
இரவுகளைக் கடப்பது எவ்வளவு
பெரிய சாகசமாய் மாறிவிட்டது
விட்டத்தை விட்டேத்தியாய் பார்த்தோமா
விட்டு விடுதலையாய் உறங்கினோமா
என்றில்லை எந்த இரவும்
சூரியகாந்தி விதைகளைத் துப்பாக்கி
ஏந்திய எதிரி நாட்டு சிப்பாயிடம்
கொடுத்த உக்ரேனிய பெண்மணி
என்ன சொன்னாள் அவனிடம்?
ஏவுகணைத் தாக்குதலில் சிதிலமாகிவிட்ட
அடுக்கக அபார்ட்மெண்ட் அடுக்களையில்
காபி தயாரிக்கும் பெண்மணி வழக்கம் போல
காப்பிக்கு இரண்டு தேக்கரண்டி சீனி
போட்டாளா இல்லையா?
குண்டடிப்பட்டு அனாதையாய் இறந்து கிடக்கும்
உடலுக்கு அலங்கார பூ வேலைப்பாடு ஜமுக்காளத்தைப்
போர்த்தும் இன்னொருவன் என்ன நினைக்கிறான்?
குண்டு வீச்சுக்கு பயந்து தப்பி
நகர சுரங்கப்பாதையில் கூட்டத்தோடு
கூட்டமாய் தரையில் உட்கார்ந்து
கைபேசியில் என்ன இசை கேட்கிறான் இளைஞன்?
தப்பியோடும் கூட்ட நெரிசலில்
ரயில் ஜன்னல் கண்ணாடியில் முகம்
அழுத்தி அழும் குழந்தையின்
பனிக்குல்லா மேலிருக்கும் கம்பளிப்பந்து
ஏன் விசிறி விசிறி வர்ணஜாலம் காட்டுகிறது?
தூக்கமின்மையின் கேள்விகளால்
புறக்கணிக்க நினைத்ததை
எழுதிவிட்டாய் வருந்துகிறாய்

தங்கள் மீது
திணிக்கப்பட்ட போரினால்
துன்புறும் அப்பாவி மக்களின் அவல நிலை கவிஞரின் மனதை பெரிதும் பாதித்திருக்கிறது. விளைவு தூக்கமின்மையும்
இந்தக் கேள்வி களும்.
நெஞ்சில் ஈரமுடையவர்கள்
கவிஞர்கள். எங்கோ நடக்கும் போர், நமக்கென்ன என்ன என்று அலட்சியப்படுத்த முடியாதவர்கள். போரில் மனிதர் படும் அவதிகளும் கவிஞர்கள் மனதளவில் படும் துன்பத்தையும் சித்தரிக்கும் நல்ல கவிதை.