காணாமல் போனது……/எல்.ரகோத்தமன்

ஆசை மீன்கள்
கண்ணாடிப் பேழையில்
சுகமாய் நீந்தின!
மீன்கள் வளர வளர
பேழை கொள்ளவில்லை!
நீரின் ரகசியம்
அறியும் அவாவில்
அந்த மீன் மட்டும்
ஒரு நாள் கிணற்றிடம்
போய் தஞ்சம் கொண்டது!
நீர் உப்பு கரித்தது!
மிகவும் பிரயத்தனப்பட்டு
குளத்திற்குத்  தாவியது!
குளத்தில் மனிதன்
குப்பையைக் கொட்டினான்!
துர்நாற்றம் தாளாமல்
ஒரு நாள்
குளத்தைவிட்டு
ஏரிக்குக் குடிப்பெயர்ந்தது!
ஏரியில் இருந்தபடி
ஆற்றின் பிராவகத்தை
கனவு கண்டது!
அந்த மழைக்காலத்தில்
தொடர்ந்து கொட்டியது மழை!
உடைப்பெடுத்தது ஏரி!
மீனின்
கனவு பலித்தது!
ஆற்றோடு போய்
கலந்த பூரிப்பில்
புது நீராடலின் 
உற்சாகத்தில் திளைத்தபடியே
மெல்ல ஒரு நாள்
தன் இனத்தோடு
கடல் போய் சேர்கையில்
எங்கோ ஆழத்தில்
காணாமல் போன
தன் இருப்பிடங்களை
தேடிக் கொண்டிருக்கையில்
கண்ணாடிப் பேழையில்
தன் சடலத்தை தானே கண்டது!