மயில்கள்/அதங்கோடு அனிஷ்குமார்

கண்கொட்டாமல்
மயில்களைப் பார்கிறாள்
மகள்

மயில் அழகு என்கிறாள்
மயில்கள் அழகு என்கிறேன்.

ஆணைப் பின் தொடரும்
பெண்ணும்
பெண்ணைப் பின் தொடரும்
ஆணும் அழகு!.

கார்மேகம் சூழ ஆடும்
மயிலின் நடனங்கள்
மழைக்கான வரவேற்பா?
துணைக்கான
அழைப்பா?

மயில் அழகு
மயில்கள் அதைவிட அழகு

மரங்களில் துயிலும்
மயில்கள்
ஒன்றன் பின் ஒன்றாக
மரத்தின் உச்சிக்குச்
செல்லும்

மனித சப்தம்
ஓயும் முன்னே
ஓயும் அவற்றின் குரல்கள்
விடியற் பொழுதில்
கீழிறங்கும்

நேற்றைய கடும் மழையில்
மயில்கள்
என்ன செய்திருக்குமென
நினைத்தபடி
தூக்கத்திற்குத்
தூக்கிட்டுக் கொண்ட
மகளைப்
பார்க்கும் நேரம்
அவள்
கண்களில் ஆடுகின்றன
மயில்கள்.

2 Comments on “மயில்கள்/அதங்கோடு அனிஷ்குமார்”

Comments are closed.