அண்டா நிறைய அமுதம்/சாந்தமூர்த்தி

“உலகில் கோடிக்கணக்கான புத்தகங்கள் உள்ளன. ஆனால் இன்றுள்ள எல்லா புத்தகங்களையும் விட மேலோங்கி உயர்ந்து நிற்பது ‘மிர்தாதின் புத்தகம்’. நான் ஆயிரக் கணக்கான நூல்களைப் படித்திருக்கிறேன். எதுவுமே இதற்கு ஈடாகாது.” ஓஷோவின் இந்த வரிகளைப் படித்ததும் இந்த இப்பிறவியில் படித்தேயாக வேண்டிய புத்தகங்களின் பட்டியலில் பாய்ந்து அதை சேர்த்துக் கொண்டேன். ஆனால் அதை வாசிக்கும் முகூர்த்தம் இப்போதுதான் வாய்த்தது.
ஒருமுறை கூட படிக்கத் தேவையற்ற புத்தகங்கள் உண்டு. உண்மையில் அவைதான் பெரும் எண்ணிக்கையிலானவை. சில புத்தகங்களை திரும்பத் திரும்ப படிக்க வேண்டும். எந்த நூலையும் இரண்டாம் முறை கூட படிக்க ஓஷோ விரும்புவதில்லை. அது ஏற்கனவே சுவாசித்த காற்றையே மீண்டும் சுவாசிப்பது போல என்பார் அவர். ஆனால் இது பல்லாயிரம் முறை படிக்க வேண்டிய புத்தகம் என்கிறார். “மிர்தாதின் புத்தகம்” மூளையால் அல்ல; மனதாலும் அல்ல; இதயத்தால் படிக்க வேண்டிய புத்தகம் என்கிறார்.
லெபனானில் பிறந்த மிகெய்ல் நைமி எழுதிய நூல் “The Book of Mirdad“ அதைத் தமிழில் மொழி பெயர்த்தவர் கவிஞர் புவியரசு. தொண்ணூற்று எட்டு வயது வரை வாழ்ந்த நைமியின் நூலை, தொண்ணூற்று இரண்டு வயதாகும் புவியரசு மொழி பெயர்த்துள்ளார். இதை விட இளமையான நூலில்லை.
இனிப்பை வைத்துக் கொடுக்கும் இலையைப் போல் ஒரு மெல்லிய கதை. ஒரு இளைஞன் ஒரு செங்குத்தான மலையுச்சிக்கு செல்வதற்கு விரும்பி கிளம்புகிறான். அது ஆதி வெள்ளத்தின் போது உயிர்களின் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகளுடன் நோவாவின் கலம் ஒதுங்கிய சிகரம். ஒரு ஊன்றுகோல், சிறிது உணவுடன் வசதியான வழியைத் தவிர்த்து இன்னல் மிகுந்த பாதை வழி ஏறுகிறான். உணவு, அணிந்திருந்த உடைகள், ஊன்றுகோல் அனைதையும் இழந்து, உடலெங்கும் குருதி கசிய சிரமத்துடன் குளிர் கிள்ளும் சிகரத்தை அடைகிறான்.
அங்குள்ள மடத்தின் மூத்த துறவி சமாதம் மிர்தாத் என்ற அந்த இளைஞனை வேண்டா வெறுப்பாக சேர்த்துக் கொள்கிறார். இறுதிவரை அவருடைய வெறுப்பும், எதிர்ப்பும் குறையவில்லை. பின்னர் அங்கு நிகழும் உரைகளும், உரையாடல்களுமே பெரும்பகுதி. இது உருவகக் கதை.
உரையாடல்களில் வாழ்வின் அனைத்து முக்கிய பிரச்னைகளும் ஆழமாக விவாதிக்கப் படுகின்றன. மிர்தாதின் விளக்கங்கள் ஞானம் முதிர்ந்த கனிகள். தேடலும், பசியும் உள்ளவர்களுக்கு வழங்கப்பட காத்திருப்பவை. மிர்தாத் பிளவுண்ட மனமே பல பிரச்னைகளுக்கும் காரணம் என்கிறார். அன்பும், புரிதலுமே தீர்வு என்று நிறுவுகிறார்.
இருமை கிடையாது. அது மனிதன் தன் அறியாமையால் உருவாக்கிக் கொண்டது. நன்மை தீமை என்று பிரிப்பதே துன்பத்துக்குக் காரணம். தீமையாகிய களைகளைப் பிடுங்கி எறிய முயற்சிக்க வேண்டாம் என்கிறார். ஏனென்றால் களையும் கூட நல்ல எருவாகும். கடவுள் – மனிதன் என்னும் இருமை கூட தவறு. இங்கு உள்ளதெல்லாம் மனிதக் கடவுள், அல்லது கடவுள் மனிதன் என்பதே பொருத்தமாக இருக்கும். நேரானது கோணலின் சகோதரன் என்பதை சுட்டிக் காட்டுகிறார்.
மக்களை ஆள்வோர் மமதை கொள்ளத் தேவையில்லை. உண்மையில் அவர்கள் மக்களால் ஆளப் படுகின்றனர். மக்களோ தம்மை ஏமாற்றுகிறவர்களையே தொடர்ந்து நம்பி ஏமாந்து கொண்டே போகிறார்கள்.. அவர்கள் தங்கள் எஜமானரின் தத்துவத்தை சந்தேகிப்பதேயில்லை. அதை உண்மை என்று கருதி ஏமாறுகிறார்கள்.
மிர்தாத் மக்களுக்கு தவறான வாக்குறுதிகளை அளிக்கவில்லை. ”நல்லவர்களுக்கு விற்பதற்காக என்னிடம் சொர்க்கம் எதுவுமில்லை. தீயவர்களைப் பயமுறுத்துவதற்காக நரகமும் இல்லை.” என்று தெளிவாக பிரகடனம் செய்கிறார். ஓஷோ எல்லா மதவாதிகள் மேலும் சுமத்தும் குற்றச்சாட்டுகளில் முக்கியமானது இது. சொர்க்கம் கிடைத்து விட்டாலும் நாம் அதை சாமர்த்தியமாக விற்று அதற்கு ஈடாக பூமி வாங்கிக் கொள்வோம் என்று மிர்தாத் கிண்டல் செய்கிறார்.
எல்லாவற்றையும் பெறுதல் அல்லது எல்லவற்றையும் துறத்தல் என்று மனிதன் முன் இரண்டு வாய்ப்புகள் மட்டுமே வைக்கப் பட்டுள்ளன. இதில் நடு வழி என்பதே இல்லை. சிறிதளவு துறந்து விட்டு சிலவற்றை மட்டும் பெற்றுக் கொள்கிறேனே என்று பேரம் பேசக் கூடாது. ஒளியின் சிறகுகளையும், ஈயத்தின் கால்களையும் பெற்றிருப்பது நரகத்தை விட படு மோசம் என்று எச்சரிக்கிறார்.
மனிதர்களுக்கு லாபத்தின் மீதே எப்போதும் நாட்டம். ஈடுபடும் எல்லாமே ஒருவகை வியாபாரம்தான். மிர்தாத் நமது லாபங்கள் என்று நாம் நினைப்பவை எல்லாம் உண்மையில் நட்டங்களே என்கிறார். நாம் இழப்பது எதை என்று நாம் அறிவதில்லை. நாம் இந்த சில்லறை லாபங்களுக்காக அதிகம் விலை கொடுத்து வருகிறோம். எல்லாவற்றையும் பணத்தால் சரி செய்து விடலாம் என்று நினைக்கிறோம். ஆனால் மனிதனின் இதயத்துக்குள் செல்லாமல் இறைவனின் இதயத்துக்குள் எவ்வாறு செல்வீர்கள் என்று அவர் கேட்கிறார்.
இன்றைய வாழ்வின் சிக்கல்களுக்கு ஒரு காரணம் நம் கட்டற்ற நுகர்வு வெறி. தேவை இருக்கிறதோ, இல்லையோ கண்ணில் படுபவற்றை எல்லாம், கவர்ச்சியான விளம்பரங்கள் பரிந்துரை செய்வதை எல்லாம் வாங்கிக் குவிக்கிறோம். பொருட்களுக்கு அடிமையாகிறோம். மிர்தாத் “குறைவான உடைமை, குறைவான அடிமை” என்கிறார். அடிமையாதல் மட்டுமல்ல, அடிமைப் படுத்துதலும் அறிவீனமே. ஏனென்றால், வேலைக்காரன், எஜமானனின் எஜமான். ஒரு சிறைவாசி, சிறைக் காவலனையும் உள்ளே கொண்டு வந்து விடுகிறான்.
நாம் மேற்கொள்ளும் எல்லா முயற்சிகளும் வெற்றி காண்பதில்லை. அதற்காக நாம் வருந்தத் தேவையில்லை. ஆசிரியர்கள் கூட்டத்தில் “நாம் விதைக்கும் விதைகள் எல்லாம் விருட்சங்கள் ஆகி விடுவதில்லை. சோர்வில்லாமல் தொடர்ந்து விதைத்துக் கொண்டே இருப்பது நம் கடமை” என்று நான் சொல்வதுண்டு. “எந்த முயற்சியும் வீணாகி விடும் என்று நினைக்காதீர்கள். சில விதைகள் பூமிக்குள் பல்லாண்டுகள் புதைந்து கிடக்கும். சாதகமான பருவம் வந்ததும் சட்டென முளை விடும்” என்று மிர்தாத் உறுதியளிக்கிறார்.
இவை போன்ற எத்தனை அற்புத வரிகள்! காதல் பற்றி, திருமணம் பற்றி, பிரம்மச்சர்யம் பற்றி, வட்டி பற்றி, ஊனுணவு பற்றி… இந்நூலில் சொல்லப் படாத செய்திகளே இல்லை. இதை ஆன்மீக கலைக் களஞ்சியம் என்று சொல்லலாம்.
உள்ளங்கையில் ஊற்றிக் கொண்ட தேனை நக்கும்போது நிறைய சந்தேகங்கள் மனதை நெருடுகின்றன. இது ஜீரணமாகுமா? HbA1C பரிசோதனையின் (ரத்தத்தில் மூன்று மாத சக்கரையின் சராசரி அளவு காட்டும் டெஸ்ட்) ரிசல்ட் B.P. அளவை எகிற வைக்குமா? என் முன்னால் ஒரு அண்டா நிறைய அமுதத்தை வைத்தால் எப்படியிருக்கும்? இந்த நூலைப் படித்த பின் நான் அப்படித்தான் திகைத்துப் போனேன்.
இந்த நூலை மீண்டும் மீண்டும் பயில வேண்டும்.