குற்றங்களின் காரிடார்/ கவிதைக்காரன் இளங்கோ

பராமரிப்பு பற்றியான சரியான கேள்வியை
உங்களிடம் கேட்க முடியவில்லை

பிரத்யேக முறைகளை நீங்கள் கையாண்டிருக்க முடியும்

அனுமதிக்கப்பட்ட உடல் வனப்பு
எல்லாவற்றையும் வழங்கிய உரிமை
என இரண்டுமே உங்களிடம் எப்போதுமே இருந்தது

அத்துமீறலுக்கான கடவு சீட்டை
கண்முன்னால் தான் கிழித்துப் போட்டீர்கள்
அதிலிருந்த சங்கேதக் குறிப்புகள்
பட்டர்ஃப்ளை எஃபெக்டாக பறந்து மாயமாகின

கொண்டாடப்பட்ட தருணங்கள் உங்களுடைய
கண்களில் சதா
மின்னிக்கொண்டே இருந்தது போக

சற்றைக்கு பிறகு
விசாரணைப் பாதையில் அவை உருண்டோடுகின்றன
கோலிகுண்டுகளாக