ஒரு மாசற்ற சுவாசம் எனில்/தங்கேஸ்

படபடக்கும் வெள்ளை தாட்கள்
குருவிகளாகும் ஒரு மாலைப் பொழுது
நம் முத்தத்தில் சிவந்த சூரியனுக்கு
கொள்ளை அழகு

விரல் தீண்டும் இந்த சிறு கணத்திற்காகவா
இத்தனை காலங்கள் காத்திருந்தாய்?

ஆனாலும் உன்னை ஆதி அந்தமாய்
தழுவும் போது நான் சொல்வேன் நின்னினும்
என் தவம் பெரிதே கந்தர்வா!

கல்லாய் சமைந்திருந்தவளை
உயிர்ப்பித்தது
ஒரு மாசற்ற சுவாசம் எனில்
அந்த ஒரே ஒரு மாசற்ற சுவாசத்திற்காக
உன் பெயரைச் சொல்லி சொல்லியே
கல்லை திரவாகமாய் கரைத்தவள் நான்