
சிதறிக்கிடக்கும் மனிதத்துகள்கள்
புகையும் அடுப்போடு புகையும் வீடுகள்
தந்தை போர்க்களத்தில் மடிய
தாயோடு வீட்டில் குண்டு மழையில்
நனையக் காத்திருக்கும் பிஞ்சுகள்
ஆஸ்பத்திரி வார்டுகளில் உயிர் விடப் போகும் நோயினின்றும்
பிழைத்த நோயாளிகள்
காலம் காலமாய் கடின உழைப்பில்
எழும்பிய கட்டடங்கள் நொடியில்
இடிந்து சிதறும் மனிதத்தின்
நம்பிக்கைகளோடே.
ஊழிக்கூத்து புரியும் பீரங்கிப்
படைகள்
யாரை மகிழ்த்த இந்த வான வேடிக்கை?
பட்டாசு எனப்பார்த்து மகிழுமுன்
மடியும் குழந்தைகள்
பிள்ளைகளை பலி வாங்கி
பெற்றோரை பிணமாக்கி
வீதியில் அலைய விடும்.
நெஞ்சு பொறுக்குதிலையே
இன்னும் எத்தனை யுத்தம்
இந்த பூமியில்?
பூகோளத்தின் ஒரு மூலையில்
யுத்தத்தின் கோர தாண்டவம்
நம் தொலை காட்சிப் பெட்டியில்
கண்முன்னே
காணப்பொறுக்காமல் சேனல்
மாற்றினால் விளையாட்டு
கண்டு களிக்கலாம்.கண்களின்
காட்சிகள் மாறினாலும்
மனம் ஓயாமல் கேவுகிறது.
யுத்தம் ஒரு நாள் முடிவுக்கு வரும்
படைகள் நாடு திரும்பும்
என்றாலும் போன உயிர்கள்
திரும்புமா? மனிதத்தின் மேல்
படிந்த கறைதான் மறையுமா?
