தாய்க் குருவித் தவிப்பு /நாகேந்திர பாரதி

இலைக்கூட்ட இருட்டுக்குள்
ஊடுருவும் ஒளிக்கீற்று
தலையாட்டிக் கீச்சிட்டு
தாய்க்குருவி நெளிப்பு விடும்

இறக்கைக்குள் குஞ்சுகளை
இரவெல்லாம் வருடியதால்
பறக்கின்ற முயற்சிக்கு
முறுக்குகின்ற பயிற்சியது

குஞ்சுகளின் வாய்ச்சிவப்பில்
பசி வழியப் பார்த்துவிட்டு
கூட்டத்து குருவிகளைக்
கூப்பிட்டுச் சிறகடிக்கும்

இலைமோதிப் பறக்கின்ற
ஏராளச் சிறகுகளின்
சளசளப்பில் சலித்தபடி
தலையாட்டும் மரக்கூட்டம்

பக்கத்து வயல் வெளியில்
பரவிக் கிடக்கின்ற
தானியத்தைக் குறிவைத்துத்
தானாக வழி போகும்

வேட்டைக் காரர்களின்
தோட்டாக்குத் தலை தப்பி
காட்டுக் கழுகுகளின்
இறக்கைக்கு அடிதப்பி

வயக்காட்டு நெல் மணியை
வாய்க்குள் அதக்கிட்டு
பயக்காட்டு வானத்தில்
பார்த்துப் பறந்து வரும்

குஞ்சுகளின் வாய்க்குள்ளே
முத்தமிட்டு ஊட்டுகையில்
நெஞ்சுக்குள் நினைப்பு வரும்
‘நாளைக்குப் பொழைப்போமா ‘

One Comment on “தாய்க் குருவித் தவிப்பு /நாகேந்திர பாரதி”

  1. பறவைகளின் வாழ்வை கூர்ந்து அவதானித்து
    அவற்றின் அன்றாட பிரச்னைகளையும் அவற்றை இந்தக் குருவிகள் சந்திக்கும் விதத்தையும் அனுதாபத்துடனும் ஆழ்ந்த புரிதலோடும் வர்ணிக்கும் கவிதை. ஒரு பறவைப்ரியரால்தான் இப்படி அருமையாக எழுத முடியும்.
    அவர் மேன்மேலும் பறவைகளைப் பற்றி எழுத
    வாழ்த்துக்கள்!

Comments are closed.