தலையணை மந்திரம்/ப.மதியழகன்

“ஏண்டா ஆபீசுக்கு அரை நாள் கூட லீவு போட மாட்ட மூணு மணிக்கே வந்து நிக்கிற?” என்றாள் விஜயம்
சுரேஷ்க்கு கல்யாணமாகி ஒரு வாரம் தான் ஆகியிருந்தது. அம்மாவிடமிருந்து இந்தக் கேள்வி வரும் என்று எதிர்பார்த்து இருந்தான் என்றாலும் சினிமா என்றாள் முகம் சுழிப்பாள் என்று ‘ராஜி கோவிலுக்கு போகணும்னா அதான்’ என்றான்.
“கல்யாணத்துக்கு பிறகு நடக்கிறதெல்லாம் புதுசாத்தாண்டா இருக்கு” என்றாள் விஜயம்.
ராஜி கருநீலப்புடவை உடுத்திக் கொள்ள மேட்ச்சாக பிளவுஸ். இதுவும் சுரேஷ் செலக்சன் தான். பைக்கை உதைத்து ஸ்டார்ட் செய்தான். வண்டி கணேஷ் தியேட்டர் நோக்கிப் பறந்தது.
படம் முடிந்து கூட்டம் வெளியேறிக் கொண்டிருந்தது. “படம் போர் இல்ல” என்றான் சுரேஷ். “நான் எதிர்பார்த்தது போல இல்ல” என்றாள் ராஜி. “நான் பாதில தூங்கிட்டன்னா பாரேன்” என்றான் சுரேஷ். “சரி இப்ப நாம எங்கப் போறோம்” என்று விசாரித்தாள் ராஜி. “ராஜி நீ பீச் பார்த்தது இல்லையே. மணல்திட்டுல உட்கார்ந்து கடல் காத்து வாங்குறது எவ்வளவு சுகம் தெரியுமா? கோடி கொட்டிக் கொடுத்தாலும் அது கிடைக்காது” என்றான் முகத்தில் பரவசத்துடன் சுரேஷ்.
ராஜி அலையையே பார்த்துக் கொண்டிருந்தாள் அவன் மெல்ல தன் கவனத்தை ராஜி பக்கம் திருப்பினான். “ராஜி அலைல ஆண் அலை பெண் அலைன்னு இருக்காம். ஆளை ஆழத்துக்கு இழுத்துட்டுப் போறது பெண் அலைதானாம்” என்றான். ராஜி பார்வையை வேறு திசையில் திருப்பினாள். அங்கு ஒரு பெண் கைக்குழந்தையுடன் அலை வருமென்று காத்திருந்தாள். தொலைவில் கல்லூரிப் பெண்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். சுரேஷ் அவளுடைய கவனத்தை தன் பக்கம் திருப்பினான். “ராஜி கடலப் பாத்தா நாம குழந்தையாயிடறோம் இப்பவே ஓடிப் போய் கிளிஞ்சல் பொறுக்குலாம்னு இருக்கு என்றான்.”
சூரியன் மேற்கில் மறைய இருள் கவிந்தது. இருவரும் கடலுக்கு விடை கொடுத்து கிளம்பினார்கள். “ராஜி ஆவலுடன் இப்ப எங்க போறோம்” என்றாள். “ராஜி முதல் முறையா வெளியில வந்திருக்கோம் வெறுங்கையோட திரும்பக் கூடாது என்ன வேணும் கேளு” என்றான் சுரேஷ். “உங்க விருப்பம்” என்று ராஜி ஒதுங்கிக் கொண்டாள். ராஜியை ஜவுளிக்கடைக்கு அழைத்துச் சென்றான். புடவையை கடைவிரித்தார்கள். ராஜியால் எதை எடுப்பதென்று முடிவுக்கு வர முடியவில்லை. ‘நானே செலக்ட் செய்கிறேன்’ என்றான் சுரேஷ். “ராஜி இது நல்லாயிருக்குல்ல” என்றான். ராஜி விலையைக் கேட்டாள் கடைப் பையன் பனிரெண்டாயிரம் என்றான். ‘ரொம்ப காஸ்ட்லி நாம வேற விலை கம்மியா பார்ப்போமே’ என்றாள் ராஜி. ‘நான் முதல்முதலா ஆசையா வாங்கித்தர்றேன் வாங்கிக்கோ’ என்றான் ராஜி. ‘இதுவே விலை கம்மிதான் சும்மாயிரு’ என்றான் சுரேஷ். அப்படியே நகைக்கடையில் காலுக்கு வெள்ளிக் கொலுசு வாங்கிக் கொண்டார்கள்.
“ராஜி இனிமே போய் அம்மாவ தொந்தரவு செய்வானேன் ஹோட்டல்ல சாப்பிட்டுட்டு போயிடுவோம் என்ன சொல்ற” என்றான் சுரேஷ். ராஜி தலையசைத்தாள். ஹோட்டல் வசந்தம் மினிஹாலில் இருவரும் அமர்ந்திருந்தனர். மெளத்தைக் கலைக்க “ராஜி உனக்குப் பிடிச்சதை நான் ஆர்டர் பண்றேன் எனக்குப் பிடிச்சதை நீ ஆர்டர் பண்ணு பார்ப்போம்” என்றான். ஆர்டர் செய்தார்கள் டிபன் வந்தது. சாப்பிட்டுவிட்டு உணவகத்திலிருந்து கிளம்பும்போது மணி ஒன்பதரை ஆகியிருந்தது. வீடு வந்து சேர்ந்து சீக்கிரமே உறங்கிப் போனார்கள்.
ராஜி எழுந்ததும் கடிகாரத்தைப் பார்த்தாள். மணி ஏழரை காட்டியது. அடுக்களைக்கு வந்தாள் “பால் காய்ச்சியாச்சி காபி எடுத்துக்கோடி அம்மா” என்றாள் மாமியார் விஜயம். காபியை டம்ளரில் ஊற்றிக் கொண்டாள். கண்கள் சுரேஷைத் தேடின. காலிங் பெல் அடித்தது. போய் திறந்தாள். சுரேஷ் கையில் டிபனோடு வந்து நின்று கொண்டிருந்தான். “என்னத்துக்கு இதெல்லாம்” என்றாள். “ராஜி எப்பவுமே வீட்டுச் சாப்பாடு தானே சாப்பிடறோம் ஒருநாள் தானே” என்றான் சுரேஷ்.
“ராஜி நான் கிளம்பறேன் ஆபிஸுக்கு டைம் ஆயிடிச்சி” என விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டான் சுரேஷ். “வண்டில போகும்போது கவனமா இருங்க என அக்கறையுடன் சொல்லி வழிஅனுப்பினாள்” ராஜி. அவன் உருவம் மறையும் வரை வாசலில் நின்று பார்த்துக் கொண்டிருந்தாள். மணி ஐந்தரை ஆகியது. மெத்தையில் படுத்துக் கொண்டிருந்தாள் ராஜி அறைக் கதவினைத் திறந்துகொண்டு உள்ளே வந்தான் சுரேஷ். “ராஜி ஏன் டல்லா இருக்க என்ன விஷயம்” என்றான். “ஒண்ணுமில்ல” என அலுத்துக் கொண்டாள் ராஜி. “அப்ப என்னவோ இருக்குன்னு அர்த்தம்” என்றான் சுரேஷ். “அம்மா ஏதாச்சும் சொன்னாளா?” என்றான்.
ஆமாம் என்று தலையசைத்தாள் ராஜி. “என்ன சொன்னா?” என்றான் சுரேஷ். “நானா உங்ககிட்ட பனிரெண்டாயிரத்துக்கு புடவை வேணும்னு கேட்டேன். இல்ல புது கொலுசு கேட்டேனா? அவங்க செண்பகம் மாமிகிட்ட பேசிகிட்டு இருந்த எனக்கும் காதில் விழுந்திச்சி நான் ஒண்ணும் செவிடில்லையே.” “என்ன சொன்னா?” என்றான் சுரேஷ். “சுரேஷ் ரொம்ப மாறிட்டான் முன்ன மாதிரி இல்ல. காசுல கறாரா இருப்பான் இப்ப தண்ணி மாதிரி செலவு செய்யறான். பனிரெண்டாயிரத்துக்கு புடவையும் புது கொலுசும் இப்ப தேவையா? அவன் தான் கண்முண்ணு தெரியாம அலையறான்னா இவளுமா? எங்கிட்ட கூட சொல்லாம சினிமா, பீச், பார்க்குன்னு சுத்தறா
ஹோட்டல் பக்கமே தலைவச்சி படுக்க மாட்டான் இப்ப வாரத்துல அஞ்சு நாள் ஹோட்டல் சாப்பாடு தான் என்னத்த சொல்றது. என்ன தான் நடக்குது இந்த வீட்லன்னு தெரியலை. வந்த ஒரு வாரத்துல புருஷனை முந்தானைல முடிஞ்சுவச்சிகிட்டான்னு” சொல்லி புலம்பிகிட்டு இருக்காங்க. “இது எல்லா அம்மாக்களும் செய்யறது தான் தன்னையே சுத்திக்கிட்டு இருந்துட்டு இப்ப கொடி வேற மரத்துல போய் படரும் போது அப்படிதான் புலம்புவா. நீ படிச்சவ இதுக்கெல்லாம் போயா மனசு ஒடியறது. ஒட்டுக் கேட்டியா ராஜி?” “இல்ல அடுக்களைல இருக்கும்போது காதுல விழுந்திச்சி. அப்ப இந்தக் காதுல வாங்கி அந்தக் காதுல உட்ற வேண்டியதுதான பெரிசுபடுத்தாம. அம்மாகிட்ட நான் கேட்கிறேன். ராஜி மேல என்ன தப்பு இருக்குன்னு நிக்க வச்சிக் கேட்கிறேன்.”
“அம்மா ஏன் நேத்திலேந்து ஒரு மாதிரி இருக்க சரியாக்கூட சாப்பிடல போல இருக்கு. யார் மேல கோபம்” என்றான். “என்னடா ஒண்ணும் தெரியாத மாதிரி நடிக்கிறியா உன்னைப் பெத்து வளத்தவடா நான். ராஜி உங்கிட்ட பத்த வைக்கலை.” “இல்லம்மா ராஜி தலைவலின்னா மாத்திரை கொடுத்தேன் தூங்கிட்டா நான் புக் படிச்சிட்டு இருந்தேன் டைம் போனதே தெரியலை” என்றான் சுரேஷ். “என்னடா சொல்ற ஒண்ணும் சொல்லலை”. “இல்லம்மா ஒண்ணும் சொல்லலையே”
“அவ அடுக்களைல இருக்கறது தெரியாம செண்பகம் மாமிகிட்ட பேசிட்டேண்டா. என்னமா சீறிகிட்டு சண்டைக்கு வர்றா. கொலுசை கழட்டி வைச்சதுமில்லாமல் தாலியை அடமானம் வச்சாவது பனிரெண்டாயிரத்தை தூக்கி வீசறேங்கறா எனக்கு பக்குன்னு ஆயிடிச்சி. வீட்டில நான் வாயே திறக்கக்கூடாதுன்னா எப்படிடா?” “அப்படியா சொன்னா? அவள இப்பவே தட்டி வைக்கணும் கொஞ்சம் இடம் கொடுத்தா தலைல ஏறிடுவா” என்றான் சுரேஷ். “அவ உங்கிட்ட ஒண்ணும் சொல்லலையா வந்தோன்னயே பத்த வச்சிடுவான்னு நினைச்சேன். பரவாயில்லை நான் நினைச்சது மாதிரி இல்ல ராஜி நல்ல பொண்ணுடா. அவள என்னோட மக மாதிரி பாத்து இருக்கணும் நான் தப்புபண்ணிட்டேன்!” என்று விஜயம் தன்னையே நொந்து கொண்டாள்.
ராஜி பாத்ரூமிலிருந்து வெளியே வந்தாள். “ராஜி அம்மாவ உண்டு இல்லைன்னு ஆக்கிட்டேன். கிழவி அப்படியே ஆடிப் போய்ட்டானா பாரேன். ஆனா நீ ஒரு பொய் சொல்லிட்ட ராஜி”. “என்ன பொய் சொன்னேன்” என்றாள் அப்பாவியாக ராஜி. “தாலியை வித்தாவது பணத்தைக் கொடுப்பேன்னு சொன்னதா சொன்னியே அதுதான்.” “நான் அப்படிதான் சொன்னேன் நல்லா ஞாபகம் இருக்கு.” “அம்மா அதப்பத்தி ஒரு வார்த்தைக் கூட பேசலையே.” “அப்படியா நிசமாவா” என்றாள் ராஜி. “மறந்திருப்பாங்களா?” என்றான் சுரேஷ். “மறக்கலை பிரச்சனை வரும்னு தான் சொல்லாம விட்டிருக்காங்க. உண்மைலேயே அவங்களுக்கு பெரிய மனசுதான் நான் தான் அவசரப்பட்டு தவறா புரிஞ்சிகிட்டேன்.”
“வந்ததும் வராததுமா உங்ககிட்ட வத்தி வச்சிட்டேன் ரொம்ப திட்டித் தீர்த்துதிருப்பீங்களே” என்றாள் ராஜி. “ஆமா அப்படியே சிலையாகிட்டாங்கன்னு பாத்துக்க வாயே திறக்கலை.” “ஐயோ நான்தான் தப்பு பண்ணிட்டேன் எம்மேலதான் தப்பு. அவசரப்பட்டிருக்கக் கூடாது. அவங்க மனசை புரிஞ்சிக்கலை. இதையே என்னோட அம்மா சொல்லியிருந்தா பொறுத்துகிட்டுப் போயிருப்பேன் இல்ல அதமாதிரி நினைச்சிருக்கணும். மாமியாரா நினைச்சாதான் குத்தம் குறை தோணுது இனிமே அம்மாவா நினைச்சிக்கிறேன்” என்றாள் சந்தோஷத்துடன் ராஜி. ‘நாரதர் கலகம் நன்மையில் முடிந்தது’ என உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான் சுரேஷ்.