
கை நிறைய விதைகள்
கலத்தில் தண்ணீர்
சிறிய கடப்பாரை
கொத்துக்கரண்டி
பெயர்கள் கூடத் தெரியவில்லை அவனுக்கு
அவள் சொல்லச் சொல்ல
ஆழக் குழிகள் தோண்டி
அன்போடு விதைகளை
மண்ணுக்குள் பத்திரப்படுத்தி
அளவாக நீரால் ஆசீர்வதித்து
அடுத்தடுத்த குழிகள்
அடுத்தடுத்த வகை விதைகள்
செம்மண் குழம்பு படிந்த
வலது கையால்
நெற்றி மேல்
முன் வந்து விழுந்த முடிகளை
இலேசாக ஒதுக்கிக் கொள்ளவும்
வெயிலில் மின்னும்
வண்ணக் கலவையில்
இன்னும் அழகாக இருந்தாள் அவள்
எல்லாம் முடிந்ததும்
மிஞ்சி இருந்தது ஒரு குழி
முதல் நாள் மாலையில்
போட்ட வெட்டிச் சண்டை ஒன்றின்
அபத்த மிச்சங்களை
அவள் பார்க்குமுன் அதில்
சட்டென்று கொட்டியொரு
கல்லெடுத்து வைத்தான்
பெருமூச்சோடு.
தோட்டவேலை முடியவும்
ஒரு நோட்டம் பார்த்தவள்
கடைசிக் குழிக்கு
நீர் தெளிக்க விட்டுப் போச்சோ
என்கவும்
அது வெறும் களை
முளைக்க வேண்டாம்
என்ற பதிலில்
அவனிடமிருந்து
பற்றிக் கொண்டது புன்னகை
அவளுக்கு !

களைக்களுக்கு கல் நட்ட
ஆழமான அன்பின் விதை! அருமை.
விதைகளை விதை
களைகளை புதை.
முளைகளை நனை
இனி ஏதுமில்லை வினை
அற்புதமான யுக்தி. இதையே பழக்கிக்கொண்டால் வேண்டாத ஈகோ பிரச்சினைகளை சுலபத்தில் அழித்து விடலாமே!!! என்னால் மறக்க முடியாத கவிதை இது.
அன்பு ஓர் அற்புதம். மிக அருமையான கவிதைகளும் ஒன்று.
அன்பின் விதைப்பாடு
பிரதிபலித்தது பண்பின் பெருமையை…
சிறப்பு சார்
அன்பை விதைக்கும்போது களைகள் தானே அமிழ்ந்து கருகித்தான்போகும்.
“அன்பின்விதைப்பாடு”- சிறப்பு.
நல்ல கவிதை. அருமையான கட்டுரை கவிதை.