கை சோசியம்!/ஜெ.பாஸ்கரன்.

“சோசியம் பாக்கறது, கைரேகை பாக்கறது”/

புதிய கான்கிரீட் பிளாட்பாரத்தில், ஒல்லியான வேப்பமர நிழலில், பிளாஸ்டிக் ஷீட்டின் மீது அமர்ந்து, கையிலிருந்த மந்திரக் கோலை உள்ளங்கையில் தட்டியபடி அமர்ந்திருந்தாள் வள்ளி. மஞ்சள் பூசிய முகத்தில் விபூதி, பெரிய குங்குமப் பொட்டு, அதற்கு மேல் மையில் கரும்பொட்டு, வகிடின் ஆரம்பத்தில் குங்குமத் தீற்றல்.

“என் தாய் ஜக்கம்மா சொல்றா… உனக்கு இனிமே ஒரு குறையும் கிடையாது.. போன சென்மத்துப் பகை பவுர்ணமியோட முறிஞ்சு போச்சு… துக்கமெல்லாம் தொலைஞ்சு போச்சு….லட்சுமி வீட்டில தாண்டவம் ஆடுவா…. சமயபுரம் ஆத்தாளுக்கு, மனங்குளிர ஒரு படையல் போடு, போ…”

கையில் பிடித்த மந்திரக் கோலால், நீட்டிய கையை வலமும் இடமுமாகச் சுற்றி, உள்ளங்கையில் மூன்று தட்டு தட்டி, கண்மூடி, ஜக்கம்மாவை நினைத்து (எதிரே உள்ளவரைப் பொறுத்து, ஜக்கம்மாவுக்கு பதில் கருப்பசாமி மீசையுடன் வருவார்) பெருமூச்சு விடுவாள். குறி சொல்லும்போது கண்கள் விரிந்து, வரிசையான பற்கள் தெரிய உதடுகளும், மூக்கும் அசைவதைப் பார்ப்பவருக்குப் பரவசமாக இருக்கும். குரல் ஓய்ந்து, மூடிய அரைக்கண்ணில் கனிவு சுரக்கும்! நெஞ்சு நிமிர்த்தி, கட்டிய மஞ்சள் புடவை உடலை இறுக்க, கம்பீரமாக உட்கார்ந்திருப்பவளைப் பார்த்தால், குறி கேட்க வந்தவனுக்கு, கேள்வியே மறந்து, சகல நாடியும் அடங்கிவிடும் அபாயம் எப்போதும் உண்டு!

முப்பத்தஞ்சு வயசு, மூக்கும் முழியும் செதுக்கினாற்போல, உருவி விட்ட உடல்வாகு – வள்ளிக்கு இரண்டு குழந்தைகள். சாலையின் மறுமுனையில் சந்தனப் பொட்டு, பச்சை சட்டையுடன் கிளிக் கூண்டு முன்னால் சீட்டுகளை அடுக்கி வைத்து சோசியம் சொல்லும் கண்ணாயிரம்தான் இவள் கணவன். வள்ளியின் கண்ணழகிலும், சிரிப்பிலும் மயங்கி, குறி கேக்கறார்போல வந்து, வெச்ச கண் எடுக்காம பார்த்து, கையிலெ எடுத்த பணத்தைக் குடுத்துட்டு, குறி கேட்காமலே திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே போனவன்தான் – தனக்குள் சிரித்துக் கொண்ட வள்ளிக்கு ஏற்ற புருஷன்தான் அவன்.

“ஜக்கம்மா… உன் கையில் மந்திரக் கோலு நிக்க மாட்டேங்குதே… ஆத்தா, உன் புருஷன பத்திரமா பாத்துக்கம்மா…சுத்தி சுத்தி வந்து, கொத்திக்கிட்டுப் போக ஒரு செவத்த கோழி காத்திருக்குதம்மா” – வள்ளி குறி சொல்ல, எதிரில் உட்கார்ந்திருந்தவள், கையில் பணத்தைத் திணித்துவிட்டு, “சந்தேகமா இருந்துச்சு; இப்பொ தீர்ந்துபோச்சு” என உறுமியவாறு புடவையைத் தூக்கிச் சொருகிக்கொண்டு, ‘விருட்’டெனக் கிளம்பிப் போனாள். புயல் கடந்தாற்போல இருந்தது – வள்ளி சிரித்துக்கொண்டாள்!

“பித்தமும் வாந்தியும் எப்பவும் இருக்குதுன்றாரு…கிறுகிறுன்னு வருதுன்றாரு.. குடிக்கமாட்டாரு.. ஆனா பீடி வலிப்பாரு… வயிறு உப்பிசமா இருக்குதுன்றாரு.. இன்னா மருந்து குடுத்தாலும் கேக்கலை – என் தாலி பாக்கியம் எப்படி இருக்குதுன்னு சொல்லும்மா” – கேட்ட பெண்மணிக்கு அறுபது வயது இருக்கும்.

“உன் தாலிக்கென்ன, கெட்டியாத்தான் இருக்குது. நாள் தவறாமெ காளியம்மனுக்கு எலுமிச்சம்பழ விளக்கு போட்டு வா.. அவருக்குப் பத்தியமா சாப்பாடு செய்து போடு.. உன் பக்தியிலே குறுக்க வரச் சொல்லாதே” என்றாள் வள்ளி.

குறுந்தாடிக் கிழவர் ஒருவர் கைத்தடியைப் பக்கத்தில் வைத்துவிட்டு, மெதுவாக சிரமப் பட்டு வள்ளிக்கு எதிரே உட்கார்ந்தார். “என் பொஞ்சாதிக்கு என் மேல ஆசை குறையுதோன்னு தோணுது – என் கையப் பார்த்து குறி என்ன சொல்லுதுன்னு சொல்லு” என்றார் நடுங்கும் குரலில்.

‘களுக்’கென்று சிரித்தாள் வள்ளி. “முருகன் வேஷம் கட்டினாப்பல இருக்கீய… பாட்டிக்கு என்ன வயசு?”

“இந்த சித்திரை வந்தா முப்பத்தெட்டு…”

“ரெண்டாந்தாரமா?” – வள்ளி கேட்க, தலையை ஆட்டினார் கிழவனார் ”இல்லெ, மூணாந்தாரம்”. வள்ளியின் மந்திரக் கோல் சுழல்வது நின்றது!

தாம்பரத்துக்குக் கிழக்கே இரண்டு கிமீ தூரத்தில் அரை கிரவுண்டில் ஒரு படுக்கையறை கொண்ட தனி வீடு – வள்ளி சொன்ன சோசியம் பலிச்சு, கவுன்சிலரான பாபு சிபாரிசில் பாங்க் லோனில் கட்டிய வீடு. சொந்த ஊர் கட்டிட
கான்ட்ராக்டருக்கு சொன்ன சோசியப்படி குழந்தை பிறக்க, ஊருக்குள் வள்ளிக்குத் தனி மதிப்பு இருந்தது.

‘எதுக்கும் ஒரு வார்த்தை வள்ளிக்கிட்ட கேட்டுறலாம்’ என்று எல்லாவற்றுக்கும் அவளிடம் வருபவர்கள் உண்டு. அதெல்லாம் பழைய கதை – இப்போதெல்லாம் நம்பிக்கை இல்லாமல் அவளைக் கேலி செய்பவர்களும், மிக விஞ்ஞான முறைப்படி கம்ப்யூட்டர் ஜாதகங்களை நம்புவர்களும் அதிகமாகி விட்டதால், அவளது மந்திரக் கோலுக்கும், கண்ணாயிரத்தின் கிளிகளுக்கும் வேலை குறைந்துவிட்டன. அதனால், நகர்ப் புறம் சோசியம் பார்க்க தினமும் வந்து போவது வழக்கமாகிவிட்டது!

“என்ன, இன்னிக்கு கஸ்டமருங்க கூடவா? நேரம் ஆகுதுல்ல?” கையில் கிளிக்கூண்டுடன், கேட்டபடியே வந்தான் கண்ணாயிரம்.

“ஆமாம் மச்சான். ஒரு கெழவனாருக்கு மூணாந்தாரம் அவர்கிட்டே ஆசையா இல்லைன்னு ஒரே குறை.. சொல்லியபடி கடையைக் கட்டினாள்.

“ஆட்டோவுலெ போனா, பத்து நிமிஷத்துலெ போயிறலாம். ராமலிங்க சோசியர் பன்னிரண்டு மணி வரைக்கும் பார்க்கிறாராமே. நம்ம ஜோதிக்கு என்ன படிப்பு சேர்க்கணும்னு ஜாதகம் பார்த்து சொல்றேன்னாரே”

“அதுக்குப் பொறவு போகலாம் மச்சான்… எனக்கே ரெண்டு நாளா கிறுகிறுன்ன வருது, இடுப்பெல்லாம் நோவுது. பித்தமும் வாந்தியா இருக்கும் போல தெரியுது. மகேசு டாக்டர் கிளினிக் போயி, பார்த்துட்டு, பொறவு சோசியராண்ட போவலாம் மச்சான்”

டாக்டர் மகேஷ், வள்ளி வந்தமர்வதைக் கண்ணாடி வழியே பார்த்தார். ‘இன்னிக்கு இந்தப் பொம்பளகிட்ட நம்ம கையக் காட்டி, நர்சிங் ஹோம் கட்ட அதிர்ஷ்டம் இருக்குதான்னு கேக்கணும்’ என்று நினைத்தபடி அடுத்த நோயாளிக்கான காலிங் பெல்லை அடித்தார் நெற்றியில் குங்குமப் பொட்டுடன் இருந்த மகேசு டாக்டர்.