
கப்பல் புறப்படுகிறது
விடை பெறுபவரும்
விடை கொடுப்பவரும்
வீசி அசைக்கிறார்
கைக்குட்டையை .
நானும் நிற்கிறேன்
கரையோரம்
நெரிசல் விலகி.
நானும் கைக்குட்டையை
உயர்த்தி வீசுகிறேன்.
கப்பலின் மேல்தளத்தில்
நிற்கும் யாரோ
நானறியா ஒரு
நபருக்கு
விடை கொடுக்க
கப்பல் சுமந்து செல்லும்
அக்கூட்டத்தில்
தன்னை வழியனுப்ப
யாருமில்லா யாரோ
முற்றிலும் அந்நியரான
என்னிடம்
விடை பெற முயற்சித்திருக்கலாம்
ஒரு வேளை.
