
காலையில் எழுந்தவுடன் கௌசல்யாவிற்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. அன்று அவள் பிறந்த தினமென்றாலும், எப்போதும் போலப் பிறந்தநாளிற்கு எந்த முக்கியத்துவம் அவளுக்குப்புலப்படப் போவதில்லை. எப்போதும் போல் எழுந்து கொண்டாள்.
எப்போதும் போல் அவள் அம்மா, அப்பா, அண்ணா, தம்பி என்று ஒருவர் மாற்றி வாழ்த்துத் தெரிவித்தார்கள். அன்றைய பொழுது வாழ்த்துக்கள் பரிமாற்றத்துடன் நகரத் தொடங்கியது.
ஆனால் பார்த்தசாரதி எழுந்தவுடன் தனிப்பட்ட அக்கறையுடன் அவளை விசாரித்தது அவளுக்குச் சற்று ஆச்சரியமாக இருந்தது. எப்போதும் அவன் கண்டுகொள்ளவே மாட்டான்.
அவன் அவளிடம், "பூஜை அறையைத் திறந்து பாத்தியா?" என்று கேட்டான்.
"ஏன்?" என்று கேட்டாள் அவள்.
"போய்த்தான் பாரேன்."
அவள் பூஜை அறையைத் திறந்தாள். சாய்பாபா காலடியில் பளபளவென்று ஒரு பொருள் காட்சி தந்தது. என்ன என்று அதை எடுத்துப் பார்த்தாள். அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. தங்க வளையல்கள்.
ஏது இது என்று யோசித்தாள். அவளுக்குப் புரிந்து விட்டது. பார்த்தசாரதிதான் வாங்கியிருப்பான். அவளுக்குப் பெருமையாக இருந்தது. தங்க நகையைப் பார்க்கும்போது பெண்களுக்கே உரிய கிரக்கம், அவளிடம் தொற்றிக்கொண்டது.
அவள் பிறந்ததினம் போது பார்த்தசாரதி அவன் அலுவலகத்தில் கிடைத்த போனஸ் பணத்தில் வாங்கியிருந்தான்.
"எனக்குத் தெரியாமலேயே நீங்கள் வாங்கியிருக்கிறீர்கள்? என் கை அளவு எப்படித் தெரிந்தது?"
"உனக்குத் தெரியாமல் உன் கை அளவை எடுத்து வைத்திருந்தேன்."
கன கச்சிதமாக கைக்குப் பொருந்துகிறது பெருமையுடன் சொன்னாள் கொளசல்யா. கையில் தங்க வளையலை அணிந்துகொண்டு கைகளை இப்படியும் அப்படியும் ஆட்டினாள்.
அன்று சமையலில் பாயசம் செய்தாள். அவனுக்குப்பிடித்த சேமியா பாயசம்.
வளையல் வாங்கிக் கொடுத்தது, அதுவும் கௌசல்யாவிற்கு வாங்கிக் கொடுத்ததில் அவன் கர்வமாக இருந்தான். அன்று பிறந்தநாள் என்பதால் அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அவளுடன் பீச்சிற்குப் போனான். அவர்களுக்குப் பிறந்த குழந்தை பிரசன்னாவையும் அழைத்துக்கொண்டு போனார்கள் அடுத்தநாள் வழக்கம்போல் பார்த்தசாரதி அவசரம் அவசரமாகக் காலையில் சீக்கிரம் அலுவலகத்திற்குக் கிளம்பி விட்டான்.
பிரசன்னாவை வைத்துக்கொண்டு அவள் எல்லா காரியங்களையும் மடமடவென்று செய்தாள். பிரசன்னா இங்கும் அங்கும் ஓடுவான். ஒரு இடத்தில் நிலையாக நிற்க மாட்டான்.
3 வயதுதான் ஆகிறது. பக்கத்திலுள்ள நர்சரி பள்ளியில் ஒரு இரண்டு மணி நேரங்கள் அவனைப் பார்த்துக் கொள்வார்கள். அதன் பின் அவனுடன்தான் அவள் பொழுதைக் கழிக்கவேண்டும்.
மதியம் அவளுக்குக் கண் அசரும். அந்தச் சந்தர்ப்பத்தில் அவளுக்கும் பிரசன்னாவுக்கும் கடும் போட்டி இருக்கும். தூங்கவே மாட்டான். அவனைத் தூங்க வைக்க அவள் படாதபாடு படுவாள்.
சிலசமயம் அவள் தூக்கக் கலக்கத்தில் இருக்கும்போது அவனை அவன் போக்கிலேயே விட்டுவிடுவாள். அவனோ ரகளை செய்தபடி இருப்பான். அவள் கவனிக்காமல் தூக்கக் கலக்கத்தில் இருப்பாள். ஆனால் அடிக்கடி அவள் வாய் பிரசன்னா என்று முணுமுணுத்தபடி இருக்கும்.
தனக்கு உதவி செய்ய கௌசல்யா யாரையும் வைத்துக்கொள்ள வில்லை. தனியாக அவளும், அவள் குழந்தையும், கணவன் மட்டும் இருந்தார்கள்.
பக்கத்து வீடுகளில் உள்ள சிலர் அவளுடன் பேச்சுத்துணைக்கு வருவார்கள். எல்லோரும் பொதுவாகப் பேசுவார்கள். அவர்களுடன் பேசியது போக அவள் டிவி பார்ப்பாள்.
பார்த்தசாரதி எப்போது வருவான் என்று காத்துக்கொண்டிருப்பாள். அவன் சிலசமயம் அலுவலகத்திலிருந்து வரத் தாமதமாகிவிடும். அப்போது அவனுடன் தொலைப்பேசியில் பேசி எப்போது வருவான் என்று கேட்டுக்கொள்வாள்.
பிரசன்னாவைத்தான் அவளால் சமாளிக்க முடியவில்லை. அவன், ‘உதவிக்கு யாரையாவது வைத்துக்கொள்ளேன்’ என்பான். அவளுக்கு மனசு வராது.
ஒருமுறை தூங்கிக்கொண்டிருக்கும்போது டைனிங் டேபிள் மீது வைத்திருந்த ரசத்தைக் கொட்டிவிட்டான் பிரசன்னா. அவள் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தாள். பெரிய சத்தம் கேட்டவுடன் அவள் பதறி அடித்துக்கொண்டு எழுந்தாள்.
பிரசன்னாவிற்கு எதாவது ஆகிவிட்டதா என்று பதறி விட்டாள். பிரசன்னாவோ ரசம் வைத்திருந்த பாத்திரம் விழுந்தவுடன் அந்த அதிர்ச்சியில் பெரிதாக அழ ஆரம்பித்துவிட்டான்.
அம்மாவைப் பார்த்துப் பயந்தபடியே இருந்தான். அவனைக் கட்டி அணைத்துக்கொண்டாள்.
இரவு பார்த்தசாரதியிடம் அவள் சொன்னபோது, அவளைத்தான் அவன் கோபித்துக்கொண்டான். குழந்தை விஷயத்தில கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டுமென்றான்.
இந்தச் சம்பவம் நடந்து முடிந்தபிறகு திரும்பவும் துருதுருவென்று விஷமம் செய்ய ஆரம்பித்தான்.
அவள் எண்ணெய்த் தேய்த்துக் குளிக்கச் சென்றபோது, கையில் மாட்டியிருந்த தங்க வளையல்களை அவிழ்த்து டேபிள் மேல் வைத்துவிட்டுக் குளிக்கத் தொடங்கினாள். உண்மையில் பிரசன்னாவை நர்சரியில் விட்டுவிட்டுத்தான் வீட்டிற்கு வந்து குளிக்க ஆரம்பித்தாள்
பிரசன்னாவைத் திரும்பவும் நர்சரியிலிருந்து அழைத்துக்கொண்டு வந்துவிட்டு, கொஞ்ச நேரம் தூங்க வேண்டும் போலி ருந்தது. எப்போதும் பிரஸன்னாவைத் தூங்கச் செய்துவிட்டு தானும் தூங்க முயற்சி செய்வாள். அவள் முயற்சியில் எப்போதும் தோல்விதான்.
வாழ்க்கையில் இது இரண்டும்தான் நடக்கிறது. சாப்பிடுவது, தூங்குவது. தூங்குவது, சாப்பிடுவது
தொலைக்காட்சி எவ்வளவு நேரம் பார்ப்பது என்று யோசித்தாள். பிரஸன்னாவை அவளால் சமாளிக்க முடியவில்லை. அவனுடைய விளையாட்டு எல்லையைத் தாண்டி ஓடுகிறது. மிரட்டி அடித்துத் தூங்க வைத்துக்கொண்டிருந்தாள். அவள்தான் அவளை அறியாமல் தூங்கிக் கொண்டிருந்தாள். அவன் தூங்கவில்லை. என்ன செய்து கொண்டிருக்கிறான் என்பதும் தெரியவில்லை.
இரண்டு மணி நேரம் கழித்து கௌசல்யா விழித்துக் கொண்டாள்.
சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டாள். பிரஸன்னா எங்கே இருக்கிறான் என்று. கதவு சாத்தியபடிதான் இருந்தது. பிரஸன்னா கண்ணில் பட்டான். ஒரு மூலையில் ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்துக் கிழித்துக்கொண்டிருந்தான். அவசரம் அவசரமாய் போய் அவனிடமிருந்து நோட்டைப் பிடுங்கினான். அது ஒரு டைரி. பார்த்தசாரதி எழுதுகிற டைரி. அது கிழிந்திருந்ததைப் பார்த்தார்கள் சத்தம் போடுவான்.
அம்மாவை அழைத்துக்கொண்டு வர வேண்டியதுதான் என்று யோசித்தாள்.
அப்போதுதான் தற்செயலாக அவள் கைகளைப் பார்த்துக்கொண்டாள். கையில் இரண்டு தங்க வளையல்கள் இல்லை. திக்கென்றிருந்தது. அவசரம் அவசரமாகக் குளிப்பதற்கு முன் கழட்டிவைத்த டேபிளைப் பார்த்தாள். அங்கு ஒரே ஒரு வளையல்தான் இருந்தது. அவளுக்குப் புரியவில்லை. அழுகை அழுகையாக வந்தது.
பார்த்தசாரதி ஆசையாக வாங்கிக் கொடுத்தது. சமீப காலமாக ஒவ்வொரு நாளும் இரவு அவன் வளையலைப் பற்றிப் பேசாமலிருப்பதில்லை.
“உன் கைகளுக்கு இயல்பாய் பொருந்திப் போகிறது”, என்றான் ஒருநாள்.
இன்னொரு நாள், “உன் கைகளுக்கு இந்த வளையல்கள் அதிகக் கவர்ச்சியாக இருக்கின்றன.”
அவள் ஜாக்கிரதையாக அவனிடமிருந்து விலகிக் கொண்டாள்.
இப்போது ஒரு வளையலைக் காணோம். அவளுக்குத் திகைப்பு. யோசிக்க யோசிக்க அழுகை வரும்போல் தோன்றியது.
இந்தக் குட்டிச் சாத்தான்தான் எதாவது செய்திருக்க வேண்டும்.
வீடு முழுவதும் தேடினாள். தேடினாள். தேடிக்கொண்டே இருந்தாள். கிடைக்கவில்லை. அவளுக்கு அழுகை வந்தது.
பார்த்தசாரதிக்குப் போன் செய்து சொல்லி விடலாமா என்று யோசித்தாள்.. அவன் வந்தபிறகு சொல்லிக்கொள்ளலாமென்று சமாதானம் செய்து கொண்டாள். அவன் எப்படி எடுத்துக்கொள்வான் என்று தெரியாது. அவன் “மூடை கெடுக்க வேண்டாமென்று நினைத்துக்கொண்டாள்.
அலுவலகத்தை விட்டு அவன் தாமதமாகவே வந்தான். களைப்பாக இருந்தான். அவனுக்குக் காப்பி கொண்டு வந்து கொடுத்தாள். அவன் எப்போதும் அவள் கைகளைத்தான் பார்ப்பான். இன்று என்னமோ அவள் கைகளைப் பார்க்கவில்லை. மேலும் அவன் எதோ யோசனையில் ஆழ்ந்திருந்தான்.
பேசாமலிருந்துவிட்டாள்.
அடுத்தநாள் காலையில் அவன் வழக்கம்போல் அவன் அவசரம் அவசரமாகக் கிளம்பி அலுவலகம் சென்று விட்டான்.
அவன் போனபிறகு திரும்பவும் வீடு முழுவதும் தேடினாள். ஒன்றும் புரியவில்லை. எங்கே போயிற்று? வீட்டில் அவளும் பிரசன்னாவும்தான். யாரும் வரவில்லை.
பிரசன்னாவைக் கேட்டாள். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. ஆமாம். இல்லை என்று தலை ஆட்டினான்.
அவனிடம் சொல்லிவிடலாமா என்று தோன்றியது. அவன் அலுவலகத்திற்குப் போன் செய்தாள். ஆனால் அவனைக் கூப்பிடாமல் போனை கட் செய்தாள்.
என்ன செய்வது என்று தெரியவில்லை. அவளுக்குக் கடவுள் நம்பிக்கை அவ்வளவாய்க் கிடையாது. விழுந்து விழுந்து கும்பிட மாட்டாள். ஆனால் சாமி அறைக்குச் சென்று வெகு நேரமாக உருக்கமாக வேண்டிக்கொண்டாள். கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்தது. அவளுக்கே வெட்கமாக இருந்தது. பொருளின் மதிப்பை அறிந்து திகைப்பாகவும் இருந்தது.
பையனை நர்ஸரியிலிருந்து அழைத்துக் கொண்டு வந்தாள். பையன் மீது எந்தக் கவனமும் இல்லை. வளையலைப் பற்றி யோசிக்க ஒன்றுமில்லை. கணவனிடம் சொல்லி திட்டு வாங்க வேண்டியதுதான். சோபாவில் புத்தகம் படித்துக்கொண்டே தூங்கி விட்டாள். பிரசன்னாவும் அவளிடம் ஒண்டிக்கொண்டு தூங்கிவிட்டான்.
தூக்கத்தில் அவளுக்கு ஒரு கனவு. யாரோ வளையலைக் கொண்டு வந்து கொடுப்பதாக. இதெல்லாம் நடக்காது என்று நினைத்தாள்.
யார் கண்ணிலாவது பட்டால் தனக்கு வைத்துக்கொள்ளலாமென்று எடுத்துக் கொள்ளத் தோன்றுமே தவிரத் திருப்பித் தர வேண்டும் என்று எண்ணம் ஏற்படாது.
நிஜமாகவே அவள் ஆழ்ந்தத் தூக்கத்திலிருந்தபோது யாரோ கதவைத் தட்டுகிற சத்தம் கேட்டது. அவசரமாக அவள் வாசல் கதவைத் திறந்தாள்.
ஒரு துப்புறவாளன் நின்று கொண்டிருந்தான்.
“மேடம், இது உங்க வளையல் என்று நினைக்கிறேன்.”
அவளுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை,
“ஆமாம். இது என் வளையல்தான். உங்களுக்கு நன்றி,” என்று என்ன பேசுவது என்று தெரியாமல் பேசத் துவங்கினாள்.
அவனை உள்ளே கூப்பிட்டு உட்கார வைத்து காப்பி கொடுத்தாள்.
. அவன் முதலில் மறுத்தான். பின் அந்த மரியாதையை ஏற்றுக்கொண்டான். காப்பி கொடுத்ததோடு அல்லாமல் அவனுக்கு நூறு ரூபாய் கொடுத்தாள்.
“இந்த வளையலை யாரோ ஜன்னல் வழியாகத் தூக்கிப் போட்டிருப்பார்கள்” என்றான்.
அவள் யோசித்துக்கொண்டே பிரசன்னாவைப் பார்த்தாள். அவன் கையில் கிடைத்த ஏதோ ஒன்றைத ஜன்னல் வழியாகத் தூக்கிப் போட்டுக்கொண்டிருந்தான்.
(சமீபத்தில் வந்துள்ள பூபாளம் பிப்ர. 2022 இதழில் என் கதை தங்க வளையல்கள் வந்துள்ளது. எல்லோரும் படிக்கவும். அந்தக் கதையை விருட்சம் டெய்லியில் பிரசுரம் செய்கிறேன்)
.

நல்ல கதை. பராட்டுகள்
ஜாக்கிரதையாக விலகிக் கொள்வதும், அதிகமாக விழுந்து விழுந்து கும்பிடாததும், கனவு காண்பதும், கனவு உண்மையாக ஆவதும் ….கதைக்கு இயல்பை கொடுக்கின்றன. அருமை.