ஊர் அறிய உறக்கம் /எஸ் வி வேணுகோபாலன்

யாரும் அறியாமல்
தூங்குவது இல்லை,
பொதுவாக யாரும்

ஒரு வேளை
தன்னை மறந்து
உறங்குவோர் உண்டு

அடுத்தவர் தூங்கக்
காத்திருக்கின்றனர்
நல விரும்பிகளும்
கள்வர்களும் ஒன்றே போல்

போர்வையை உதறுவது போல்
உறக்கம் உதறுவோரின்
கனவுகள்
அஜாக்கிரதையாக
உதிர்ந்து போய் விடுகின்றன

எஞ்சிய உறக்கத்தை விட
மிஞ்சாமல் போன
கனவைத் தேடிக்
கொண்டிருப்பர் கண்கள் கசக்கி

எல்லோரும் பார்த்தும்
பாராதது போல் கடந்தும்
வாய்க்கிற உறக்கம்
வரம் –
வீட்டு நடையில்,
கடையில் அல்ல
புத்தகக் கடையில்
அல்லவே அல்ல!