
பலருக்கு சொல்லப் பிடிக்காத பதில் “எனக்குத் தெரியாது.” கேள்வி எதுவாக இருந்தாலும். உண்மையில் பதில் அறவே தெரியாவிட்டாலும். எல்லாம் தெரிந்த ஒருவர் என்று எவரும் எந்தக் காலத்திலும் இருந்ததில்லை. அதுவும் இந்த காலத்தில் அதற்கு வாய்ப்பேயில்லை. ஸ்டூல் சைஸ் அகராதியிலும் சில சொற்கள் விடுபட்டிருக்கலாம். ஏனென்றால் தினம் புதிய சொற்கள் பிறக்கின்றன. அறிவு விரிந்து கொண்டே இருக்கிறது.
“எனக்குத் தெரியாது” என்பது.எனக்கு மிகவும் பிடித்த பதில். அதனாலேயே நாயகன் படத்தின் இறுதியில் அந்த சிறுவன் “நீங்க நல்லவரா, கெட்டவரா?” என்று கேட்கும்போது வேலு நாயக்கரின் “தெரியல” என்ற பதில் என்னை மிகவும் ஈர்த்தது. தங்கவேலுவின் மனைவி “அதான் எனக்குத் தெரியுமே” என்று சொல்வது எரிச்சலூட்டியது.
தெரியாதிருக்கும் வரை நம் அறியாமையை பிறர் ஏளனம் செய்யக் கூடும் என்ற பதற்றம் வருகிறது. அதனால் தெரிந்தது போல் சிறிது ஓவராக்ட் செய்து விடுகிறோம். அதுவே தெரியாதவன் என்று நம்மை காட்டிக் கொடுத்து விடுகிறது. ஓரளவு தெரிந்த பிறகே “தெரியாது” என்று சொல்லும் துணிவு பிறக்கிறது. அதனால்தான் “நான் ஒரு அறிவாளியாக இருக்கக் கூடும். ஏனென்றால் எனக்குத் தெரியாது என்று எனக்கு நன்றாகத் தெரியும்” என்று சாக்ரட்டீஸ் சொன்னார்.
இங்கு பயணத்தின் போது புதிய இடங்களில் வழி தெரியாமல் திணறத் தேவையே இருக்காது. ஒரு இடத்துக்கு எப்படி செல்ல வேண்டும் என்று வழி கேட்டு முடிப்பதற்குள் வழி தெரிந்தவர் தெரியாதவர் என்ற பேதமின்றி கிட்டத்தட்ட எல்லோருமே வழி சொல்ல மிகுந்த ஆர்வத்தோடு முன் வருவார்கள்.
எங்கள் முதல் குடும்ப கேரளப் பயணத்தின் போது ஓரிடத்துக்கு செல்ல வழி தெரியவில்லை. அகப்பட்ட ஒருவரிடம் கேட்டோம். அவர் வழி சொல்லிக் கொண்டிருக்கும் போதே அருகிலிருந்த அவருடைய நண்பர் அப்படி செல்லக் கூடாது என்று மறுத்து விட்டு வேறு வழியை விளக்கினார். இவர் மறுத்தார். சிறிது நேரத்தில் அவர்களுக்கிடையே சரியான வழி பற்றிய ஒரு சிறு தகராறு தொடங்கி விட்டது. அவர்களை சமாதானப் படுத்திவிட்டு கிளம்புவதே எங்களுக்குப் பெரும்பாடாகி விட்டது. கவுண்டமணி செந்தில் காமெடியை மலையாள டப்பிங்கில் பார்த்தது போல் இருந்தது.
அந்த இரு ‘வழிகாட்டி’களில் சீனியர் சொன்ன வழியில் கார் சென்றது. ஐந்து நிமிடங்கள் கழித்து தொலைவில் அவர்களைப் போலவே இருவர் நிற்பதைப் பார்த்தோம். சந்தேகமில்லை. அவர்களேதான். பதறி சொல்லாமல் கொள்ளாமல் உடனே காரைத் திருப்பி நேர் எதிர்த் திசையில் விரைந்தோம். சீனியர் என்பதால் மட்டுமே சிறந்தவர் என்ற இந்திய சிந்தனை மீது எனக்கிருந்த நம்பிக்கையின்மை மேலும் உறுதிப் பட்டது.
அவர்களைப் போன்றோர்தான் அந்த காலத்துப் பயணிகளுக்கு கிடைத்த கூகிள் மேப். வழி வாயில் இருக்கிறது என்பார்கள். வழி தடுமாறுவதும் வாயால்தான். கூகிள் மேப் மட்டுமென்ன, அதுவும்தான் சமயத்தில் தவறிழைக்கிறது. எங்கள் கிராமத்துப் பகுதியில் யாராவது கோட்டைக்கு செல்ல வேண்டும் என்று வழி கேட்டால் சரியாக வழி சொல்வார்கள். ஆனால் சென்று பார்த்தால் பரவாக் கோட்டை, கூப்பாச்சிக் கோட்டை, உள்ளிக் கோட்டை, ஆலங்கோட்டை என்று ஏதாவது ஒரு கிராமம் இருக்கும். ஆனால் ஒன்றிலும் கோட்டை மட்டும் இருக்காது. மகாதேவப் பட்டினம் என்ற கிராமத்தில் கோட்டை இருக்கும். அதிலும் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்கிறது. கோட்டை ஒன்று பெயரில் இருக்கிறது. அல்லது உண்மையில் இருக்கிறது. வாழ்க்கையில் ஏதாவது ஒன்றுதான் வாய்க்கிறது.
உடல்நிலை சரியில்லை என்று ஒரு வியாதியை சொன்னால் போதும், உடனே அத்தனை பேரும் அது தீர்வதற்கான ஆலோசனைகளை கூகுளை விட அதிகமாக அள்ளி வழங்குவார்கள். டாக்டருக்கே ஆலோசனை வழங்குபவர்களும் உண்டு. என் அம்மா,”ஒடம்புல தெம்பே இல்ல, டாக்டர். சோந்து போயி வருது. ஒரு குளுகோஸ் பாட்லு ஏத்துனாதான் சரியாவும்” என்று சொன்ன போது டாக்டர் விரக்தியுடன் சிரித்த விதம் எனக்கு இன்றும் நினைவுள்ளது.
ஓரு கிராமத்துப் பெண்மணி மருத்துவ மனையில் உறவினரைப் பார்க்க வந்தார். அவர். டாக்டரிடம் அதிகப்படியாக ஆலோசனைகள் வழங்க டாக்டர் பொறுமை இழந்தார். “ஆபரேஷன் நடத்துறப்ப நீங்களும் கூட இருந்து எனக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணா சரி பண்ணிடலாம்மா” என்றார். அவர் சீரியசாக சொல்வதாக நினைத்து பெண்மணி “இருக்கேன். மூண்றை மணிக்கி பால் கறக்கப் போவணும். அதுக்குள்ளே ஆப்ரேசன் முடிஞ்சிருமில்ல?” என்றார். அவருடைய மகன் பல்லைக் கடித்து கண்ணால் மிரட்டிய பிறகே அவருக்கு கிண்டல் புரிந்தது.
எனக்கு முற்றிலும் தெரியாத, அல்லது எனக்கு நன்றாகத் தெரியாத எதைப் பற்றி கேட்டாலும் கூச்சமின்றி எனக்குத் தெரியாது என்று சொல்லி விடுவேன். கல்வித் துறை சம்பந்தமாக ஏதாவது கேட்டாலும். யாருக்குத் தெரியும், ஓய்வு பெற்ற பின் நடுவில் நதியில் நிறைய நீர் கடந்து போயிருக்கலாம். “என்ன,சிவாஜி செத்துட்டாரா?” என்று கேட்டு ஏன் அசடு வழிய வேண்டும்?
எங்கள் வீட்டில் சென்ற அமாவாசையன்று இலையில் வடைக்கும் போண்டாவுக்கும் பிறந்த சில இருந்தன. “அவசரத்தில் பிடித்தது” என்று மனைவி தயங்கும் குரலில் காரணம் சொன்னார். நல்லவேளை, அவர் பிள்ளையாரைப் பிடிக்கவில்லை. சில நேரங்களில் சில நிபுணர்களுக்கும் அடி சறுக்குவதுண்டு.
பணி ஓய்வுக்குப் பின் எல்லா நாட்களும் ஞாயிறு மாதிரி என்பதனாலோ என்னவோ எனக்கு சட்டென்று கிழமைகள் நினைவுக்கு வருவதில்லை. “போன வாரம் டாக்டரை கன்ஸல்ட் பண்ணோமே அன்னிக்கி என்ன கெழமை?” என்று கேட்பேன். இந்த கேள்விக்கு மொத்தம் இரண்டு விதமான பதில்கள்தான் உண்டு. சரியாகவோ தவறாகவோ ஒரு கிழமையை சொல்லலாம். அல்லது நினைவில்லை, எனக்குத் தெரியாது என்பது போல சொல்லலாம்.
“ஒங்க ஃப்ரண்டு கிட்ட ஒரு மணி நேரம் பேசுனீங்களே அன்னிக்கி” என்றோ, “அன்னிக்கு பவர் ஷட் டௌன்” என்றோ என் மனைவி பதில் சொல்வார். இப்படி பதில் சொன்னால் என்ன அர்த்தம்? இன்னிக்கி என்ன கெழமைன்னா நேத்திக்கி என்ன கெழமைன்னு திருப்பி கேக்கிறதா பதில்? எனக்குத் தெரியலைன்னு ஏன் சொல்லக் கூடாது?
ஒரு நாள் என் மனைவி ”இந்த புது சேலை நல்லாருக்கா?” என்று கேட்டார். “எனக்குத் தெரியலை” என்று மிகவும் நேர்மையாக பதில் சொன்னேன். அதற்கு யாராவது வருத்தப் படுவார்களா? “சேலை நல்லாருக்கு” என்று ‘சேலை’ என்ற சொல்லுக்கு ஒரு அழுத்தம் கொடுத்து பதில் சொன்னாலும் பிரச்னைதான் வருகிறது. இப்படி பண்ணினால் ஒரு மனுஷன் என்னதான் செய்வான்?
“ஏன், சேலை நல்லாருக்குன்னு அழுத்தம் குடுக்காம சாதாரணமா சொன்னா,என்ன?”
“அது பொய் ஆயிடாதா?”
“ஏன் ஒங்க கதை,கட்டுரை நல்லாருக்குன்னு அப்பப்ப நான் சொல்றேனே,அதெல்லாம்?”
@@@@@@@

இந்த கட்டுரை நன்றாக இருக்கிறதா? நிச்சயமாக ‘எனக்குத் தெரியாது’ என சொல்ல மாட்டேன். அழுத்தமாகவே ‘கட்டுரை’ நன்றாக நகைச் சுவையோடு வந்துள்ளது என்றுதான் சொல்ல முடியும்.