
அப்பாவின் நாற்காலியை
எடுத்துக்கொண்டுபோக…
பழையபொருட்கள் வாங்குபவர்கள்
வந்திருக்கிறார்கள்.
நல்ல கருந்தேக்கு …
பளபளப்பு இன்னும் மங்காமல்த்தான்
இருக்கிறது.
ஆனால் அதில் அப்பா உட்கார்ந்து
நான் பார்த்ததில்லை…
வாதநோய்தாக்கி படுக்கையில்தான்
அவர் இருப்பு நான் அறிந்தவரையில்.
பழையபொருள்கள் வாங்குபவர்கள்தான்
அடிக்கடி வந்துபோவார்கள்..
ஒவ்வொரு முறையும் அம்மாவின்
பெருமூச்சு பொருளுடன் கூடப்போகும்.
அப்பா இறந்து ஒருமாதமாகிவிட்டது.
அக்காவிற்கு வீட்டிலிருந்தே
கணினியில் வேலை.
அவளுக்காக இப்போது காலில்லாத
சக்கரம் வைத்த
நாற்காலி வந்திருக்கிறது.
ஆனால் அதுபோல் இதில் ஒரு
கம்பீரம் இல்லை.
ஆயினும் என்ன இனிமேல்
அதுதானே சோறுபோடப்போகிறது.
♦
