எங்குமே குறிப்பிடவில்லை?” என்ற கேள்விக்கு தெரிந்தவர்கள் யாராவது பதில் சொல்லத்தான் வேண்டும். அல்லது அக்கவிதைகளை நகுலன் பொருட்படுத்தவில்லையோ என்றுதான் எண்ண வேண்டி இருக்கிறது.
மிகவும் கனமாக விஷயத்தை விளையாட்டாகவோ நகைச்சுவையாகவோ சொல்வதில் தேர்ந்தவர் நகுலன் என்று சொல்கிறார் லாவண்யா சத்திய \நாதன். “இருப்பதற்கென்றுதான் வருகிறோம்; இல்லாமல் போகிறோம்” என்பதை அதற்குன் உதாரணமாகவும் அவர் காட்டுகிறார். உண்மையில் நகுலன் போகிற போக்கில் சில கவிதைகள எழுதிச் சென்றாலும் அவற்றில் உள்ள நகைச்சுவையும் தத்துவமும் சிலரே புரிந்துகொள்ள முடியும்
ந. பானுமதியின் இணைவழிப் பயணம் சிறப்பான கட்டுரை. நகுலன் தம் வாழ்வின் இறுதியில் சந்திக்க நேர்ந்த சொத்து சம்பந்தமான வழக்குகளின் பாதிப்பு அவரின் கவிதைகளில் தெரிகிறது என்கிறது இக்கட்டுரை; நகுலனின் கவிதை எப்படி ஒரு நவீன கவிதையாகிறது என்று விளக்குகிறது இக்கட்டுரை
நகுலனின் கல்லூரி நாள்களை ஓரளவிற்கு இ. பா அவர்களின் கட்டுரை வழித் தெரிந்து கொள்ள முடிகிறது. இதில் நகைச்சுவை ஆங்காங்கே மிளிர்கிறது
நகுலன் எப்படித் தனக்கு முன்னாலிருந்த மரபுகளோடும் பின்னால் வரும் கவிதைகளோடும் மாறுபடுகிறார் என்று விளக்குகிறார் ஜி.பி இளங்கோவன். காட்சிப் படிமத்தால்தான் அவர் மாறுபடுகிறார் என்பதையும் சில கவிதைகளின் மூலம் அவர் நன்கு விளக்குகிறார்.
நகுலனின் கவிதைகள் மனிதவாழ்வின் கூறுகளை நான்கைந்து வரிகளில் சொல்கின்றன என்கிறார் சிறகு இரவி. நகுலனின் ஒரு கவிதையில் உள்ள கலைந்து என்னும் சொல்லை இக்கட்டுரை நன்கு விளக்கி உள்ளது. மரண பயம் பற்றியும் சொல்லிப் போகிறது.
நகுலனின் கவிதைகளைத்தான் பலரும் அறிந்திருப்பார்கள். அதற்காகவே அழகியசிங்கர் நகுலனின் கட்டுரைகள் பற்றி சற்று விரிவாகவே ஆய்ந்து எழுதி உள்ளார். பாராட்டுகள்.
“எனக்கு/ யாருமில்லை/ நான்/ கூட” என்ற நகுலனின் கவிதையில் உள்ள ’கூட’ சொல்லை சிலேடையாகக் கிண்டலாக எடுத்து ரசித்து முனைவர் வ.வே.சு. சிறப்பாக எழுதி உள்ளார். அக்கவிதை தனிமையின் நிரந்தரத்தை, நிதர்சனத்தைக் காட்டுகிறது என்னும் கட்டுரையாளைரின் வரிகள் நூற்றுக்கு நூறு உண்மை
இதே கவிதையைச் சோமசுந்தரி அவர்களும் எடுத்தாண்டு தன் கட்டுரையில் பதிவு செய்துள்ளார். எல்லாம் தொலைந்து போன நிலையில் தனிமையின் அடர்த்தி ஒரு மனிதரை முக்காலும் விழுங்கின நிலையில் இக்கவிதை பிறந்துள்ளது என்கிறது இக்கட்டுரை
நகுலனின் நாவல்கள் பற்றிய சுப்பிரபாரதி மணியன் கட்டுரையும் கோட்ஸ்டாண்ட் கவிதைகள் பற்றிய அதங்கோடு அனீஷ்குமார் கட்டுரையும் இவ்விதழில் மிகச்சிறந்தவை ஏன்று எனக்குத் தோன்றுகிறது.
இதழைப் படித்து முடித்தபின் மீண்டும் அழகியசிங்கரை எண்ணி வியக்கத்தான் தோன்றுகிறது.